தமிழ் திரைப்பட உலகில் ஒரு வருடத்திற்கு தோராயமாக 300 திரைப்படங்கள் வெளியாகின்றன. திரைக்கு முன், திரைக்குப் பின் என ஒரு திரைப்படம் உருவாவதற்கு உழைப்பைக் கொட்டுபவர்கள் ஏராளம். ஆனால், திரைத்துறையில் ஒரு பெண் சாதிப்பது என்பது இன்று வரை பெரும் போராட்டமாகத் தான் இருக்கிறது.
சமீப காலமாகத் தான் நாயகிகள், துணை நடிகைகளாக மட்டும் திரைத்துறைக்கு தேவையாய் இருந்த பெண்கள், திரைக்கு பின்னாலும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியிருக்கின்றனர். ஆனால், அது ஒன்றும் சாதாரணமான விஷயம் அல்ல. முழுவதும் கனவுகளுடன் கூடிய ஏராளமான ஆண்கள் நிறைந்த ஒரு துறையில், ஒரு பெண் நிற்க வேண்டும்.
அவளுக்கு வீட்டிலும் பெரிதாக ஆதரவு இருக்காது. நண்பர்களும் பயமூட்டுவார்கள். சினிமாவில் இருக்கும் பெண் என்றாலே தவறான அபிப்ராயங்கள் முத்திரையாகக் குத்தப்படும். இத்தனையும் தாண்டித் தான் இன்று திரைத்துறையில் பெண்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். அதன் பலனாக இன்று, பெண்களுக்கு முக்கியத்துவம் தரும், பெண்ணியம் பேசும் திரைப்படங்கள் பரவலாக வரத் தொடங்கியிருக்கின்றன.
1980-களில் பெண்ணியம்
ஆனால், இன்று பெரிதாக விவாதங்களுக்கு உள்ளாகும் பெண்ணியம் சார்ந்த விஷயங்களை 1980 – களிலேயே, பெண்களின் உள்ளத்து உணர்வுகளையும், ஆசைகளையும், ஏக்கங்களையும், அவர்களின் சமூகக் கோபங்களையும் பெண்களைவிட மிகச் சிறப்பாக திரையில் வெளிப்படுத்தி வெற்றி கண்டவர் இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர்.
இரு கோடுகளில் செளகார் ஜானகி, அவள் ஒரு தொடர்கதையில் கவிதா, அபூர்வராகங்களில் பைரவி, வறுமையின் நிறம் சிவப்பில் ஸ்ரீ தேவி, நினைத்தாலே இனிக்கும் சோனா, சிந்துபைரவியில் சிந்து, ‘மனதில் உறுதி வேண்டும்’ நந்தினி, ‘புதுப்புது அர்த்தங்கள் கீதா என பெண்களுக்கு கனமாக கதாபாத்திரங்களை உருவாக்கி தமிழ்ச் சினிமாவில் கதாநாயகிகளுக்காகவும் படம் 100 நாள் ஓடும் என்ற உண்மையை வெளிச்சம் போட்டு காட்டியவர்.
அதன் பிறகு காட்சிகள் மாறத் தொடங்கின. அவ்வப்போது அத்தி பூத்தாற் போல பெண்களை மையப்படுத்தி சில திரைப்படங்கள் வெளிவந்தாலும், தமிழ் திரையுலகம் முழுதாக கதாநாயகர்கள் பக்கம் சாய்ந்திருந்தது. காட்சிப் பொருளாக மட்டுமே பெண்கள் திரைப்படங்களில் வந்து சென்றனர். படத்தில் நான்கு பாடல்கள் வேண்டும். அதற்கு நாயகனுடன் நடனமாட ஒரு பெண் வேண்டும். கதைக்கு தேவைப்பட்டால் நாயகன் சோர்ந்திருக்கும் ஒரு காட்சியில் நாயகி வந்து நம்பிக்கையூட்டலாம் என்ற ரீதியில் தான் தமிழ் திரைப்படங்கள் இருந்தன.
ஆனால், இப்போது திரையுலகம் புது பாதையில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது. பெண்கள் இயக்குனர்களாக இருக்கிறார்கள். தனக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களில் தான் நடிப்பேன் என்று நாயகிகள் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். திருமணத்திற்குப் பின் நடிக்க மாட்டேன் என்று எவரும் சொல்வதில்லை. பெண்களை மட்டுமே மையப்படுத்தி, அவர்கள் சார்ந்த பிரச்சனைகளை பிரதிபலிக்கும் திரைப்படங்கள் வரத் தொடங்கியிருக்கின்றன. அவ்வாறு சமீபமாக பெண்களை மையப்படுத்திய சில திரைப்படங்களை இப்போது பார்க்கலாம்.
1. இறைவி
வெளியான சமயத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பிய திரைப்படம் இறைவி. “மனிதன் என்ற சொல்லுக்குள்ளே அடங்காத பெண்ணே. மனிதி வெளியே வா!” என்ற வரிகளிலேயே பெண்ணியம் பேசியது இறைவி. மூன்று வெவ்வேறு சூழல்களில் வாழும் பெண்களை, அவர்கள் சந்திக்கும் இன்னல்களை, அதற்குப் பின்னதான அவர்களின் முடிவுகளை இயல்பாகக் காட்சிப்படுத்தியது. இறைவிக்கு பின்னர் தான் பரவலாக பெண்ணியத் திரைப்படங்கள் வெளிவரத் தொடங்கின. அதிலும் 2017-ம் வருடம் தமிழ்த் திரையுலகில் பெண்களுக்கான வருடம் என்றே சொல்லலாம்.
2. அறம்
அறம் திரைப்படம் முழுதாக நாயகியை மட்டுமே மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் வரும் மாவட்ட ஆட்சியர் கதாபாத்திரத்தில், ஒரு ஆணைக் கூட நடிக்க வைத்திருக்கலாம். ஆனால், பெண்ணை நடிக்க வைத்தனர். அறம் திரைப்படத்தின் பெரும் பலமே அது தான். ஆனால், நாயகியை மட்டும் நம்பி, திரைப்படம் எடுக்கத் துணியும் இயக்குநர்களோ அல்லது தயாரிப்பாளர்களோ கதாநாயகனை மட்டும் நம்பி கதாநாயகியில்லாமல் படம் எடுக்கத் தயாராக இல்லை. சமீபத்திய எடுத்துக்காட்டு ‘தீரன்’ திரைப்படம்.
3. 36 வயதினிலே
“பெண்கள் காணும் கனவுகளின் காலாவதி தேதியை யார் முடிவு செய்கிறார்கள்?” என்ற கேள்வியைச் சுற்றி பிணையப் பட்டிருக்கும் கதையை, தனி ஒருவராய் சுமந்திருப்பார் ஜோதிகா. திருமணத்திற்குப் பின்னான பெண்களின் உலகம் எப்படி தலைகீழாய் மாறி விடுகிறது. அவளின் திறமைகளை எடுத்துச் சொல்லவே அவளுக்கு மூன்றாம் மனிதரின் உதவி தேவைப்படுகிறது. வான் கொள்ளா கனவு கண்டவள், ஒரு குவளைக்குள் தன்னைச் சுருக்கிக் கொள்கிறாள். அப்போதும் குடும்பத்தாரால் மதிக்கப்படாத போது, பெண்கள் ஒன்று மிகவும் உடைந்து போவார்கள் அல்லது 36 வயதினிலே நாயகி வசந்தி போல மாறுவார்கள்.
4. மகளிர் மட்டும்
36 வயதினிலே திரைப்படத்தின் பெரும் வெற்றிக்குப் பின்னர், மீண்டும் ஜோதிகா நடிப்பில் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் மகளிர் மட்டும். தன் வருங்கால மாமியாரின் பால்ய பருவத்து தோழிகளைச் சந்திக்க அழைத்துச் செல்கிறார் பிரபாவதி. ஒவ்வொருவரும் ஒவ்வொரு இக்கட்டான சூழலில் இருக்க, அனைவரையும் ஒன்று சேர்த்து மகிழ்விக்கிறார். பெண்களின் மனநிலையில் நேர்ந்திருக்கும் தலைமுறை இடைவெளியை அப்பட்டமாகக் காட்சிப் படுத்தியிருப்பார் இயக்குனர். பிரபாவதி இந்தத் தலைமுறை பெண்களின் சுதந்திரம். அவரின் மாமியாரும் அவரது தோழிகளும் வேறு வழியின்றி அடங்கிப்போன, சென்ற தலைமுறையின் சூழ்நிலைக் கைதிகள்.
5. அருவி
எய்ட்ஸ் நோய் கண்டறியப்பட்டு முப்பதாண்டுகள் ஆகியும் பெண்கள் முறை தவறி நடக்கவில்லை என்றாலும் எய்ட்ஸ் நோய் தாக்கக்கூடும் என்பதை இந்தியர்கள் நம்ப மறுக்கின்றனர். அப்படி ஒரு சூழ்நிலையில் உள்ள கதாநாயகியை, அவரது பெற்றோர் வீட்டை விட்டு துரத்துகின்றனர். அவர் மற்றவர்களால் எவ்வாறு நடத்தப்படுகிறார் என்பதை அருவி திரைப்படத்தைப் பார்த்தால் புரிந்துகொள்ள முடியும்.
அருவி என்கிற பெண் தனியாக வாழவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாவது குறித்த ஒரு தமிழ் திரைப்படம்தான் அருவி. பாலியல் கொடுமை புரியும் காமுகர்கள் எவ்வாறு ஒவ்வொரு மூலையிலும் பதுங்கியுள்ளார்கள் என்பதைக் காட்டுகிறது இந்தத் திரைப்படம். அத்துடன் காமுகர்கள் அனைவரையும் எப்போதும் அரக்கர்கள் என முத்திரை குத்தவேண்டுமா என்கிற கேள்வியையும் நம் மனதில் எழுப்புகிறது.
6. தரமணி
இறைவியைப் போலவே தரமணியும் பெரும் சர்ச்சைகளையும், பாராட்டுகளையும் ஒருங்கே பெற்ற திரைப்படம். சுற்றி ஆண் முதலைகள் சூழ்ந்திருக்கும் கார்ப்பரேட் அகழிக்குள் சிக்கித் தவிப்பவளாக, மகனுக்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டு பணிக்கு செல்பவளாக நேர்த்தியாக நடித்திருப்பார் ஆண்ட்ரியா. அதனூடே அவருக்கு முற்றிலும் முரண்பட்ட ஒருவனோடு காதலும் வந்து விட்டால்? எங்கோ சுற்றி எப்படியோ திரைப்படத்தை முடித்திருந்தாலும், சுதந்திரம் கோரும் நாகரீகப் பெண்களின் பிரதிநிதி தரமணியின் நாயகி.
7. விக்ரம் வேதா
ரௌடிக்கும் போலீசுக்கும் சண்டை. இந்தப் படத்தில் பெண்ணியம் எங்கே வந்தது என்கிறீர்களா? என் தொழிலை நான் செய்கிறேன், உன் தொழிலை நீ செய் உறவெல்லாம் நான்கு சுவற்றிற்கு உள்ளே மட்டும் தான் என்று கம்பீரமாகச் சொல்லி விட்டு, ரௌடியின் பக்கம் நிற்கும் வழக்கறிஞராக பெண்ணியம் பேசியிருப்பார் போலீஸ் அதிகாரி விக்ரமின் மனைவி நெஞ்சாத்தி.
8. பாகுபலி
பாகுபலி திரைப்படத்தின் இரண்டு பாகங்களிலுமே, நாயகனுக்கு இணையான கனமான பாத்திரத்தை நாயகிகளும் ஏற்றிருப்பார்கள். அதிலும் இரண்டாம் பாகத்தில், தேவசேனாவிற்கான பாத்திர வடிவமைப்பும், வசனங்களும் பெண்களால் இன்னும் கொண்டாடப்பட்டு வருபவை.
இவை மட்டுமின்றி, சமீபமாக வெளி வரும் பெரும்பாலான திரைப்படங்களில் பெண்களின் பாத்திர வடிவமைப்பை நேர்த்தியாக செய்கின்றனர்(இதில் பேய் மற்றும் சாமி படங்கள் அடங்காது.) இயக்குனர் பா.ரஞ்சித் இதில் முக்கிய இடம் வகிக்கிறார். அவர் இயக்கிய மெட்ராஸ், கபாலி, காலா என அனைத்துப் படங்களிலும் பெண்களை காட்சிப் பொருளாக, அழகூட்டிக் காண்பிக்க மெனக்கெடாமல், இயல்பான குண நலன்களோடு உலவ விட்டிருப்பார்.
சமீபத்தில் வெளிவந்த தமிழ்ப்படம் 2.0 விலும் கூட பெண்ணியம் பாடப்பட்டுள்ளது.
இன்னும் நிறைய நம்பிக்கை தரும் பெண் இயக்குனர்களும் வந்து கொண்டிருக்கின்றனர். லட்சுமி ராமகிருஷ்ணன், காயத்ரி, வி.பிரியா மற்றும் சுதா கொங்கரா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும் போது, பெண்களுக்கு முக்கியத்துவம் தரத் தொடங்கியிருக்கிறதோ தமிழ் சினிமா என்று நினைக்கத்தோன்றுகிறது.