28.5 C
Chennai
Sunday, April 14, 2024

[ரஜினி டூ சூப்பர் ஸ்டார்]: ‘தில்லு முல்லு’ – திரை விமர்சனம்

Date:

தேவ் எழுதி வெள்ளி தோறும் வெளிவரும் 80’s: ரஜினி to சூப்பர் ஸ்டார்  எனும் இந்த தொடரின் 15வது திரைப்பட விமர்சனமாக ‘தில்லு முல்லு’. இதுவே இத்தொடரின் நிறைவுப்பகுதி!”.

நாம் சிரிக்க மறந்த நாள் என்பது நம்மால் வீணாக்கப்பட்ட நாள் .
                                                                                                                                               -சார்லி சாப்ளின் 

கலாச்சார ரீதியாகவே தமிழ் படங்களுக்கு ஒரு சிறப்பு உண்டு, அது நம் படங்களில் நகைச்சுவைக்குக்  கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஆகும். இந்தியாவில் உள்ள பிற மொழிப் படங்களைக் காட்டிலும் நம் படங்களில் நகைச்சுவை நடிகர்களுக்கு வாய்ப்பும் மதிப்பும் அதிகம் உண்டு.

நட்சத்திர நடிகர்களுக்கு இணையான செல்வாக்கும் அவர்களுக்கு கிடைக்கப் பெறுவது  உண்டு. திரைப்படங்களைக் கலைப்படைப்புகளாகப்  பார்ப்பவர்களைக் காட்டிலும், அவற்றை  ஒரு கொண்டாட்டமாகப் பார்ப்பவர்களே நம் தமிழ் சமுதாயத்தில் அதிகம்.  கொண்டாட்டங்களில் நகைச்சுவைக்கு எப்போதும் முக்கிய பங்கு இருப்பது இயல்பே.

thillu-mullu-rajini-movie-poster

தமிழ் திரைப்பட வரலாற்றில் யதார்த்தமான நகைச்சுவை உணர்வு அமைய பெற்ற நட்சத்திரங்கள் வெகு குறைவு. அதுவும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஒரே அலைவரிசையில் வாய் விட்டு சிரிக்கச் செய்யும் கலைஞர்கள் அபூர்வம்.

அப்படி ஒரு கலைஞனை தமிழ் திரையுலகத்துக்கு வெளிச்சம் போட்டு அடையாளம் காட்டிய படம் தான் தில்லு முல்லு.

படம் வெளிவந்த ஆண்டு: 1981.

இயக்கம்: பாலச்சந்தர்.

திரைக்கதை, வசனம்: விசு

தில்லு முல்லு திரைப்படத்தின் ஆரம்பமே  கொஞ்சம் வித்தியாசம் தான். படத்தின் நாயகனே படத்தின் குறிக்கோள் என்ன என்ற ஒரு முன்னுரையைக் கொடுத்து படத்தைத் துவக்கி வைக்கிறார்.  புது முயற்சிகள் செய்யும் போது, படம் பார்க்க வந்திருப்பவர்களின் மனநிலையைப் படம் பார்க்கத் தயார் செய்தல் ஒரு வித யுக்தி. முன்னுரையைப்  படத்தின் முதல் சிக்ஸர் என்று குறிப்பிடலாம்.

Humourously K. பாலசந்தர் என்ற வரி திரையில் ஓடுகிறது. இது இயக்குனரின் அடுத்த பவுண்டரி!

அதுவரை அதிரடி, ஆக்ரோஷம் என புயலாகச் சுழன்று வந்த ரஜினிக்கு, இதில் நகைச்சுவைத் தென்றலாக வலம் வருவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு.

படம் வரும் காலகட்டத்தில் ரஜினிக்கென்று ஒரு பாணி உருவாகிவிட்டிருந்தது. அந்த பாணிக்கென பெரும் ரசிகர் கூட்டமும் உருவாகியிருந்தது. அந்த வகையில் ரஜினி பார்முலாவில் இருந்து பெருமளவில் விலகி ஒரு புதுப் பாதையில் இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. அது நடிகர் ரஜினிக்கு மட்டுமில்லை, அவர் குருநாதர் ‘இயக்குனர் திலகம்’ பாலச்சந்தர் அவர்களுக்கும் ஒரு சவாலாகவே இருந்திருக்கும் எனக் கருதுகிறேன்.

கதைச்சுருக்கம்

கல்லூரி முடித்த நகரத்து நடுத்தர வர்க்கத்து  இளைஞன் ஒருவன், அவனுக்கான ஆசைகள் அவன்  இளமைக்குரிய ரசனைகள், ஆட்டங்கள், கொண்டாட்டங்கள் என்று இருக்கிறான். வாழ்க்கையின் முதல் படியான வேலை தேடும் பருவத்தில்  வந்து நிற்கிறான் அந்த இளைஞன் சந்திரன். மன்னிக்கணும். வெறும் சந்திரன் எனச் சொல்லக்கூடாது. ‘அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன்’.

கொஞ்சமாகப் பொய் சொல்லி ஒரு வேலை வாங்கலாம் தப்பில்லை என ஆரம்பிக்கிறது சந்திரனின் தில்லுமுல்லு ஆட்டங்கள். நாகரீக இளைஞன் சந்திரன் வேலைக்காக  வேண்டி காந்தியையும் நேருவையும்  கலந்தெடுத்த  ஒரு அவதார புருஷனாக வேடம் போட்டு நேர்முகத் தேர்வுக்கு கிளம்புகிறான். குடும்ப நண்பரான டாக்டர் அந்த நேர்முகத் தேர்வுக்கு சந்திரனைத் தயார் படுத்துகிறார்.

rajini to superstarதமிழ் சினிமாவில் கிளாசிக் நகைச்சுவைக் காட்சிகள் வரிசையில் தில்லு முல்லு படத்தில் வரும் நேர்முகக்  காட்சிக்கு நிச்சயமாக ஒரு  முக்கிய இடம்  உண்டு. அந்தக் காட்சியில் வெறும் நகைச்சுவையோடு நின்று விடாமல், அந்தக் காலகட்டத்து இளைஞர்களின் சமூக வாழ்க்கை அமைப்பும்  மெல்லிய எள்ளல் செய்யப்பட்டிருக்கும்.

நேருவின் கொள்கையைத் தான் வித்துட்டோம் … அவர் ட்ரெஸ்ஸையுமா
விக்கணும்” – இது போன்று ஆங்காங்கே தூவப்பட்டு இருக்கும் அரசியல் வெடிகளும் உண்டு.

பொய்களை அஸ்திவாரமாக அடுக்கி வேலையைப் பெறும் சந்திரன்,  பின்னர் அந்த வேலையைத் தக்க வைக்க மேலும் மேலும் பொய்களை அடுக்குகிறான். அந்தப் பொய்கள் ஒவ்வொன்றும் சுவாரசியம். அதில் வெளிப்படுவது உச்சபட்ச ஹாஸ்யம்.

ஒரு கட்டத்தில் சந்திரன் தன் பொய்களின் வளையத்தில் சிக்கித் தனக்கு ஒரு தம்பி இருப்பதாகக்  கூறுகிறான். அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் இந்திரன் என்ற பாத்திரத்தை சந்திரனே  படைக்கிறான். தன் முதலாளியிடம் இருந்து தப்பிக்க அவன் சொன்ன தம்பி கதை அவனுக்கே சவாலாக அமைகிறது.

அந்தப் பொய்க்கு சந்திரன் கொடுக்கும் முதல் பெரும் விலை அவன் ஆசையாக வளர்த்த மீசை.
தமிழ் சினிமாவில் அது வரை ஆக்சன் நாயகர்களின் அடையாளமாய் மீசை இருந்து வந்திருக்கிறது. குறைந்த பட்சம் அனைத்து ஆக்சன் நாயகர்களுக்கும் ஒரு பென்சில் கோடாவது மீசையாக  நிச்சயம் வரையப்பட்டு இருக்கும். அந்த இலக்கணத்தை தில்லு முல்லில் அசைத்துப் பார்த்திருந்தார்கள் குருவும் சிஷ்யனும். மீசை என்ற அந்த மூக்கிற்கு கீழே இருக்கும் மூன்று இன்ச் சமாச்சாரத்தை வைத்து ஒரு அழகிய முடிச்சை திரைக்கதையில் கொண்டு வந்திருந்தார் திரைக்கதை ஆசிரியர்.

rajini to superstar

வ.உ.சி,  ம.பொ.சி, டி.கே.சி  முதலானவர்களை நாடு மறந்தாலும் அவர்கள் மீசையை நாடு மறக்குமா?”  இதுவும் படத்தில் வரும் வசனம்.

அதுவரை மீசை இல்லாத ரஜினியைத் தமிழ் திரை கண்டதில்லை. மீசையை மழித்த பின் திரையில் கருப்பு உடையில் சட்டை பட்டன்கள் திறந்த நிலையில்  கண்ணாடி அணிந்து கையில் சங்கிலியோடு ரஜினி கதவைக் காலால் நீட்டித் திறந்து  நடந்து வரும் அவரது ஸ்டைல் வரலாற்றுப் பக்கங்களின் நடுப்பக்க ப்ளோ அப் என்றால் அது மிகையில்லை.

சந்திரனாக ஒரு வித செயற்கைதனமான அடக்கத்தோடும் தயக்கத்தோடும் வெளிப்படும் ரஜினியின் குரல், இந்திரனாக நையாண்டியும் நக்கலும் குழைத்து எகத்தாளமாக மாறி ஒலிக்கும் அந்த தோரணையில் ஒரு பரிபூரண கலைஞன் வெளிப்படுவதைக் கண்டு ரசிக்கலாம்.

“ஏய் தோட்டக்கார்…”

“மிஷ்டேர் ஸ்ரீராம்…”

மேலே குறிப்பிடப்பட்ட இரண்டு வரிகளும் ரஜினியின் உச்சரிப்பு ஸ்டைலினால் சாகாவரம் பெற்று இன்றும் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமாக உள்ளே சொல்லாடல்கள்.

பகலில் லட்சிய வீரனாக அலுவலக வேலை – சந்திரனுக்கு மாலையில் முதலாளியின் மகளுக்குப் பாட்டு சொல்லிக் கொடுக்கும் ரசனையான வேலை – இந்திரனுக்கு!

ரஜினியின் அதகளம் இரண்டு வேடங்களிலும் நிறைவாக இருக்கிறது. சரோஜினி என்ற கல்லூரிப்  பதுமையாக மாதவி. கண்களால் கைது செய் என்று அந்த கால ரசிகர்கள் இவரிடம் சொக்கி தான் போய் இருந்திருக்க வேண்டும். பெரிய கண்கள். பேச வேண்டிய வசனங்களில் பாதியைக் கண்களாலே பேசி முடித்து விடுகிறார்.

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு ” பாடலில் மாதவியின் அழகை ஓவிய பாணியில் படம் பிடித்திருப்பார் இயக்குனர்.  மாதவி அழகு மற்றும் நடிப்பில் இயல்பு என தன் பங்களிப்பை செய்திருப்பார்.

இந்திரன் பாத்திரத்தோடு சந்திரனே உருவாக்கும் இன்னொரு  பாத்திரம், அவனது தாயார் வேடம். அந்த வேடத்திற்கு உயிர் கொடுத்து உணர்வு ஊட்டியவர் சௌகார் ஜானகி. பொதுவாகக் கண்ணீர் சிந்தும் பாத்திரங்களில் பிரகாசித்து வந்திருந்த அம்மையாருக்கு இந்த வேடம் ஒரு புது பரிமாணம். வெளுத்துக் கட்டியிருக்கிறார். மீனாட்சி துரைசாமியாக துறு துறுவென வளைய வரும் சௌகார் சிரிப்பு சர்க்காராக கலக்கி எடுத்து இருக்கிறார். சௌகார் போடும் ரெட்டை வேடம் படத்தின் மற்றும் ஒரு முடிச்சு. அது வெடிச் சிரிப்புக்கு உத்திரவாதம்.

இந்திரன் வேடத்தில் இருக்கும் ரஜினி மீது முதலாளியின் மகள் மாதவி காதல் கொள்கிறாள். அந்தக்  காதலின் காரணமாய் மகளுக்கும் தந்தைக்கும் மோதல் முற்றுகிறது. இந்திரனும் சந்திரனும் ஒன்று தான் என அறியாத முதலாளி சந்திரனுக்கு தன் மகளை மணம் முடிக்க முடிவெடுக்கிறார். அந்த முடிவும் அதற்குப் பின் வரும் குழப்பங்களும் சிரிப்போ சிரிப்பு.

சந்திரனின் தில்லு முல்லு வெளிப்பட்டு, தள்ளு முள்ளு ஏற்பட்டு படத்தின் முடிவு என்ன என்பதைப் படித்து அறிவதை விட படமாகப்  பார்த்து மகிழ்வது சிறப்பு .

நட்சத்திரங்கள்

சந்திரனின் குடும்ப டாக்டராக பூர்ணம் விஸ்வநாதன் . ரஜினியை நேர்முகத் தேர்வுக்கு தயார் செய்யும் அந்தக் காட்சியில் அவர் முகபாவங்களும் வசன உச்சரிப்பும்,  நின்று நிதானமாக அடித்து ஆடி இருப்பார்.

சம்பளம் தர்ற முதலாளி அண்டர்வேர்ல்ல வர சொன்னாலும் போய்யா” என அந்த டாக்டர் சொன்ன வசனம் எல்லாம் எந்த காலத்துக்கும் பொருந்தும்.

நீ எதுல குப்பை கொட்டுறயோ இல்லையோ. ஒரு நல்ல நடிகனா குப்பை கொட்டுவ ” என அவர் வாயில் வந்த வசனத்தை ரஜினிக்கு கொடுக்கப்பட்ட பாலச்சந்தரின் ஆசீர்வாதமாகத் தான் பார்க்க முடிகிறது.

rajini to superstar

படத்தின் மிக முக்கிய கதாபாத்திரம் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி என்ற அந்த முதலாளி கதாபாத்திரம் தான். நாயகன் துவங்கி அனைவரது தில்லு முல்லுகளையும் அப்பாவியாக எதிர்கொள்ளும் வேடம். அவ்வப்போது சந்தேகம் கொண்டு அதனால் வெகுண்டு எழுந்து பின் சாந்தமடையும் சவாலான வேடம். அந்த வேடத்தைக் கனகச்சிதமாக செய்திருக்கிறார்  நடிகர்  தேங்காய்  சீனிவாசன். மிடுக்கான தோற்றத்தில், முறுக்கிய மீசையோடு, நேரு கோட் அணிந்து அறிமுகம் ஆகி இறுதியில் மீசையை இழந்து நிற்கும் காட்சி வரை தேங்காய் சீனிவாசன் விடாது விளாசுகிறார்.

விசுவின் ஒன் லைனர்கள் தேங்காய் சீனிவாசனுக்கு பலம் சேர்க்கிறதா இல்லை… அந்த வசன வரிகளுக்கு அவரின் நடிப்பு மெருகு கூட்டுகிறதா என்பது தனி ஒரு பட்டி மன்ற தலைப்பாகவே கொள்ளலாம்.

சார்… பிராந்தி‘ என்று தன் முன் கிளாஸ்  நீட்டும்  சர்வரிடம் தேங்காய் சீனிவாசன் சொல்லும் பளிச் பதிலான “நான் காந்திடா ” என்பதாகட்டும், “சார் அவன் பெயர் லக்ஷ்மி நரசிம்மன்.. ஷார்ட் நேம் லக்கி சார்” என்று சொல்லும் மேனேஜரிடம், ” உம்ம பேர் கூட தான் பக்கிரி சாமி பிள்ளை.. பக்கின்னு கூப்பிடுறதா?” என்பதாகட்டும், சௌகார் தானும் தன் அக்காவும் ரெட்டை பிறவிகள் எனக் கூறும் போது  படக்கென ” இரட்டைப் பிறவி என்பது என்ன உங்க பரம்பரை வியாதியா? ” எனக் கேட்பதாகட்டும், “நான் ஒரு இன்டேஸ்ட்ரிஸ்ட்..( industrialist என்பதற்கு பதிலாக industrist) என உளறிவிட்டு அதற்கு  பிபி சுகர் எல்லாம் இருந்தால் பேசும் போது ஸ்பெல்லிங் மிஸ்டேக் வரத்தான் செய்யும்.” என அப்பாவியாக அவர் கொடுக்கும் விளக்கம் ஆகட்டும், தோட்டக்காரனாய் மீசை இல்லாத ரஜினியின் அறிமுகக் காட்சியில் தேங்காய் சீனிவாசன் கொடுக்கும் அந்த முக பாவங்கள் ஆகட்டும் எல்லா நடிகர்களையும் நகைச்சுவை நடிப்பில் தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டு போய் விடுகிறார்.

தில்லு முல்லுவின் அறிவிக்கப் படாத இன்னொரு நாயகன் தேங்காய் சீனிவாசன் என்று சொன்னால் அது ஓரளவுக்கு நியாமான கருத்து தான்.

thillu mulla

படத்தில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய மேலும் இரண்டு பாத்திரங்கள் நாகேஷ் மற்றும் நாகேஷின் ரசிகனாக வரும் சிறுவன். நாகேஷ், நடிகர் நாகேஷ் ஆகவே வருகிறார். சந்திரன் சிக்கலில் சிக்கிக்  கொள்ளும் போதெல்லாம் அந்த சிக்கலில் இருந்து விடு பட உதவும் ஒரு வேடம். நாகேஷுக்கே உரிய தனித்தன்மை குறையாது வந்து போகிறார். அதான் நாகேஷ் என்று நம்மை சொல்ல வைக்கிறார்.

நாகேஷின் ரசிகனாக வரும் அந்த சிறுவனது ரஜினி ஸ்டைல் நடிப்பும், கொஞ்சம் வில்லத்தனமும் ரசிக்க வைக்கும். புன்னகையில் ஆரம்பித்து விலா நோக சிரிப்பை அள்ளி விடும்.

ரஜினியின் தங்கையாக விஜி அறிமுகம். படபடவென பேச்சு. நல்லதொரு துவக்கம் அவருக்கு. படத்துக்கு அவர் நடிப்பு நல்லதொரு பங்களிப்பு. ஸ்கேட்டிங் மங்கையாக அவரது பாத்திரப் படைப்பு அந்தக் காலத்தில் புதுமை.

இயக்குனரின் அன்புக்குக் கட்டுப்பட்டு கமல், லட்சுமி.ஒய் விஜயா, பிரதாப் போத்தன் எனப்  பல நட்சித்திரங்கள் படத்தில் வந்து போகிறார்கள்.  மிகச் சிறிய வேடம் என்றாலும் நட்சத்திரங்கள் வெகுவாய் ஜொலிக்கிறார்கள்.

ரஜினி

ரஜினிக்குத் திருமணத்திற்கு பின் ஷூட்டிங் நடந்த முதல் படம் தில்லு முல்லுவாக தான் இருக்கும். திருப்பதியில் திருமணம் முடித்த கையோடு  மறு நாள் காலையில் சென்னை ஷூட்டிங்கில் இருந்தாராம். அன்றைய பரபரப்பு அது.

ஒரு மாஸ் ஆக்சன் ஹீரோ ரஜினி, அவருடைய சண்டைக் காட்சிகளுக்கெனத் தனி ரசிகர் பட்டாளமே உருவாக்கி வைத்திருந்த நேரமது. அந்நிலையில் தன்னுடைய பார்முலாவில் இருந்து விலகி தன் குருநாதர் காட்டிய பாதையில் ரஜினி இந்த படத்தில் பயணித்திருப்பார். குரு மீதும், தன் மீதும் கொண்ட அசாத்திய நம்பிக்கையின் வெளிப்பாடு என சொல்லலாம்.

ரஜினிக்கு பெருங்கோபம் வந்ததை எல்லாம் ரசிகன் திரையில் பார்த்து தானும் கோபாவேசம் அடைந்து இருக்கிறான். ரஜினி கண்ணீர் கசிந்துருகக் கலங்கி நிற்பதையும் ரசிகன் திரையில் கண்டு கதறி இருக்கிறான். ஆனால், ரஜினியால் சிரிப்பு வர வைக்க முடியுமா என்று சந்தேகித்தவர்கள் யாராக இருந்தாலும் அத்தனை பேருக்கும் ரஜினியைக் கொண்டே டைட்டில் கார்டு போடும் போது பதில் சொல்லி வாய் அடைக்க செய்தார் இயக்குனர்.

ஒரு எளிமையான ஆள் மாறாட்டக் கதை திறமையான நடிகர்களைச் சென்று  சேரும் போது அது வேறு ஒரு தளத்திற்குக் கடத்தி செல்லப்படுகிறது. டைமிங் என்று சொல்லப்படும் நேர கணிப்பு நகைச்சுவைக்  காட்சிகளுக்கு மிக அவசியம். நடிப்பவர்களுக்கு இடையில் நல்லதொரு புரிந்துணர்வு இருந்தால் மட்டுமே காட்சி மாட்சி பெறும்.

தில்லு முல்லு படத்தில் ரஜினிக்கும், தேங்காய் சீனிவாசனுக்கும் அந்த டைமிங் மிக அழகாக அமைந்து இருக்கும். முக்கியமாக ரஜினி இந்திரனாக வரும் காட்சிகளில், தேங்காய் சீனிவாசன் முகத்தில் கொடுக்கும் எதிர்வினைகள் ரஜினியின் நடிப்புக்கு வேறு ஒரு வண்ணத்தைக் கொடுக்கும்.

இசை

படத்திற்கு இசை எம் எஸ் விசுவநாதன்,
பாடல்கள் கவியரசு கண்ணதாசன்.

ரஜினியின் நடிப்புக்குச்  சான்றாக படம் நெடுகில் காட்சிகள் இருந்தாலும், தங்கங்களே தம்பிகளே பாட்டு ஒரு பெரும் சான்று.தனக்கு முந்தைய காலத்து நடிகர்கள் மட்டுமின்றி, தன் சம காலத்து நடிகரான கமல்ஹாசன் போல் வரை வேடமிட்டு அந்தப் பாட்டில் அசத்தியிருப்பார். ஒவ்வொரு நடிகரின் ட்ரேட் மார்க் சங்கதிகளை அந்த பாடலில் ரஜினி தன் நடிப்பில் கொண்டு வந்து நம்மை ரசிக்க வைத்திருப்பார். இறுதியாகப் பாடல் முடிவில் ரஜினியாகவே வருவது இயக்குனரின் டச். அந்த பாடலைக் கண்ணதாசன் கிட்டத்தட்ட, ரஜினி யார் யாராக வேடம் போட்டிருந்தாரோ அவர் அவர்  சினிமா தலைப்புக்களைக் கொண்டே எழுதி முடித்து இருந்தது இன்னொரு சிறப்பு.

rajini to superstar

ரஜினி கொடுத்த ஹிட் பாடல்களை வரிசைப்படுத்தினால், தில்லு முல்லு-வில் இருந்து ஒரு பாடலாவது இருக்கும். இன்னும் கோடிட்டுக் காட்ட வேண்டுமானால்  “ராகங்கள் பதினாறு உருவான வரலாறு ” பாடல்  நிச்சயம் அந்த பட்டியலில் இடம் பெறும்.

தில்லு முல்லு – ஒரு கொண்டாட்டம்

படத்தின் மீது ஒரு விமர்சனம் வைக்கலாம் என்றால், பல காட்சிகளில் மிதமிஞ்சிய நாடகத்தன்மை இருந்தது உண்மை. ஆனால், அந்த விமர்சனமும் வசனங்களின் வீச்சிலும் நடிகர்களின் கலகல நடிப்பிலும் காணாமலே போனது.

படம் நெடுக இருந்த உரையாடல்களைக் கொண்டு கிளைமாக்ஸில் நம்மை பேசியே தீர்க்கப் போகிறார்கள் என்ற பார்வையாளனின் பயத்தை, இயக்குனர் வெகு லாவகமாக வசனமே அதிகமின்றி சட்டெனெ முடித்து புன்னகையைத் தொடர செய்கிறார்.

இயக்குனர்  பாலச்சந்தர் தன் சிஷ்யன் ரஜினி என்ற திறமையான நடிகருக்காக தமிழுக்கு ஏற்ற மாதிரி தன் எண்ணத்தைக் கொட்டி, உழைத்து, இழைத்து நகைச்சுவைக்கான ஒரு சிம்மாசனத்தைத் தயாரித்து அதில் தன் சிஷ்யனை இழுத்து வந்து அமர வைத்து அழகு பார்த்தார். ரஜினி இன்னும் ஒரு படி மேலே போய் அந்த சிம்மாசனத்தில் கம்பீரமாய் அமர்ந்து படு ஜோராக ஒரு நகைச்சுவை சாம்ராஜ்ஜியத்தை கட்டியெழுப்பி தன் குருவுக்கு காணிக்கை செலுத்தினார் என்றால் அது மிகையாகாது. படம் வந்து நான்கு தசம ஆண்டுகள் கழிந்தும் இன்னும் கொண்டாட்டம் தொடர்கிறது.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் தில்லு படத்தின் பாடல்களை கேட்டு மகிழுங்கள். மறக்காமல் வசனங்களையும் தான்...

பின் குறிப்பு : தில்லு முல்லு திரைப்படம் ‘ கோல் மால்’ என்ற இந்திப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது.
இதே தில்லு முல்லு சமீபத்தில் தமிழில் மீண்டும் மறு ஆக்கம் கண்டது.

DPK Devnath
DPK Devnath
சென்னை வாசி - தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை - தமிழ் இணைய ஆர்வலர்

Share post:

Popular

More like this
Related

கங்காரு (Kangaroo) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசியமான தகவல்கள்!

கங்காரு கங்காருக்கள் சக்திவாய்ந்த பின்னங்கால்கள், நீண்ட வலுவான வால் மற்றும் சிறிய...

புதன் கோள் (Mercury) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசிய தகவல்கள்!

புதன் கோள் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள். இது...

ஒட்டகம் (Camel) பற்றிய சுவாரஸ்யமான 8 தகவல்கள்!

ஒட்டகம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒட்டகங்கள் பாலைவனங்களில் வாழும் பெரிய...

வான்கோழி (Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...
இயக்குனர் பாலச்சந்தர் தன் சிஷ்யன் ரஜினிக்காக தன் எண்ணத்தைக் கொட்டி, உழைத்து, இழைத்து நகைச்சுவைக்கான ஒரு சிம்மாசனத்தைத் தயாரித்து அதில் தன் சிஷ்யனை இழுத்து வந்து அமர வைத்து அழகு பார்த்தார். ரஜினி இன்னும் ஒரு படி மேலே போய் அந்த சிம்மாசனத்தில் கம்பீரமாய் அமர்ந்து படு ஜோராக ஒரு நகைச்சுவை சாம்ராஜ்ஜியத்தை கட்டியெழுப்பி தன் குருவுக்கு காணிக்கை செலுத்தினார் என்றால் அது மிகையாகாது. [ரஜினி டூ சூப்பர் ஸ்டார்]: 'தில்லு முல்லு' - திரை விமர்சனம்
error: Content is DMCA copyright protected!