28.5 C
Chennai
Saturday, February 24, 2024

[ரஜினி டூ சூப்பர் ஸ்டார்]: ‘படிக்காதவன்’ திரை விமர்சனம்

Date:

தேவ் எழுதி வெள்ளி தோறும் வெளிவரும் 80’s: ரஜினி to சூப்பர் ஸ்டார்  எனும் இந்த தொடரின் 14வது திரைப்படமாக ‘படிக்காதவன்’.

திரைப்படம் என்பது காண்பவரை ஏதாவது ஒரு விதத்தில் பாதிக்க வேண்டும் அப்போது தான் அந்த முழு வெற்றி அடைகிறது.

படங்களால் அடையாளம் பெறும் கலைஞர்களும் உண்டு, கலைஞர்களால் அடையாளம் பெறும் படங்களும் உண்டு. ரஜினி படங்களுக்கு தன்னால் இயன்ற அடையாளங்களை தருபவர்.

சாமானியர்களின் வேடங்களில் தோன்றியே சூப்பர் ஸ்டார் என்ற இடத்தை பிடித்தவர் ரஜினி.

படிக்காதவன் ஒரு காரோட்டியின் கதை. படத்தில் ரஜினிக்கு டாக்ஸி ஓட்டுநர் வேடம். அவரது உலகமே அவரது குடும்பம் மற்றும் டாக்ஸி மட்டுமே. அதுவும் அந்த டாக்ஸி கிட்டத்தட்ட அவர் காதலி மாதிரி. அதை லக்ஷ்மி என அன்பொழுக அழைக்கும் அந்த அழகு இருக்கிறேதே, அதைக் கண்டு தமிழகத்தின் பல டாக்ஸி ஓட்டுனர்கள் தங்கள் வாகனங்களுக்கு பெயரிட்டு அழைக்கலாயினர் என்பது வியக்கத்தக்க வரலாறு.

படம் வெளியான ஆண்டு – 1985

தயாரிப்பு – N.வீராசாமி, V. ரவிசந்திரன்

கதை – காதர் கான்

இயக்கம் – ராஜசேகர்

இசை – இளையராஜா

நடனம் – புலியூர் சரோஜா

சண்டை – ஜூடோ ரத்னம்

எடிட்டிங் – விட்டல் – மோகன்

ஒளிப்பதிவு – வ.ரங்கா, ஸ்ரீகாந்த்

padikkathavan-poster-1985-rajini-sivaji

கதைச் சுருக்கம்

மூன்று சகோதரர்களின் அந்நியோன்னத்தோடு படம் துவங்குகிறது. இரு தாரங்களின் மூத்த தாரத்தின் மகனாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன், அடுத்த தார பிள்ளைகளாக ரஜினிகாந்த் மற்றும் விஜயபாபு.

அண்ணன் சிவாஜிக்கு திருமணம் நடக்கிறது, புது மனைவி சூழ்ச்சியால் தம்பிகள் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். பிரிந்த தம்பிகள் வளர்ந்து நிற்கின்றனர்.

ஆதரவற்ற நிலையில் இருக்கும் சகோதரர்களுக்கு இஸ்லாமிய குடும்பம் ஒன்று நிழல் கொடுக்கிறது. அந்த முஸ்லீம் குடும்ப பெரியவர் வேடத்தில் நாகேஷ் நடித்திருக்கிறார். அந்த குடும்பத்தை ராஜா (ரஜினி) தன் குடும்பமாக எண்ணி பாசம் காட்டி மகிழ்ச்சியாக இருக்கிறான். அந்த குடும்பமும் ராஜா மீது அன்பை பொழிகிறார்கள்.

ராஜா காரோட்டி தன் தம்பியை கஷ்டங்களுக்கு இடையில் படிக்க வைக்கிறான். தம்பி ராமு கல்லூரியில் ஆடம்பர வாழ்க்கையை விரும்பி வாழ்ந்து வருகிறான்.

தம்பியின் ஆடம்பர மோகம் அறியாத அப்பாவி அண்ணன் ராஜா தம்பிக்காக தன்னையே மெழுகாக உருக்கி வாழ்ந்து வருகிறான்.

சிறு வயதில் பிரிந்த தன் அண்ணன் ராஜசேகரை ராஜா சந்திக்கிறான். அண்ணனோ பிரபல வக்கீல், விரைவில் நீதிபதி என்ற உயர் ஸ்தானத்திற்கு போக இருக்கிறார். அண்ணனை சந்தித்து தன்னை வெளிப்படுத்த நினைக்கும் ராஜாவை அவன் அண்ணி கடுமையாக பேசி கேவலப்படுத்தி திருப்பி அனுப்புகிறாள்.

தன்னை படிக்க வைத்து பெரிய மனிதனாக நினைத்த அண்ணன் முன் ஒரு சாதரணமான டாக்ஸி டிரைவராக போய் நிற்க தயங்கி தன் அடையாளத்தை மறைத்து விடுகிறான்.

தன் தம்பி படித்து உயர்ந்து தன் அவமானங்களை துடைப்பான் என்று ராஜா நம்புகிறான். அவன் நம்பிக்கை பொய்யாய் போகிறது.

ராஜா உழைப்பை நம்பி வாழ்கிறான், அவன் தம்பியோ வசதிக்கு ஆசைப்பட்டு குறுக்கு வழியில் இறங்குகிறான்.

தம்பி ஆசைப்பட்ட பணக்கார காதலியை அவன் கைப்பிடிக்க தன் தன்மானத்தை விட்டுக்கொடுக்கிறான் ராஜா.

திருமணம் முடிந்து வீட்டோடு மாப்பிள்ளையாக அங்கு செல்லும் ராமு தன் மாமனாரின் சொத்துக்கு ஆசைப்பட்டு தவறான நபர்களோடு கரம் கோர்க்கிறான்.

ஒரு கட்டத்தில் அண்ணனின் அன்பை உணராத ராமு ராஜாவை உதாசீனப்படுத்தி அவமானப்படுத்துகிறான். அண்ணனை விட்டு விலகியும் செல்கிறான்.

தம்பியை பிரிந்த ராஜா வாடுகிறான், தவிக்கிறான். ராஜா தொடர் அவமானங்கள் மூலம் வாழ்க்கையின் பாடம் உணர்கிறான்.

oorai-therinjukitten-ulagam-song-rajini-padikkathavan

இந்த நிலையில் ராஜா வஞ்சகர்களின் சூழ்ச்சியால் ஒரு கொலை பழியில் மாட்டுகிறான்.

அந்த கொலைப்பழியில் இருந்து ராஜா தப்பினானா? தம்பியைத் தீயவர்களின் கூடாரத்தில் இருந்து ராஜா மீட்கிறானா, தன் அண்ணன் ராஜசேகரோடு மீண்டும் இணைகிறானா என்பது சுவாரஸ்யமான கிளைமாக்ஸ்.

படத்தின் நாயகி அம்பிகா, மேரி என்ற மிகவும் ருசிகரமான ஒரு பாத்திரம் அவருக்கு.

படத்தில் சோடிக்கிளி எங்கே என்று பாட்டு உண்டு.. அதில் ரஜினி அவரைப் பார்த்து ஒரு வரி பாடுவார்.. அது அம்பிகாவின் பாத்திரத்தை அருமையாக விளக்கி விடும்.

அந்த வரி இது தான்.. ” ஒரு கர்ப்பிணியை காதலிச்சேன்.. கன்னிப்பொண்ணை கை பிடிச்சேன் “

ராஜா, மேரியை முதலில் சந்திக்கும் போது அவள் கர்ப்பிணி தோற்றத்தில் இருக்கிறாள். பின் அவளது தோற்றத்துக்கான காரணத்தை இயக்குநர் சுவாரஸ்யமாக முடிச்சு அவிழ்க்கிறார்.

ரஜினி அம்பிகாவின் ஆரம்ப காட்சிகள் மொத்தமும் நகைச்சுவை சாரல். அம்பிகா இறுக்கமாகவும், ரஜினி அப்பாவியாகவும் வரும் இடங்கள் அருமை. ரசனைக்குரியவை. ரஜினியின் முக பாவங்கள் குழந்தை முதல் குமரிகள் தாண்டி பெரியவர்கள் என அனைத்து தரப்பையும் கவர்கிறது.

பின் அது அதிரடி காட்சிகளுக்கு நீளுகிறது. அம்பிகாவுக்கு லேசான வில்லத்தனம் செய்யும் வாய்ப்பும் அதை அடித்து தூள் செய்து தன் ஆக்ரோஷ முகம் காட்டும் வாய்ப்பு ரஜினிக்கும் அமைகிறது. சண்டை காட்சிகளில் வேகம் மட்டும் இன்றி ரஜினி பிராண்ட் கலகலப்பும் சேர்ந்து பார்வையாளர்களுக்கு ஒரு புது குதூகல அனுபவம் கிடைக்கிறது.

அதே நேரம், அம்பிகாவுக்கு வாழ்க்கை பாடம் நடத்தி ரஜினி தன் சூப்பர் ஸ்டார் முத்திரையை திரையிலும், படம் பார்க்கும் ஜனங்களின் மனத்திலும் அழுத்தமாக பதிய செய்கிறார்.

நட்சத்திரங்கள்

அம்பிகாவின் பாத்திரம் ஆணவ தொனியில் இருந்து இறங்கி ராஜாவின் மீது காதல் கொண்டு, அவன் மீது கரிசனம் கொண்டு அவனுக்கு ஆதரவாக தோள் கொடுக்கும் தோழியாக உருவெடுக்கிறது. அம்பிகா அந்த மொத்த உணர்வுகளையும் திரையில் மிகவும் அழகாக கொண்டு வந்து இருக்கிறார். அவரது திரைப்பயணத்தில் இது ஒரு மைல்கல்.

மக்கள் கலைஞர் ஜெய்சங்கருக்கு இதில் ஒரு வித்தியாசமான வில்லன் வேடம். ஆர்ப்பாட்டம் இன்றி நாசூக்காய் நயவஞ்சகம் புரியும் நடிப்பில் ஜொலிக்கிறார்.

நாகேஷ் ரஜினியோடு இணைந்து நடித்த வெகு சில படங்களில் படிக்காதவன் மிக முக்கியமான படம். நாகேஷ் பொதுவாக ரஜினிக்கு கருத்து பகிரும் ஆத்மார்த்தமான வேடங்களையே ஏற்று வந்து இருக்கிறார்.

குறிப்பாக புள்ளத்தாச்சி பேச்சு பற்றி வரும் ரஜினி நாகேஷ் காட்சி இருக்கே வெடிச்சிரிப்புக்கு உத்திரவாதம். ரஜினியின் முகபாவமும் நாகேஷின் யதார்த்த பேச்சும் அந்த காட்சிக்கு பெரும் பலம்.

தேங்காய் சீனிவாசன், இவர் ஒரு எம்ஜிஆர் ரசிகர், ஆனால் ரஜினியின் பெரும்பான்மையான 80கள் படங்களில் இவருக்கு என்று நிச்சயம் ஒரு வாய்ப்பு இருக்கும். இந்த படத்திலும் இருக்கிறது. கொஞ்சம் வில்லத்தனம் கலந்த நகைச்சுவை வேடம். ராமநாதன் என்று பெயர். சிவாஜிக்கும் இவருக்குமான வழக்காடு மன்ற காட்சி உரையாடல்கள் சிரிப்பு மற்றும் சிறப்பு.

தமிழ் திரையில் காலத்தை தாண்டி நிற்கும் நகைச்சுவை காட்சிகளும் வசனங்களும் நிறைய உண்டு. அந்த வரிசையில் படிக்காதவனில் ஜனகராஜ் பேசிய “என் தங்கச்சிய நாய் கடிச்சிடுச்சுப்பா” செம்ம பிரபலம். தசம ஆண்டுகள் தாண்டியும் இன்று தமிழ் சினிமா ரசிகர்கள் ஜனகராஜ் என்றதும் நினைவில் கொள்ளும் ஒரு வசனமாக மாறிவிட்டது இந்த வசனம். வசனம் என்னவோ ஒரே வரி தான், ஆனால் அதை திரையில் ஜனகராஜ் சொன்ன விதம் வசனத்திற்கு ஒரு சாகாவரம் கொடுத்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். கபாலி என்ற K.பாலி வேடத்தில் கொஞ்சமே வந்தாலும் நிறைவான பங்களிப்பு.

ரம்யா கிருஷ்ணன், சிறிய வேடம், வந்து போகிறார். பின்னாளின் நீலாம்பரி, இந்த படத்தில் அவ்வளவு அமைதி, அழகு.

ரம்யா கிருஷ்ணன் தந்தை வேடத்தில் பூர்ணம் விஸ்வநாதன். வடிவுக்கரசி, சிவாஜியின் மனைவி வேடம், சில காட்சிகளில் வருகிறார்.கதைக்கு திருப்பம் தருகிறார்.

ரஜினியின் தங்கை வேடத்தில் பேபி இந்திரா. அந்த காலத்து குழந்தை நட்சித்திரம். 80களின் புகழ் பெற்ற தங்கை நடிகை. பாயும் புலியிலும் ரஜினிக்கு தங்கையாக வருவார். இதில் கல்லூரி விழாவுக்கு செல்ல ரஜினிக்கு இவர் கொடுக்கும் காஸ்டியூம் ஐடியா அட்டகாசம்.

முக்கிய நடிகர்கள் எல்லாரையும் சொல்லியாச்சு, இப்போ சொல்ல வேண்டியது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றி, கொஞ்சம் நீண்ட கவுரவ வேடம் அவருக்கு இந்த படத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. வெகு எளிமையாக எடுத்து செய்திருக்கிறார்.

பாசமிகு அண்ணனாகவும், தொழிலில் நேர்மை குறையாத மனிதனாகவும், வழக்காடு மன்றத்தில் திறமையாக வாதிடும் வக்கீலாகவும், பாத்திரம் உணர்ந்து நடித்துள்ளார். ஒரு சில காட்சிகளிகளில் அவர் நடிப்பு சற்றே மிகையானதாக விமர்சனம் எழுவதுண்டு. படத்தில் வரும் இறுதி காட்சி ரஜினிக்கு ரொம்பவும் ஸ்பெஷல், நெற்றியில் ரஜினிக்கு சிவாஜி முத்தமிடும் காட்சி, இது ரஜினிக்கு பிடித்தமான படங்களில் ஒன்று.

இசை

படத்தில் பாடல்கள் எல்லாம் பட்டி தொட்டி சிட்டி என எல்லா இடங்களிலும் மாஸ் ஹிட். இளையராஜாவின் ஜனரஞ்சகமான இசை ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டன.

ஒருகூட்டு கிளியாக – அன்பின் தத்துவ பாட்டு

ராஜாவுக்கு ராஜா நான் தான் – சூப்பர் ஸ்டார் ரஜினியின் கொள்கை பாட்டு.

சோடி கிளி எங்கே – காதல் களிக்கும் பாட்டு.

ஊரை தெரிஞ்சுகிட்டேன் – வாழ்க்கை சொல்லும் அனுபவ பாட்டு

சொல்லி அடிப்பேனடி – குத்தாட்டம் போடும் ஒரு உற்சாக பாட்டு

படிக்காதவன் என்று சொன்னால், இளையராஜா ரசிகர்களுக்கு நிச்சயம் இந்த பின்னணி இசை நினைவுக்கு வரும். இந்தக் காலத்திலும் Whatsapp ஸ்டேட்டஸாக இந்த பின்னணி இசை பலருக்கும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

காட்சிக்கு ஏற்ற இசை படம் பார்க்கும் அனுபவத்தை மேலும் அழகாக்குகின்றது.

ரஜினி படங்கள் எப்போதும் சண்டை பிரியர்களுக்கு பெரும் உற்சாகம் கொடுக்க தவறியதே இல்லை. படிக்காதவனும் அதில் சளைக்கவில்லை.

இந்தப் படத்தில் வரும் சண்டைக்காட்சிகளில் நகைச்சுவையும் இரண்டற கலந்து இருப்பது பார்வையாளர்களைப் பரவச படுத்துகிறது.

கோபக்கார இளைஞன் வேடத்தில் 80களைத் துவக்கிய ரஜினி கொஞ்சம் கொஞ்சமாக கோபத்தை அடக்கி ஆண்டு கலகலப்பான மனிதனாக திரையில் வலம் வர துவங்கினார்.

குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என எல்லோருக்குமான நாயகனாக தன்னை மாற்றி கொண்டார் ரஜினி.

ரஜினி படமா, ஒரு கதை இருக்கும், நல்ல பாட்டு இருக்கும், நல்ல பாட்டு இருக்கும், ஆட்டம் கொண்டாட்டம் நிச்சயம் இருக்கும், கருத்து இருக்கும், நகைச்சுவை நிறைந்து இருக்கும் என்ற தொடர் நம்பிகையை விதைத்த படங்களில் “படிக்காதவனுக்கு” முக்கிய இடம் உண்டு.

அப்பாவி அண்ணன் ஆக உருகுவதில் ஆகட்டும், குறிப்பாக தம்பி கல்லூரிக்கு சென்று திரும்பும் அந்த பேருந்து நிலையக் காட்சி, நடந்து கொண்டே பணத்தை எடுத்து கொடுத்தவாறு தன் அன்பையும் கரிசனையும் பொழிந்த படி படபடப்பாக பேருந்து ஏறும் போது மொத்த இதயங்களையும் அள்ளி விடுகிறார்.

தம்பியின் நாடகம் பார்க்க செல்லும் காட்சியில் ரஜினியின் பூட்ஸ் போட்ட நடையும், ஆங்கில பேச்சும் அதகளம்.

நடுத்தர வாழ்க்கை வாழும் மக்கள் ஒவ்வொருவரும் கொண்டாடி மகிழும் தருணம் அது. ரஜினி ஒரு சாமானியன் சட்டென வேறு உலகத்திற்குள் தள்ளப்படும் போது படும் நம் கண் முன் கொண்டு வந்து விடுவார்.

மனிதன் மனிதன் மீது நேசம் கொள்ளுவது இயல்பு. ஆனால் ஒரு பொருள் மீது கொள்ளும் ஆழமான நேசம் பற்றி படங்கள் பெரிதாக தமிழில் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இந்த பதிவின் துவக்கத்தில் நான் குறிப்பிட்டது போல் படிக்காதவன் படம் பேரை சொல்லும் போது ரஜினி நமக்கு எந்த அளவுக்கு நினைவுக்கு வருமோ அதே அளவு ரஜினி ஓட்டிய அந்த டாக்ஸி லக்ஷ்மியும் நம் நினைவுகளை நிறைக்கும். அந்த டாக்ஸி படத்தில் ஒரு முக்கிய பாத்திரமாகவே பயணிக்கும்.

ரஜினிக்கும் டாக்ஸிக்கும் நடக்கும் சம்பாஷணைகள் பெரிதும் ரசிக்கும் படி இருக்கும்.

லக்ஷ்மி start..என்ற வசனத்தை எண்பதுகளில் சினிமா பார்த்தவர்கள் பல தரம் தங்கள் வாகனங்களைப் பார்த்து சொல்லி இருப்பார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

படிக்காதவனில் ரஜினிக்கு கிட்டத்தட்ட படம் முழுக்க காக்கி சட்டை தான் உடை.பாடல்களில் மட்டும் கொஞ்சம் மாற்றம். அதிலும் இரு பாடல்கள் நெடுகிலும் காக்கி உடையே. அது ஒரு ஆச்சரியமான விஷயம். பெரிதான ஓப்பனை இன்றி இயல்பான தோற்றத்தில் வலம் வருகிறார். கதை மீதான ஆழமான நம்பிக்கை தன் நடிப்பாற்றல் மீதான பிடிப்பு, இவைகளே இந்த படத்தை பொறுத்த வரை ரஜினியின் மூலதனம்.

வெகு யதார்த்தமான நடிப்பு, துவக்கம் முதல் முடிவு வரை கதைக்கு தேவையான விஷயங்களைத் தன் நடிப்பில் பொருத்தி சிறப்பாக கொடுத்திருப்பார் ரஜினி.

படம் நெடுக நேரும் ஏமாற்றங்களையும் அவமானங்களையும் ஒரு சேர உள்ளுக்குள் புதைத்து விட்டு வெள்ளந்தி சிரிப்பும் புன்னகையுமாக சுற்றி வரும் ரஜினி, உடைந்து சிதறும் இடம் ஊரை தெரிஞ்சிக்கிட்டேன் பாடலில் தான், அந்த தருணத்தில் நம் மனங்களை கனமாக்கி கண்களை குளமாக்குகிறார் ரஜினி என்னும் மாபெரும் நடிகன்.

அந்த பாட்டை பொறுத்த வரை, ராஜாவின் இசையா? வைரமுத்துவின் வரிகளா? சூப்பர் ஸ்டாரின் நடிப்பா? போட்டியில் வெல்வது ரஜினியே.. ரஜினியின் நடிப்பே.

ராஜசேகர் ரஜினிக்கான ஒரு இயக்குநர். இந்த படத்திலும் அதை நிரூபித்து இருப்பார்

படிக்காதவன் ரஜினி சினிமாக்களை பொறுத்த வரை ஒரு வெகுஜன சினிமா ரசிகனுக்கு பெரும் விருந்து.

அழுத்தமான குடும்ப கதை, உறவுகளின் உன்னதத்தை எடுத்துரைக்கும் திரைக்கதை, ரஜினியின் பிரத்யேக பொழுது போக்கு அம்சங்கள், நல்ல இசை, ரசிக்க வைத்த சண்டை காட்சிகள் என படிக்காதவன் ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் கோபுரம் ஏற்றி வைத்த இன்னொரு படிக்கட்டு.

இசைஞானி இளையராஜா இசையில் படிக்காதவன் படத்தின் பாடல்களை கேட்டு மகிழுங்கள்.
DPK Devnath
DPK Devnath
சென்னை வாசி - தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை - தமிழ் இணைய ஆர்வலர்

Share post:

Popular

More like this
Related

கங்காரு (Kangaroo) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசியமான தகவல்கள்!

கங்காரு கங்காருக்கள் சக்திவாய்ந்த பின்னங்கால்கள், நீண்ட வலுவான வால் மற்றும் சிறிய...

புதன் கோள் (Mercury) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசிய தகவல்கள்!

புதன் கோள் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள். இது...

ஒட்டகம் (Camel) பற்றிய சுவாரஸ்யமான 8 தகவல்கள்!

ஒட்டகம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒட்டகங்கள் பாலைவனங்களில் வாழும் பெரிய...

வான்கோழி (Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...
அழுத்தமான குடும்ப கதை, உறவுகளின் உன்னதத்தை எடுத்துரைக்கும் திரைக்கதை, ரஜினியின் பிரத்யேக பொழுது போக்கு அம்சங்கள், நல்ல இசை, ரசிக்க வைத்த சண்டை காட்சிகள் என படிக்காதவன் ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் கோபுரம் ஏற்றி வைத்த இன்னொரு படிக்கட்டு.[ரஜினி டூ சூப்பர் ஸ்டார்]: 'படிக்காதவன்' திரை விமர்சனம்
error: Content is DMCA copyright protected!