1974 – ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளி வந்த “Death wish” என்ற படம் தான் நான் சிகப்பு மனிதன் திரைப்படத்திற்கான மூலம். அக்காலத்தில் இந்தப் படத்திற்கு சட்ட வல்லுநர்களிடம் பெருத்த விமர்சனமும், பொது மக்களிடம் அதே அளவுக்கு ஆதரவும் கிடைத்தது ஒரு தனி சிறப்பு
ராபின் ஹூட் பழங்காலத்து ஏழைப் பங்களான். அந்த வீரனைப் பற்றி ஏகப்பட்ட நாட்டுப்புறக் கதைகள் உண்டு. இன்றும் அந்தக் கதைகளுக்கு வெகுஜனங்களிடம் பெரும் வரவேற்பு இருக்கிறது நிதர்சனம்.
மக்களுக்காகத் தான் சட்டங்கள். ஆனால், அந்தச் சட்டங்கள் மக்களுக்கு நீதியை வழங்கத் தவறும் பட்சத்தில், அங்கே சட்டத்தைக் கையில் எடுத்துத் தானே நீதி வழங்குபவனை எந்த ஒரு சமுதாயமும் கொண்டாடத் தான் செய்கிறது. அந்த வகையில் 80 களில் வந்த ஒரு படம் தான் “நான் சிகப்பு மனிதன்”.

ஒரு மனிதனின் வாழ்க்கையில் ரத்தம் தெறிக்கும் வண்ணம் குற்றங்கள் நடக்கும் போது அந்த சாதாரண மனிதன் சிகப்பு மனிதனாக மாறுகிறான். இது தான் படத்தின் ஒரு வரிக் கதைச் சுருக்கம்.
80 களில் க்ரைம் ரேட் அதிகமாக இருந்த ஒரு காலக்கட்டத்தில் இந்த படம் வந்திருந்தது ஒரு கூடுதல் சிறப்பு.
படம் வெளிவந்த ஆண்டு – 1985
தயாரிப்பு : A. பூர்ணசந்திராவ்
இயக்கம் : எஸ் ஏ சந்திரசேகரன்
இசை : இளையராஜா
கதைச் சுருக்கம்
விஜய் ஒரு கல்லூரிப் பேராசிரியர். தாய், தங்கையோடு நகரத்தில் இருக்கும் அடுக்கு மாடி ஒன்றுக்குக் குடியேறுகிறார். விஜயின் காதலி உமா ஒரு வக்கீல்.
உமாவின் விருப்படி தான் நகரத்துக்குக் குடி பெயர்ந்து இருக்கிறார் விஜய். கல்லூரி, குடும்பம், காதல் என அன்பும் அமைதியும் கலந்த ஒரு இனிய வாழ்க்கை.
கல்லூரியில் ஒரு பொறுப்பான பேராசிரியராக, பாசமுள்ள அண்ணனாக, கனிவான காதலனாக விஜய்யின் பாத்திரப்படைப்பு அமைக்கப்பட்டிருக்கிறது.
கையில் புத்தகம் கலையாத கோட்டு சூட்டு பளிச்சென துலங்கும் காலணி (ஷூ) எனப் பேராசிரியர் வேடத்துக்குக் கச்சிதமாய் பொருந்தி விடுகிறார் ரஜினி. வக்கீல் வேடம் அம்பிகாவுக்கு. வழக்காடு மன்றத்தில் பட்டாசாய் வெடிக்கிறார். காதலனிடம் பூவாய் குழைகிறார்.
நண்பனின் வீட்டு விழாவுக்கு அழைப்பு வர அதை ஏற்று அங்கு குடும்பத்தோடு செல்கிறார் விஜய். அந்த அடுக்கு மாடி இருக்கும் இடத்திலும், அதனருகிலும் பல சமூக விரோதச் செயல்கள் நடந்து வருகின்றன.
திருவள்ளுவர் டீ ஸ்டால் என்ற பெயரில் நடக்கும் சாராயக்கடை, விபச்சாரம், வழிப்பறி எனக் குற்றங்களின் எண்ணிக்கை நீளமாக இருக்கிறது. விஜய் இதைக் கண்டு மனம் வெதும்புகிறார். தவறு நடக்குமிடத்தை விட்டு அகன்று செல்ல வேண்டும் என்ற மனநிலையில் விலகிச் செல்லத் தான் நினைக்கிறார்.
நண்பனிடம் கூட இப்படிக் குற்றங்களின் கூடாரமாக இருக்கும் இடத்தில் ஏன் குடியிருக்கிறாய் எனக் கேட்கிறார்.
“அட போப்பா.. நான் இன்னிக்கு இந்த வீட்டை காலி செய்தாலும், இந்த வீட்டுச் சொந்தக்காரன் எனக்கு காசு கொடுத்து சந்தோசமா அனுப்பி விட்டுட்டு.. நீ கீழே பாத்தியே அதே தொழிலை இங்கே ஆரம்பிச்சு காசு பார்ப்பான். நான் வாடகைக்கு வீடு தேடி அலையணுமே ” என்று நண்பன் அளிக்கும் பதிலில் அக்மார்க் மத்தியத் தர வர்க்க சிந்தனை ஒளிந்திருப்பது சுவாரசிய வேதனை.
புரொபஸர் விஜயின் நண்பனாக “நிழல்கள்” ரவி வருகிறார். அவருக்கு மனைவியும் தங்கையும் இருக்கிறார்கள்.
ரவியின் தங்கையைப் போகும் போதும், வரும் போதும் ரவுடி ஒருத்தன் வம்பிழுக்கிறான். ஒரு கட்டத்தில் அவளிடம் அத்து மீறுகிறான். கொலையும் செய்கிறான். நீதி மன்றத்துக்கு வரும் வழக்கில் இருந்து தன் பணம் செல்வாக்கு அரசியல் தொடர்புகளைப் பயன்படுத்தித் தப்பித்துக் கொள்கிறான்.

பணக்கார, பெண்ணாசை கொண்ட ரவுடி வேடத்தில் வருகிறார் நடிகர் சத்யராஜ். இந்த வழக்கில் நீதி மன்றத்தில் விஜயின் காதலி உமா வாதிட்டுத் தோற்றுப் போகிறாள். சாமான்யனுக்கு நீதி மன்றங்களில் அவ்வளவு எளிதாக நீதி கிடைப்பதில்லை என்ற கோபம் பார்வையாளர்களுக்குக் கடத்தப்படுகிறது.
விஜய் காவல் துறையின் உதவியை நாடுகிறார். காவல் அதிகாரியாக ஒய்.ஜி மகேந்திரன் நடித்து இருக்கிறார். நியாயம் செய்ய வேண்டிய காவல் அதிகாரி அநியாயத்தின் பக்கம் விலை போகிறார். தகவல் கொடுத்து சாட்சியங்களை மாற்றி விஜயின் மனுவினை ஒன்றுமில்லாமல் செய்கிறார்கள்.
காவல் துறையை நம்பி இனி பயன் இல்லை என்று முடிவெடுக்கும் விஜய் அந்தக் காலனிவாசிகள் துணையோடு அக்கிரமம் நடக்கும் இடங்களுக்குச் சென்று அட்டூழியக்காரர்களை அடித்து விரட்டுகிறார்.
தங்களுக்கு எதிராக காவல் துறைக்குச் சென்றது மட்டுமின்றி தங்கள் சட்ட விரோத வியாபாரத்தை நாசம் செய்த விஜய்க்கு பாடம் புகட்ட எண்ணும் வில்லன் கும்பல் வீடு புகுந்து விஜயைத் தாக்குகிறது. தாக்குதலில் விஜயின் தாய் கொல்லப்படுகிறார். தங்கை கூட்டு வன்புணர்ச்சி செய்யப்படுகிறார். விஜயை மட்டும் உயிரோடு விட்டு மிரட்டல் விடுத்து செல்கிறது சத்யராஜ் தலைமையிலான வில்லன் அணி.
அண்ணன் ஆக விஜயால் அந்தக் கொடுமையில் இருந்து தங்கையைக் காப்பாற்ற இயலாமல் போகிறது. தங்கை விஜய்யின் கண் முன்னே கற்பையும் இழந்து உயிரையும் மாய்த்து கொள்கிறாள். இயக்குநர் இந்த இடத்தில் படம் பார்க்கும் நம்மை விஜய் மீது பரிதாபப்பட்டுப் பரிதவிக்க வைக்கிறார்.
ரஜினி தலை கீழாகத் தொங்கும் அந்தக் காட்சி நடிகராக அவருடைய அர்பணிப்புக்கு ஒரு நற்சான்று.
நேசித்த குடும்பம் இருக்கும் வரை மனிதனாக இருக்கும் விஜய் அந்தக் குடும்பம் இல்லாமல் போன பின் சிகப்பு மனிதனாக அவதாரம் எடுக்கிறார். ஒரே இரவில் ஐந்து பேரைக் கொல்லும் புரொபஸர் விஜய் ஊடகங்களால் “ராபின் ஹூட் ” என்று பட்டம் சூட்டப்படுகிறார்.
பகலில் வெளிர் நிற கோட்டும், சூட்டும் அணிந்து கல்லூரிக்கு வழக்கம் போல் சென்று பாடம் நடத்தும் விஜய், இரவில் முற்றிலும் மாறிய மனிதனாக, மனித உருவில் திரியும் மிருகங்களை வேட்டையாட அலைகிறார்.
படத்தில் வரும் பெரும்பாலான இரவுக் காட்சிகளில் ரஜினிக்கு சிவப்பு வண்ணத்தில் ஆடைகள்
கொடுக்கப்பட்டிருப்பது படத் தலைப்பை நினைவுப்படுத்தும் ஒரு குறியீடாகத் தெரிகிறது. தன் குடும்பத்தை அழித்த கயவர்களைத் தேடி வீதி வீதியாக அலைந்து அவர்களைக் கொன்று அழிக்கிறார்.
இரவு உலாவில் தன் கண்ணில் படும் சமூக விரோதிகளுக்கும் மரணத்தை தண்டனையாக உடனுக்குடன் வழங்குகிறார். ‘ராபின் ஹூட்’ என்ற பெயர் பொதுமக்களிடம் மரியாதையையும் குற்றவாளிகளிடம் பயத்தையும் ஒரு சேர உருவாக்குகிறது. புரொபஸர் விஜய் பொது மக்களைக் காக்கும் காட்சிகளும் படத்தில் கணிசமான அளவில் வைக்கப்பட்டு “ராபின்ஹூட்” பாத்திரத்துக்கு மேலும் வலு சேர்க்கப்பட்டு இருக்கிறது.
“ராபின் ஹூட் ” சமுதாயத்தின் புதிய நீதி தேவனாக மக்களால் கொண்டாடப்படுகிறார். நீதி மன்றங்களால் தாமதிக்கப்படும், தவிர்க்கப்படும் நீதிகளை இரவில் தன் துப்பாக்கி தோட்டாக்களால் வழங்குகிறார் என்று அவர் புகழ் வெகுஜனங்கள் மத்தியில் வேகமாக பரவுகிறது.
வில்லன் கும்பலால் பாதிக்கப்பட்ட விஜய் பழி வாங்கப் போகிறார் என்பதைப் படம் பார்க்கும் நாம் வெகு எளிதில் கணித்து விடலாம். அதுவும் ரஜினி படம் நிச்சயம் இது தான் நடக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியான நிலையில், திரைக்கதையில் திருப்பம் தருவது ‘சின்ன சேலம் சிங்காரம்’ என்று வரும் புலனாய்வுத் துறை அதிகாரியின் பாத்திரம். இந்த வேடத்தை ஏற்று நடித்திருப்பவர் இயக்குநரும் திரைக்கதை வித்தகருமான K.பாக்யராஜ்.

‘ராபின் ஹூட்’ யார் என்ற கேள்வியோடு களம் இறங்கும் சிங்காரம், கொஞ்சம் கொஞ்சமாகத் தன் இலக்கினை நோக்கி நகர்வது பெரும் சுவாரஸ்யத்தோடு திரைக்கதையில் வடிக்கப்பட்டுள்ளது.
பாக்யராஜின் அறிமுகக் காட்சி படத்தின் ஒரு இனிய சுவாரஸ்யம். சிங்காரத்துக்குக் கொடுக்கப்படும் பில்டப்புக்கு பார்வையாளர்கள் ஒரு ஆரவாரமான அறிமுகத்தை எதிர்பார்த்துக் காத்து இருக்க… அவரது அறிமுகக் காட்சியோ பெரும் புன்னகையை வரவழைக்கிறது.
சைக்கிள் ஹாண்டில் பாரில் தொங்கும் ட்ரான்ஸிஸ்டரில் எம்ஜிஆர் பாட்டு ஒலிக்க.. வந்து இறங்குகிறார் பாக்யராஜ்.
காவல் நிலைய வாசலில் சைக்கிளை நிறுத்தி விட்டு அதில் இருக்கும் லைட் மற்றும் பெல் உள்ளிட்ட சில முக்கியப் பொருட்களைக் கழற்றித் தன் பைக்குள் எடுத்து வைத்துக் கொண்டு
அலுவலகத்திற்குள் நுழையப் போவார். அப்போது வாசலில் நிற்கும் கான்ஸ்டபிள்,
“என்ன சார் எங்க மேல நம்பிக்கை இல்லையா?” எனக் கேட்பார்.
“நம்பிக்கை எல்லாம் இருந்தாலும் நான் எப்போவும் கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கறது வழக்கம் “ என்று பதில் கொடுப்பார். பாக்யராஜ் வரும் காட்சிகளில் ஒரு இயக்குநராகவும் அவரது பங்களிப்பு இருக்கப் போகிறது என்று அறிமுக தருணத்திலேயே நமக்குச் சொல்லப்பட்டு விடுகிறது.
“நான் எல்லாம் மாசம் ஒரு நாள் மட்டும் தான் கை நீட்டுவேன். அதுவும் சம்பளத்துக்கு மட்டும் தான், நமக்கு இதெல்லாம் கட்டுப்படியாகாது “ என உயரதிகாரி நீட்டும் உயர் ரக சிகரெட்டை நாசுக்காக மறுக்கும் இடம்,
“இந்த கேஸை 75 சதவீதம் கண்டுபிடிச்சாச்சு.. இன்னும் 25 சதவீதம் தான்.. “ என்ற உயரதிகாரியிடம் “அதையும் நீங்களே கண்டு பிடுச்சுருங்க.. நான் வரேன் “ என்று திரும்ப எத்தனிக்கும் இடம்,
“இந்த பைலில் எங்க மொத்த பேரோட மூளையும் இருக்கு… பயன்படுத்திக்கோங்க” என்று வழக்குகளின் கோப்பை நீட்டும் உயரதிகாரியிடம் ” எனக்கு என் மூளை இருக்கு.. உங்க மூளையை நீங்களே வச்சிக்கோங்க “ என்று பைலைத் திருப்பி நீட்டும் இடம்.
“இங்கே இருக்கும் யாரை வேண்டுமானாலும் உங்களுக்குத் துணையாக வச்சுக்கங்க “என்ற உயரதிகாரியிடம், “எனக்கு புத்திசாலிகள் வேண்டாம், அவங்க என்னைக் குழப்பிடுவாங்க, எனக்கு என் பேச்சைக் கேட்கும் இந்த கான்ஸ்டபிள் போதும்” என்று செந்திலைக் கூப்பிடும் இடம்.
இப்படிப் படத்தில் பளிச்சிடும் பாக்யராஜ் முத்திரைகள் ஏராளம்.
காவல் உயரதிகாரி வேடத்தில் பழம் பெரும் நடிகர் நம்பியார் நடித்திருக்கிறார். காமெடி கலந்த கண்ணியமான போலீஸ் ஆக வந்து போகிறார்.
கையில் கடலை பொட்டலம் ஒரு ரேடியோ பெட்டி (டிரான்சிஸ்டர்) மற்றும் தோளில் பை என “சின்ன சேலம்” சிங்காரமாக வலம் வரும் பாக்யராஜ் ஆர்ப்பாட்டம் இல்லாமல் வசனங்களாலும் அவரது வழக்கமான பார்வைகளாலும் அதகளம் செய்கிறார்.
சிங்காரம் காக்கி போடாத ஒரு உயரதிகாரி. செந்தில் அவருக்கு ஏற்ற துணை. துப்பறியும் அதிகாரிக்குத் துணையாகக் காமெடி நடிகர் வந்து சுவாரஸ்யம் கூட்டிய தமிழ் படங்களில் நான் சிகப்பு மனிதன் குறிப்பிடத் தக்க ஒன்று. செந்தில் பூச்சி மீசையும், துருத்திய தொப்பையுமாக வந்து நகைச்சுவைக்கு மேலும் நகைச்சுவை கூட்டுகிறார் என்று சொல்லலாம்.
பாக்யராஜ்க்கும் செந்திலுக்கும் இடையிலான காட்சிகள் நல்ல நகைச்சுவையோடு ரசிக்கும் படி அமைக்கப்பட்டிருக்கின்றன.
இரவானால் சமுதாயக் கண்காணிப்பாளனாக, தூக்கம் தொலைத்துத் தொடர் வேட்டையில் ஈடுபடுகிறார். தன் வீட்டுக்கு வந்த கும்பலில் மீதம் இருப்பவர்களைத் தொடர்ந்து தேடுகிறார் விஜய்.
இதற்கிடையில் சிங்காரம் படி படியாகத் தன் விசாரணையில் முன்னேறுகிறார்.
அதே சமயம் விஜயால் வேட்டையாடப் படும் வில்லன் கும்பலும் ராபின் ஹூட் யார் என்று ஓரளவிற்கு அனுமானம் செய்து விடுகிறார்கள்.

ராபின் ஹூட் ஆன விஜய் தன் பழிவாங்கும் படலத்தின் நிறைவு கட்டத்தை மெல்ல மெல்ல நெருங்குகிறார். வில்லன் கூட்டம் விஜய் தான் ராபின் ஹூட் என்று அறிந்து அவரைக் கொல்ல முடிவெடுக்கிறார்கள். சிங்காரம் விஜய் தான் ராபின் ஹூட் என்று உறுதி செய்தும், இறுதிக் கட்ட மோதலை நடக்க விட்டுப் பார்க்க முடிவு செய்கிறார்.
இந்த மும்முனை முடிச்சுகளும் திரைக்கதையை இறுக்கிப் பிடிக்க, ராபின்ஹூட் விஜய் தன் பழி வாங்கும் படலத்தை முடித்தாரா? அதைச் சிங்காரம் தடுத்தாரா? வில்லன்களால் விஜய்க்கு மேலும் ஆபத்து ஏதாவது வந்ததா ? என்பதை இயக்குநர் பரபரப்பு குறையாமல் படத்தை இறுதி கட்டம் நோக்கி வேகமாய் கடத்துகிறார்.
காட்சிக்குக் காட்சி வசனங்களின் வீச்சு படத்திற்கு மேலும் பலம் கூட்டுகின்றன.
எஸ்.ஏ சந்திரசேகர் 80-களில் எடுத்த படங்களில் நீதி மன்றக் காட்சிகள் வெகு பிரபலம். நான் சிகப்பு மனிதனிலும் கனமான வழக்காடு மன்றக் காட்சிகள் இருக்கின்றன. குறிப்பாக அந்த இறுதிக் காட்சியில் இடம் பெற்றிருக்கும் ஜாலமிகு வாத விவாதங்கள் ரசிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன.
நீதி மன்றக் காட்சிகளை பாக்யராஜ் மொத்தமாகக் குத்தகை எடுத்துக் கலக்குகிறார். முக்கியமாக போலீஸ்காரனின் வாழ்க்கையைப் பற்றி நாலே வரியில் அவர் சொல்லும் கருத்து அட்டகாசம்.. “முதல்ல எச்சரிக்கணும்… கேக்கலைனா தடி எடுக்கணும்… அப்படியும் இல்லைன்னா துப்பாக்கியை எடுக்கணும்.. அதுவும் மேலே முதல்ல சுடணும்… அப்புறம் முட்டிக்கு கீழே சுடணும்…அதுக்குள்ளே எங்களை சமாதி ஆக்கிருவாங்க..அப்புறம் ஒரு தங்கப்பதக்கம் கொடுப்பாங்க.. போலீஸ்காரன் பொண்டாட்டி அதை வச்சுட்டு என்ன பண்ணுவாங்க.. ”
கோர்ட்டில் அவர் அடிக்கும் ஒன் லைன் நகைச்சுவை அனைத்தும் பூவாணம்.. புன்னகைக்க வைக்கும் தோரணம்.
இறுதியாக முடிக்கும் வசனம் ” இந்த நாட்டில் உள்ள மக்களின் தலை விதியை திருத்தலாம்ன்னு நினைச்சேன் முடியல. அதான் இப்போ அவங்க முடியையாவது திருத்தலாம்ன்னு கடை திறக்க போறேன்… “ ஒரே நேரத்தில் சிரிப்பும் சிந்தனையும் தருவிக்கும் இடம் அது.
இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகரின் குடும்பமும் இந்தப் படத்தில் நிறையவே திரை பங்களிப்பு செய்து உள்ளனர். இயக்குநர் மனநல மருத்துவமனைப் பணியாளராக வருகிறார். சின்ன வேடம் என்றாலும் சிறப்பான வேடம்.
இயக்குனரின் மைத்துனரும் பின்னணிப் பாடகருமான SN.சுரேந்தர் இந்தப் படத்தில் அறிமுகம். டைட்டில் பாடலில் வாயசைப்பவர் இவரே. இது தவிர டைட்டில் கார்ட் போடும் போது குழந்தை நட்சத்திரமாகத் தோன்றுவது நடிகர் இளைய தளபதி விஜய். கையில் அட்டை பிடித்து வந்து போகிறார். ரஜினியோடு இந்தப் படப்பிடிப்பில் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தள வைரல் வரலாறு.
படத்தின் இன்னொரு முக்கிய அம்சம் ரஜினி பிரொபஸர் விஜயாக மாணவர்களோடு உரையாடும் கல்லூரி வகுப்பறை காட்சிகள். அதில் ரஜினி சொல்லும் கருத்துக்கள் இன்றைய மாணவ சமுதாயத்துக்கும் ஏற்றது.
கடவுள் சில விஷயங்களைத் தானே செய்வார், சில விஷயங்களை நம்மை மனிதர்களைக் கொண்டு செய்வார்.. இந்தக் கருத்தை ரஜினி சொல்வதைக் கேட்கும் போது அடடே ஆன்மீக அரசியல் எல்லாம் அப்போவே பேசியிருக்காரே என்று எண்ண வைக்கிறது.
சண்டை மற்றும் பாடல்கள்
படத்தின் சண்டைக் காட்சிகள் அதிரடி அட்டகாசங்கள். ஆவேசம், ஆக்ரோஷம் வேகம் என அனைத்தும் கலந்து பார்வையாளர்களை பதற உதற சிதறடிக்கும் வகையில் ஆக்சன் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. சத்யராஜ், போலீஸிடம் இருந்து தப்பி ஓடும் காட்சி நல்லதொரு ஸ்டண்ட் காட்சி. போலீஸ் துரத்த, சத்யராஜ் அம்பாசிடர் கார்களின் இடையே தப்பித்து ஓடும் காட்சியில் ஒரு அம்பாசிடர் கார் கண்காட்சியே நடத்தி இருப்பார்கள். அத்தனை வண்ணமும், அத்தனை வகையும் காண முடியும்.
ரஜினி, சத்யராஜ் இடையிலான மனநல மருத்துவமனை சண்டைக்காட்சி வெகு எதார்த்தம். படுவேகம். அதிக அளவில் சண்டைகள் இரவு நேரங்களில் படமாக்கப்பட்டிருப்பது ஒரு தனிச்சிறப்பு
படத்தின் ஒரு முக்கிய அம்சம் இசை. பாடல்களைப் பற்றி குறிப்பிடும் முன் பின்னணி இசை பற்றி அவசியம் பேச வேண்டும். சண்டைக் காட்சிகளில், துப்பாக்கி வெடிக்கும் சத்தம் ஊடே ஒலிக்க ராஜவின் இசை அதிரடி சண்டைகளுக்கு மேலும் ஆக்ரோஷம் சேர்த்திருக்கும்.
அதுபோல ராபின் ஹூட் ஆக ரஜினி மாறி நிற்கும் நேரங்களில் பின்னணியில் ஒலிக்கும் தீம் இசை மாஸ் ஒலிச் சேர்க்கை. படம் பார்ப்பவர்களின் நரம்புகளிலும் பழி வெறி ஏற்றுகிறது.

படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒரு வகை.
“எல்லாருமே திருடய்ங்க தான்.. ” இக்காலத்துக்கும் பொருந்தும் சமூக கருத்துக்கள் நிறைந்து நிற்கும் பாடல். வரிகள் வாலி. பாடி இருப்பது இளையராஜா
“பெண்மானே சங்கீதம் பாட வா…” எஸ்பிபி -ஜானகி குரலில் இதயத்தை வருடும் இனியதொரு காதல் பாடல். எழுதி இருப்பது மு.மேத்தா
“வெண்மேகம் விண்ணில்…” அண்ணன் தங்கைப் பாசத்தை வார்த்தைகளில் கோர்த்து இசையால் வார்த்து எடுக்கப்பட்ட ஒரு பாடல். புலைமைப்பித்தனின் பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்து இருப்பது எஸ்பிபி. குறிப்பாக இந்தப் பாடலின் சோக வடிவம் ஒன்றும் படத்தில் உண்டு. எஸ்பிபி யின் குரல் மெழுகாய் உருகி இருக்கும். அவ்வளவு உருக்கமாகப் பாடியிருப்பார். கேட்கும் உள்ளங்கள் கனத்துப் போவது உறுதி.
அதிலும் அழுத்தி சொல்லும் ஒரு வரி உண்டு.. “கண்ணே நான் அண்ணன் அல்ல உன்னை ஈன்ற அன்னை நானே… ” இந்த வரியில் கலங்கிப் போகாத பாசமலர்கள் இருக்க முடியாது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பாசமலர் என்று ஒரு முழுப் படத்தில் கொட்டிக் காட்டிய உழைப்பை இந்த ஒரு பாடல் காட்சியில் ரஜினி திரையில் கொண்டு வந்திருப்பார். ஒவ்வொரு கண் அசைவிலும், முக பாவத்திலும் பாச உணர்வுகளைப் பூ மாரியாகப் பொழிந்து இருப்பார் ரஜினி. ஒவ்வொரு தங்கைக்கும் இப்படி ஒரு அண்ணன் தனக்கு வேண்டும் என்ற ஆசையைக் கொடுத்த பாடல் இது.
“காந்தி தேசமே…” 80 களின் அரசியல் ஏக்கத்தைப் பதிவு செய்திருக்கும் ஒரு அருமையான பாடல். எழுதி இருப்பது வைரமுத்து. இந்தப் பாடலின் காட்சிகளின் தேச அரசியலும், தமிழக அரசியலும் காட்சிப் படுத்தப்பட்டிருக்கும். பாடலின் முடிவில் தாயைக் காக்க வா… தர்மம் காக்க வா… என்ற வரிகளின் பின்னணியில் புரட்சித் தலைவரை காட்டுவது அன்றைய தமிழக அரசியல் ஆளுமைக்கான மரியாதையாகப் பார்க்கலாம்.
நட்சத்திரங்கள்
கோவை சரளா, வீ எஸ் ராகவன், வீர ராகவன், வெண்ணிற ஆடை மூர்த்தி, கோபாலாகிருஷ்ணன், காஜா ஷெரிப் போன்றோர் சின்ன சின்ன வேடங்களில் வந்து போகிறார்கள். அத்தகைய சிறிய வேடத்திலும் பதியும் படியான ஒரு பாத்திரம் “அரசியல்வாதி” தாம்பரம் தங்கக்கண்ணன். கதைக்குத் திருப்புமுனை தரும் ஒரு பாத்திரப்படைப்பு. இதை ஏற்று சிறப்பாக நடித்திருப்பவர் தேங்காய் சீனிவாசன். கொஞ்சமே வந்தாலும் நிறைவாகச் செய்திருக்கிறார்.
ரஜினி மாணவர்கள் மதிக்கும் ஆசானாக..
குடும்பம் பேணும் நல்ல மனிதனாக..
கவுரமான காதலனாக…
தன் பழி வாங்கும் உணர்வினால் குற்ற உணர்வு கொண்ட ஒரு சாமான்யனாக..
கொலை வெறியில் திரியும் சிகப்பு மனிதனாக…
இப்படி மாறுபட்ட உணர்வுகளின் தொகுப்பாகத் தன் நடிப்பை வெகு நேர்த்தியாக வெளிப்படுத்திய படங்களில் ஒரு முக்கியமான படம் நான் சிகப்பு மனிதன்
இது மக்களுக்கான வணிக சினிமா, மக்களுக்கான ஒரு சூப்பர் ஸ்டார் வழங்கிய ஒரு படம். ரஜினியின் சூப்பர் ஸ்டார் ஹூட் பயணத்தில் இந்த ராபின் ஹூட் மறக்க முடியாதவன்.
‘ஆஜ் கா ஆவாஸ்’ என்ற பெயரில் இந்தியில் வந்த படத்தின் தமிழாக்கம் தான் இந்த படம்.
இந்த தெலுங்கில் Mr.விஜய் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கன்னடத்தில் ‘மகாத்மா’ என்ற பெயரில் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.