தமிழகத்தில் கிராமங்கள் உயிர்ப்போடு வாழ்ந்து கொண்டிருந்த காலம் அது. கிராமங்களில் வலியவன், எளியவன் போராட்டங்கள் பெருமளவில் நடந்து கொண்டிருந்தன.
பணம் படைத்தவர்கள், அதிகாரங்களைக் கையில் வைத்துக் கொண்டு இல்லாதவர்கள் மேல் அடக்கு முறைகளை ஏவி விட்டுத் தங்கள் வாழ்க்கையை வளப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்படிப்பட்ட அதிகார மையங்களோடு மோதி, நியாயத்தின் பக்கம் நின்றவர்களைத் தமிழ் சமுதாயம் நாயகர்களாகக் கொண்டாடியது. அதற்குத் தமிழ் சினிமாவும் விதி விலக்கல்ல.
கடவுளை ஒத்த குணநலன்கள் தான், தீயவர்களை எதிர்க்கும் நாயகனின் அடையாளம் என இலக்கணம் வகுத்து வைத்து இருந்தது தமிழ் சினிமா. ரசிகர்கள் கடவுள் எனத் தள்ளி நின்று கையெடுத்துக் கும்பிட்டுக் கொண்டிருந்த நாயகனை சாமானியனும் தோளில் கைபோட்டுத் தோழன் எனக் கொண்டாட வைத்த சாகசக்காரர் ரஜினி என்றால் அது மிகையாகாது.
“கோபிநாத் அவன் மூளை
கம்ப்யூட்டரையே மிஞ்சிடும்.”
காவல் துறை உயரதிகாரி ஒருவர் நாயகனுக்குக் கொடுக்கும் முன்னுரை இது. கணிப்பொறி தமிழர்களுக்கு அவ்வளவாக அறிமுகம் ஆகாத காலமது. அந்தக் காலத்தில் நாயகனுக்கு இப்படி ஒரு அறிமுகம் கொடுக்கப்பட்ட படம் அன்புக்கு நான் அடிமை.
பரபரப்பு, விறுவிறுப்பு இரண்டிற்கும் பஞ்சமிருக்காது என்ற உத்திரவாதம் சொல்லாமலே புரியும் படி படத்தின் ஆரம்ப காட்சிகள் துவங்குகின்றன. இரண்டு சிறுவர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதில் இளையவன் சுட்டி, மூத்தவன் கொஞ்சம் தத்தி என்று கதையின் முக்கியப் பாத்திரங்களைப் பார்வையாளர்களுக்கு ஒரு சிறு குறிப்பின் மூலம் அறிமுகம் செய்து விடுகிறார்கள். கதை எதோ ஒரு புள்ளியில் இந்த சகோதர சிநேகத்தில் மையம் கொள்ளப் போகிறது என்ற எதிர்பார்ப்பை நமக்கு ஆரம்பக்காட்சிகள் ஏற்படுத்தி விடுகின்றன.
ரஜினி முகம் காட்டும் அறிமுகக் காட்சியான சிறை விட்டு திரும்பும் காட்சி இன்றைய கபாலிக்கு எல்லாம் முன்னோடி.
அண்ணனுக்காகத் தம்பி ஒரு கொலைப் பழி ஏற்றுத் தன் வாழ்க்கைப் பாதையை மாற்றிக் கொள்கிறான். படிப்பு வாசனையறியாத பொறுப்பு ஏதுமின்றி, இலக்கின்றி சுற்றித் திரியும் இளைஞன் தான், கணினியை விட வேகமாக வேலை செய்யும் மூளைக்குச் சொந்தக்காரன் கோபிநாத். தீயவர்களின் பிடியில் சிக்கி சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்டு சிறை செல்கிறான். கோபி சிறையில் இருந்து திரும்புவதில் துவங்கி விரிகிறது படம்.
ரஜினி முகம் காட்டும் அறிமுகக் காட்சியான சிறை விட்டு திரும்பும் காட்சி இன்றைய கபாலிக்கு எல்லாம் முன்னோடி.
சிறையில் இருந்து வெளியே வரும் கோபிநாத், தனக்குப் பழக்கமான திருட்டுத் தொழிலைத் தொடர முனைகிறான். ஒரு வங்கியைக் கொள்ளையடிக்க தெருவோரம் தங்கி இருக்கும் கழைக்கூத்துக் கலைஞர்கள் உதவியை நாடுகிறான்.
அந்தக் கூட்டத்தில் தான் நாயகி இருக்கிறாள். அவளுக்கொரு வஞ்சம் தீர்க்கும் திட்டம் இருக்கிறது. அதற்கு கோபியைப் பயன்படுத்த அவள் அவனோடு ஒப்பந்தம் பேசுகிறாள்.
ஆனால், வங்கிக் கொள்ளைத் திட்டம் போலீசால் முறியடிக்கப்பட்டு கோபி தப்பி ஓடுகிறான். இதுவரை படம் பரபரப்புக்குப் பஞ்சம் இன்றிப் பறக்கிறது. கதை நகரத்தில் நகர அங்கு ஒரு வில்லன் வருவான். அவனோடு ரஜினி மோதுவார் அல்லது போலீஸ் விரட்ட, ரஜினி போலீஸுக்குத் தண்ணி காட்டுவார் என ரசிகன் கணக்கு போட்டுக் கொண்டிருக்க, இயக்குனர் படத்தை ரஜினியோடு ரயிலில் ஏற்றி ஒரு கிராமத்துப் பக்கம் அனுப்பி வைக்கிறார்.
ரயிலில் ஒரு தனித் திருப்பம் வருகிறது. ரஜினி ஓடும் ரயிலில் துள்ளி ஏறும் கணம் முதல் படத்திலும் ஒரு துள்ளல் சேர்ந்து படம் இன்னும் வேகமெடுக்கிறது.
ரவுடியாக ரயிலில் ஏறும் ரஜினி இன்ஸ்பெக்டர் ரஜினியாக இறங்குகிறார். அவருக்குத் துணையாக காமெடி போலீசாக தேங்காய் சீனிவாசன், பழம் பெரும் நகைச்சுவை நடிகர் கருணாநிதி, மற்றும் உசிலை மணி ஆகியோர் களம் இறக்கப்படுகிறார்கள்.
ரவுடி உடல் மொழியில் இருந்து, பதமாக போலீஸ் உடல்மொழிக்கு மாறும் அந்தக் காட்சி, ரஜினியின் நடிப்புத்திறனுக்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு. சிரிப்புப் பொங்கல் வைத்து, சண்டைக் காட்சிகளில் சிலிர்ப்புக் காட்டி படம் ரஜினி படமாய் நகர்கிறது.
துறுதுறுப்பான நாயகன் இருந்தா மட்டும் போதுமா ? அதற்கு ஈடு கொடுக்க ஒரு கொடூரமான வில்லன் வேண்டாமா?
கிராமத்து மக்களை வாட்டி வதைக்கும் நரித்தனமான பெரிய மனிதன் நாகப்பன். இவன் தான் கோபிநாத் சமாளித்து ஜெயிக்க வேண்டிய வில்லன். ஆறடிக்கும் அதிகமான உயரம், கட்டுமஸ்தான உடல், மிரட்டும் முகம், கடு கடு பார்வை, சுடு சுடு சொல் என கதறடிக்கும் வில்லன் வேடம் போட்டவர் “கராத்தே ” மணி. கனக்கச்சிதம். தன்னை எதிர்ப்பவர்களுக்கு சீட்டு போட்டு நாள் குறிக்கும் போதாகட்டும், தன்னோடு இருக்கும் தன் சேவகர்கள் தோற்று நிற்கும் போது அவர்களை நிராகரிப்பது ஆகட்டும் அலட்டல் இல்லாத வில்லத்தனம்.
தன் வாழ்க்கையில் எந்த ஒரு பொறுப்பும் இன்றி ஓடிக் கொண்டிருக்கும் மனிதனை, அன்பு எவ்வாறு மாற்றுகிறது என்பது திரைக்கதையின் அடுத்த கட்டம். நாகப்பனின் கொடுமைகளுக்கு கட்டுப்பட்டு இருக்கும் கிராம மக்களுக்காக குரல் கொடுக்கிறான் கோபிநாத். உண்மையான ஒரு காவல் அதிகாரி செய்ய வேண்டிய வேலைகளைக் கடமையெனக் கொண்டு செயல் ஆற்றுகிறான்.
நாகப்பன் கூட்டத்தின் ஆட்டத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அடக்குகிறான். தன் படைகளை இழக்கும் நாகப்பன், கோபி மீது வஞ்சம் தீர்க்கத் தருணம் பார்த்துக் காத்து நிற்கிறான்.
ஆரம்ப கட்டத்தில் கோபிக்கு உதவும் கழைக்கூத்தாடிப் பெண் இந்த கிராமத்தைச் சேர்ந்தவள். நாகப்பனால் தன் தகப்பனை இழந்தவள். அவனை பழி தீர்க்கத் தான் கோபியின் உதவியை முன் நாடியவள். நாயகி வேடத்தில் ரதி அக்நிஹோத்ரி. ஆட்டம் பாட்டம் கவர்ச்சி கூட கொஞ்சமே நடிப்பு என்று வாய்ப்பு அவருக்கு.
பாடலில் வழியும் காதல் திரையில் விரிகிறது. நாயகியின் அன்பில் கோபி கட்டப்படுகிறான்.அந்த கிராமத்தின் வாழ்வுக்கு உழைக்க முடிவு செய்கிறான்.
இயக்குனர் இந்த இடத்தில் இன்னொரு முடிச்சு போடுகிறார். கோபி இருக்கும் ஊருக்கு, அவன் யாராக நடித்துக் கொண்டிருக்கிறானோ, அந்த காவல் அதிகாரியின் குடும்பம் வருகிறது. ஒரு கட்டத்தில் அந்தக் காவல் அதிகாரி தன் அண்ணன் என உணர்ந்து கோபி அதிர்கிறான். ரயிலில் இருந்த தன் அண்ணனுக்கு தன்னால் நேர்ந்த கொடுமையால் மனம் வெதும்புகிறான்.
அந்த குடும்பத்தின் அன்புக்கு அடிமையாகிப் போன கோபி அடுத்து அடுத்து என்ன செய்கிறான்?
தன்னை நம்பி நிற்கும் கிராமத்து மக்களை நாகப்பனின் அடாவடித்தனங்களில் இருந்து முழுவதுமாக காப்பாற்றினானா?
கோபி போட்ட போலீஸ் அதிகாரி வேடம் என்னவாகிறது?
இந்த கேள்விகளுக்கு லாவகமாவும் சுவாரஸ்யமாகவும் ஓரளவிற்கு ஏற்றுக் கொள்ளும்படியான விடைகளைத் தருகிறார் இயக்குனர்.
இயக்கம் தியாகராஜன். தேவர் பிலிம்ஸ் தயாரிப்புகளின் ஆஸ்தான இயக்குனரும் கூட. வணிக ரீதியான கட்டமைப்பைச் சிறப்பாக அமைத்துக் கொடுத்து இருக்கிறார்.
இசை இளையராஜா. குறிப்பாக சண்டைக் காட்சிகளுக்கு ராஜாவின் இசை பெரும் பலம் சேர்க்கிறது. அந்த இசையின் துடிப்பு சண்டையின் விறுவிறுப்பைக் கூட்டிக் காட்டுகிறது என்றே சொல்லலாம்.
காட்டிலொரு சிங்கக்குட்டியாம்… எண்பதுகளில் வளர்ந்த குழந்தைப் பட்டாளம் மறக்க முடியாத ஒரு பால்ய காலப் பாட்டு. கவிஞர் வாலி பாடல் வரிகளிலே படத்தின் கதையைச் சொல்லி முடித்திருப்பார். இளையராஜாவின் இசை அந்தப் பாடலை மேலும் அழகுபடுத்தி இருக்கும்.
ரஜினியின் அண்ணன் வேடத்தில் விஜயன், மிடுக்கு பாசம் கலந்த நடிப்பு. சுஜாதாவுக்கு கனிவான அண்ணி வேடம். கொடுத்ததைச் செய்திருக்கிறார்.

சுருளிராஜன், மேஜர் சுந்தர்ராஜன், கோபாலகிருஷ்ணன், அசோகன் போன்றவர்களும் படத்தில் இருக்கிறார்கள்.
தேவர் பிலிம்ஸ் ஆயிற்றே…ரஜினியே இருந்தாலும் , அவர்களுக்கு படத்தில் விலங்குகளின் பங்களிப்பு இருந்தே ஆக வேண்டும். இருக்கிறது ஒரு ஆடு. கொஞ்சமே என்றாலும் ரசிக்கும் படி வித்தை காட்டுகிறது.
படம் வந்த வருடம் 1980. ரஜினிகாந்த்… இந்தப் பெயர் படத்துக்குப் படம் உச்சம் தொட்டுக் கொண்டிருந்த நேரம்.
கூர்மையான வசனங்களை எழுதியவர் தூயவன். அதை ரஜினி என்ற கலைஞன் மக்களிடம் கொண்டு சேர்த்த விதம் அருமை.
வேகம் படு வேகம் என திரையில் தீயை பரவ விடும் ரஜினியின் காந்த யுகத்தின் ஆரம்ப அலைகளை ‘அன்புக்கு நான் அடிமை’ படத்தில் பார்க்க முடியும்.
கைநாட்டாக ஸ்டைலா அறிமுகம் ஆகும் கம்பீரம். சண்டைக் காட்சிகளில் ஆக்ரோஷ முக பாவங்கள், காதலில் கம்பீரம் குலையாது குழையும் அழகு, காவல் நிலையத்தில் அடிக்கும் லூட்டி, பின் கடமை உணர்ந்து கொடுமைக்கு எதிராக நிமிர்ந்து எழும் அந்தப் பெரும் உயரம் எனத் தனித்தனியாக மிளிர்ந்திருப்பார் ரஜினி எனும் நடிகர். நடிப்பை நடிப்பு என வேறுபடுத்திக் காட்டாமல், பாத்திரத்தோடு இயல்பாய் ஒன்றிப்போவது தான் ரஜினி பாணி.
அன்புக்கு நான் அடிமை – ரஜினி கட்டி எழுப்பிய சாம்ராஜ்யத்தின் அடிக்கற்களில் முக்கியமான கல்.