[ரஜினி டூ சூப்பர் ஸ்டார்]: ‘பில்லா’ திரை விமர்சனம்

Date:

தேவ் எழுதி வெள்ளி தோறும் வெளிவரும் 80’s: ரஜினி to சூப்பர் ஸ்டார்  எனும் இந்த தொடரின் பதிமூன்றாவது திரைப்படமாக ‘பில்லா’.

அதுவரை வணிகத் தமிழ் படங்களில் நாயகனுக்கு என்று பொதுவான ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டிருந்தது. நாயகன் நல்லவன், அவன் செய்யும் தொழில் நாணயம் மிகுந்தும் நேர்மையானதுமாக இருக்கும். அதில் வரும் கஷ்டங்களைத் தர்மத்தின் வழி தவறாது எதிர் கொண்டு நாயகன் வெல்வது தான் மரபு.

இப்படிப் படங்களைத் தொடர்ந்து ரசித்து வந்த ரசிகர்களுக்கு பில்லா ஒரு ஆச்சரியத்தை அள்ளித்  தெளித்தது.

உள்ளூர் போலீஸ் துவங்கி உலக போலீஸ் வரை தேடும் ஒரு குற்றவாளி தான் நாயகன், அவன் பெயர் தான் படத்துக்குத் தலைப்பு.  முதன் முதலாக ரஜினிகாந்த் ஏற்று நடித்த பாத்திரத்தின் பெயரே  படத்திற்கும் தலைப்பானது பில்லாவில் தான். பின்னாளில் பல படத் தலைப்புகள் இதே வரிசையில் வந்து சரித்திர சாதனைகள் படைத்தது எல்லாம் நாடறிந்த செய்தி.

hqdefault 1
படம் – வெளியான ஆண்டு – 1980

கதை – சலீம்-ஜாவித் ( இந்தியில்  பிரபல நடிகர் அமிதாப்பச்சன் நடிக்க வெளிவந்து சக்க போடு போட்ட “Don” என்ற படத்தின் தமிழாக்கமே பில்லா )

இயக்கம் – ஆர்.கிருஷ்ணமூர்த்தி

இசை – எம் எஸ் விசுவநாதன்

பாடல்கள் – கவியரசு கண்ணதாசன்

தயாரிப்பு – பாலாஜி ( சுரேஷ் ஆர்ட்ஸ் )

ஒளிப்பதிவு – நாதன்

கதைச் சுருக்கம்

பில்லாவின் துவக்கக் காட்சிகளே பெரும் பரபரப்பில் தான் ஆரம்பிக்கும். சீறி வரும் வேன் நிற்க, கண்ணாடியில் முகம் பார்த்து, பைப் புகைய டேவிட் பில்லாவாக ரஜினி திரையில் தோன்றும் போதே படம் ஒரு வித மயக்கத்தில் ரசிகனை ஆழ்த்தி விடுகிறது.

எதிரிகள் கூட்டமாய் நிற்க, தனியாளாக பில்லா அவர்களை எதிர்த்து அசத்தலாகத் தப்பிக்கும் போதே.. அட யார்டா இவன்? என ரசிகன் நிமிர்ந்து அமர்கிறான்.

காவல் துறை உயரதிகாரிகள் கூடி பில்லாவைப் பிடிக்க ஆலோசனை செய்கிறார்கள். பில்லா எவ்வளவு கொடூரமானவன் எனப் பதிவு செய்கிறார் இயக்குநர். பில்லாவின் கூட்டமும்  பார்வையாளனுக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. கடத்தல், கொள்ளை உள்ளிட்ட சட்ட விரோதச் செயல்களில் கைதேர்ந்த கூட்டம் அது என நிறுவப்படுகிறது.

பில்லா கொஞ்சமும் ஈவு இரக்கமற்றவன். தன்னைக் காட்டி கொடுக்க நினைத்த தன் கூட்டத்தைச் சேர்ந்தவனைச் சுட்டு கொல்கிறான். கொல்லப்பட்டவனின் காதலி பழி வாங்க வந்து பில்லாவால் கொல்லப்படுகிறாள். இந்தக் கதையின் வழியே நாயகி அறிமுகமாகிறாள். அதாவது பில்லாவால் கொல்லப்பட்டவன், தங்கை தான் படத்தின் நாயகி.

பில்லாவின் கூட்டத்தில் அவள் சேருகிறாள். அதற்கு அவள் சில பல தயாரிப்புகள் செய்து நடனமாட வேண்டியிருக்கிறது. முடிவில் பில்லாவின் வட்டத்திற்குள் தன்னை இணைத்துக் கொள்கிறாள்.  அவள் இலக்கு பில்லா. அவனை நெருங்கி, அவனைக் கொன்று தன் பழி தீர்க்கத் துடிக்கிறாள்.

maxresdefault 1கதையின் போக்கு ஒரு புறம் இப்படி போக, மறுபுறம் பில்லாவைப் பிடிக்க போலீசும் கடும் முயற்சிகளில் இறங்குகின்றனர். பில்லாவைப் பிடிக்க போலீஸ் நடத்தும் அந்தத் துரத்தல் காட்சியும் அது படமாக்கப்பட்டிருக்கும் விதமும் அருமை. கிட்டத்தட்ட பத்து நிமிடங்களுக்கு அந்தக் காட்சிகள் படத்தில் வரும்.  மும்பையிலும் சென்னையிலும் எடுக்கப்பட்டு இருக்கும்.

மும்பையில் கார் துரத்தல் காட்சிகள் அதிக மெனக்கெடலோடு படமாக்கப் பட்டிருப்பது திரையில் தெரியும்.  அந்தக் காலத்தில் அண்ணா சாலை பரபரப்புக்குப் பஞ்சமின்றி காட்சி தருவது கண்களுக்கு விருந்து.  அதிலும் அந்த சாலை வழியே ரஜினி குதிரையில் கம்பீரமாய் விரையும் காட்சி பிரமாதம்.

சென்னையின் அழகிய பாலங்களில் ஒன்றான நேப்பியர் பாலத்தில் அந்த துரத்தல் காட்சி முடிவுக்கு வரும். திரைக்கதையில் ஒரு முக்கியமான முடிச்சு விழும் இடம் அது. டி எஸ் பி  அலெக்சாண்டரின் துப்பாக்கியில் இருந்து கிளம்பும் தோட்டா பயங்கர கிரிமினல் ஆன பில்லா மீது பாய,  அவன் தப்பிக்க கிடைத்த கடைசி வழி என கூவம் ஆற்றில் குதிக்கிறான்.  கூவம் சென்னைவாசிகள்  குளிக்கும் அளவுக்கு சுத்தமாக இருந்த காலம் அது.

பில்லாவைத் தேடும் பணி தொடர.. எப்படியும் பில்லா தப்பியிருப்பான் எனப் பார்க்கும் நாமும் திடமாக நம்பிக் கொண்டிருக்கையில், நம் நம்பிக்கையைக் காப்பாற்றும் வண்ணம், டிஎஸ்பி யின் காரின் பின் சீட்டில் இருந்து நனைந்த உடையில் கையில் துப்பாக்கியோடு எழும்பி அமர்கிறான் பில்லா… “சாவுக்கே குட் பை சொல்லுற திறமை இந்த பில்லாவுக்கு இருக்கு சார்.”

நாமும் சபாஷ் பில்லா என சொல்லி கைதட்டும் முன் பில்லாவின் தலை சரிகிறது. பில்லாவின் கதையை முடிக்கிறார்கள்.

என்னப்பா இப்படி செய்துட்டாங்களேன்னு நாம யோசிக்கும் போதே, இன்னொரு ரஜினி திரையில் தோன்றுகிறார்.  இவர் பெயர் ராஜப்பா.

imagesபெண்மையின் நளினம் பொங்க ராஜப்பா நடக்கும் நடையும், உடல் மொழியும் அபாரம். தெருவில் ஆடியும் பாடியும் பிழைக்கும் கூத்து கலைஞர் இந்த ராஜப்பா.  அவனை நம்பி இரண்டு வளர்ப்பு பிள்ளைகள் இருக்கிறார்கள். பில்லாவோடு உருவ ஒற்றுமை கொண்ட ராஜப்பா டி எஸ்பி அலெக்சாண்டாரின் கண்களில் சிக்க, போலீஸ் மனம் வேறு ஒரு திட்டம் போடுகிறது.

பில்லாவின் மரணம் உலகத்துக்குத் தெரியாத நிலையில்,  அவனைப் போல் ஒருவன்.  அவனை பில்லாவாக்கினால் பல காரியங்களை சாதிக்கலாம் என எண்ணுகிறார் அலெக்ஸ்சாண்டர்.  முக்கியமாய் பில்லா கூட்டத்தில் உள்ள முக்கிய நபர்கள் குறித்த தகவல்களை ஆதாரத்தோடு திரட்டி  பொறி வைத்து பிடிக்கலாம் என கணக்கு போடுகிறார்.

முதலில் இதற்கு ஒப்புக் கொள்ள மறுக்கிறான் ராஜப்பா. தன் பிழைப்பும் கெடும் தன்னை நம்பி இருக்கும் ஆதரவற்ற பிள்ளைகளின் வாழ்வும் கெடும் என எடுத்துரைத்து ஒதுங்கப் பார்க்கிறான். அலெக்சாண்டார் பக்குவமாக பேசி அவன் மனத்தை கரைக்கிறார். ராஜப்பா சம்மதிக்கிறான்.

திரைக்கதை மீண்டும் குதிரை ஏறி பெரும் ஓட்டம் எடுக்கிறது. ராஜப்பா பில்லாவாக மாற்றப்படுகிறான். பில்லாவின் கூட்டத்தில் பில்லாவாக நுழையும் ராஜப்பா அலெக்சாண்டரின் ஆணைப்படி வேலை பார்த்து வருகிறான். கூட்டத்தினரின் சந்தேகப் பார்வைகளை சாமர்த்தியமாகத் தவிர்த்து பில்லா தான் எனப் பெயர் எடுக்கிறான்.

இங்கு தான் இன்னொரு சுவாரஸ்யம் இருக்கிறது. தன் அண்ணனைக் கொன்றவனைப் பழி வாங்க காத்திருக்கும் நாயகி ராதாவும் ராஜாப்பாவை பில்லா என்று நம்பி விடுகிறாள். தன் முயற்சிகளைத்  தொடருகிறாள்.  அவளிடம் இருந்து ராஜப்பா விதி வசமாய் தப்புகிறான்.

படம் விறுவிறுப்பு குறையாமல் நகர்கிறது. ஒரு கட்டத்தில் தான் யார் என்பதை ராதாவுக்கு ராஜப்பா வெளிப்படுத்துகிறான்.  ராஜப்பாவுக்கும் ராதாவுக்கும் காதல் மலர்கிறது.  வேகமாய் வளர்கிறது.  ராஜப்பாவின் முயற்சிகளில் ராதாவும் துணை நிற்கத் துவங்குகிறாள்.

அடுத்து என்ன என்று நாம் ஆர்வமாகும் நிலையில் திரைக்கதையில் இன்னொரு திருப்பம் நிகழ்கிறது.  ராஜப்பா பில்லாவாக மாற்றிய சூத்திரதாரி ஆன அலெக்சாண்டர் கொல்லப்படுகிறார். இப்போது ராஜப்பா பில்லாவாக நிரந்தரமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.

காலத்தின் கட்டாயம்,  எங்கோ நிம்மதியாகக் கூத்துக் கலைஞனாக வாழ்ந்து வந்த ராஜப்பா தற்சமயம் பில்லா என்ற பெருங்குற்றவாளியின் முத்திரையோடு இருக்கிறான். அவன் முன் இரண்டு சவால்கள் விஸ்வரூபமெடுத்து நிற்கின்றன.ஒன்று தான் பில்லா அல்ல என்று நிரூபிக்க வேண்டியது,  அடுத்தது சட்ட விரோத கூட்டம் பற்றி தான் திரட்டிய ரகசியங்களை வெளிக்கொணர்ந்த்து அந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை முடிப்பது.

maxresdefault 3ராஜப்பாவின் இந்த தர்மசங்கடமான நிலையை தெரிந்து கொண்ட கோகுல் நாத் ஆக வரும் இன்டர்போல் உயரதிகாரி அவனை வைத்து சதுரங்கம் ஆடுகிறார்.  அப்பாவி ராஜப்பா, கோகுல்நாத் மூலம் தன் பிரச்சினைகளுக்கு முடிவு கிடைக்கும் என அவரை நம்புகிறான். கோகுல்நாத்தின் உண்மை சொரூபம் என்ன?  அவர் ராஜப்பாவைக் காப்பாற்றினாரா?  ராஜப்பா தன் சவால்களை எப்படி எதிர் கொண்டான்?  அதில் இருந்து மீண்டானா?

இதுவரை விமர்சனக் கதை படித்த உங்கள் மனதில் எழும் இந்தக் கேள்விகளுக்கு பில்லாவின் பரபரப்பான கிளைமேக்ஸில் விடை காத்திருக்கிறது.

நட்சத்திரங்கள்

படத்தில் பெரும் நட்சித்திர பட்டாளம் இருக்கிறது.சிறு சிறு வேடங்களில் வந்தாலும் சிறப்பான பங்களிப்பு செய்து இருக்கிறார்கள். குறிப்பிட்டு சொல்ல வேண்டிய நடிகர்களின் பட்டியலை பார்ப்போமா?

அலெக்ஸாண்டராக வரும் தயாரிப்பாளர் பாலாஜி.  கதையின் முதல் பாதித் திருப்பங்களுக்கு இவரது பாத்திரமே முக்கியக் காரணம் ஆகிறது.  அளவான நடிப்பில் மிளிர்கிறார்.

கோகுல் நாத் ( ஜெகதீஸ் ) என்ற சர்வதேச போலீஸ்காரர் வேடத்தில் வருகிறார், பழம்  பெரும் நடிகர் மேஜர் சுந்தரராஜன். இந்தப் பாத்திரம் கதையின் ரகசியங்களில் ஒன்று.  இந்தப் பாத்திரம் படத்தின் கிளைமேக்ஸ்க்கான பலம்.

ஆர் எஸ் மனோகர் இந்த படத்தில் குறிப்பிட தகுந்த வேடம் ஏற்று இருக்கிறார்.  பில்லாவின் கூட்டாளியாக படம் நெடுக வருகிறார்.  மிரட்டலான வில்லன் இவர்.

இவர்களைத் தவிர கதையில் இன்னொரு முக்கியப் பாத்திரம் ஏற்று இருப்பவர் ஸ்ரீப்ரியா,  பில்லா மீது தீராப் பகையும், ராஜப்பா மீது கொஞ்சும் காதலும் என தன் வேடத்தை அலங்கரித்து இருக்கிறார்.  சண்டைக்  காட்சிகள் எல்லாம் இவருக்கு இருக்கிறது. ரஜினியோடு அதிக படங்களில் நடித்த நடிகைகளில் இவரும் ஒருவர் ஆயிற்றே.

அசோகன்,  கண்ணன்,  தேங்காய் சீனிவாசன், ஏவி எம் ராஜன்  எல்லாருக்கும் திரையில் வந்து போகும் வாய்ப்பு படத்தில் இருக்கிறது. கண நேரம் என்றாலும் கச்சிதம்.

மனோரமா ஆச்சி ராஜப்பாவின் நண்பி வேடத்தில் வருகிறார். இரண்டு பாடல்களிலும் ஒரு சண்டை காட்சியிலும் ரஜினிக்கு பக்காவாகத் தோள் கொடுக்கிறார்.  பார்வையாளகர்களை முகம் மலர செய்கிறார்.

இசை

பில்லாவின் பாடல்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலம் தாண்டிய முத்திரைப் பாடல்கள் வரிசையில் இடம் பெற்றவை.

அதிலும் முக்கியமாக எஸ் பி பி அவர்கள் குரலில் முரட்டுத்தனம் கூட்டி பாடியிருக்கும் “மை நேம் இஸ் பில்லா ” பாடல்., இன்றும் எங்கு ஒலித்தாலும் ரஜினி ரசிகன் நின்று கேட்காமல், பார்க்காமல் நகர மாட்டான். அவ்வளவு பிரபல்யம் பெற்ற பாடல் அது.

அடுத்து “வெத்தலையை போட்டேன் டீ” பாடல், இன்றைய சிறுசுகளையும் எழுந்து ஆட வைக்கும் தாளம் தலைக்கேறும் பாட்டு அது.

maxresdefault 2நாட்டுக்குள்ளே நமக்கு ஒரு ஊருண்டு.. ஊருக்குளே நமக்கு ஒரு பேர் உண்டு ” கவியரசு கண்ணதாசன் அந்த காலகட்டத்தில் ரஜினிகாந்த் அவர்களுடைய வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளை மையப்படுத்தி எழுதிய வரிகளை உள்ளடக்கிய பாடல் அது.  ராஜாப்பாவாக அதில் ரஜினியின் ஆட்டமும் பாட்டமும் அசத்தலாக இருக்கும்.

இது தவிர, “நினைத்தாலே இனிக்கும்” என்ற ஒரு கவர்ச்சிப் பாடல் உண்டு.  இதில் அந்த காலத்து பாலிவுட் கவர்ச்சி நடன மங்கை ஹெலன் ரஜினியோடு ஆடி இருப்பது ஹை லைட்.

ஸ்ரீப்ரியாவுக்கும் ஒரு நடனப் பாடல் உண்டு “இரவும் பகலும் “ பாடல் கண்களுக்கு விருந்து.

எம் எஸ் விஸ்வநாதனின் இசை பாடல்களில் கிறக்கத்தையும், சண்டைக் காட்சிகளில் சிலிர்ப்பையும் கூட்டுகிறது.

M.S.விஸ்வநாதன் இசையில் பில்லா படத்தின் பாடல்களை கேட்டு மகிழுங்கள்.

பில்லா – சில தகவல்கள்

ரஜினி – பாலாஜி வெற்றிக் கூட்டணியின் முதல் படம் பில்லா. அது வரை சிவாஜி கணேசனை வைத்துப்  பல வெற்றிப் படங்களைக் கொடுத்த தயாரிப்பாளர் பாலாஜி.  பில்லா அதிக பொருட்செலவில் உருவான ஒரு படம்.

இயக்குனர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி பின்னாளில் பில்லா கிருஷ்ணமூர்த்தி என்று அழைக்கப்படும் அளவுக்கு பில்லா அவருக்கு புகழ் வாங்கி தந்தது.

பில்லா 80 – களின் துவக்கத்தில் வந்தது. நடிகர் ரஜினிகாந்தின் திரை உலகப் பயணம், சூப்பர் ஸ்டார் மகுடம் நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது அந்த நேரத்தில் தான். அந்த வகையில் பார்த்தால் பில்லா ரஜினிக்கு மிகவும் முக்கியமான படம். ரஜினிக்கு வணிக ரீதியாக மாபெரும் வெற்றியைத் தந்து தனி ஒரு சிம்மாசனம் வழங்கிய படம் அது.  ஒட்டு மொத்தத் தமிழகத்தின் பார்வையும் அவர் மீது நிலைக்கத் துவங்கியது.

maxresdefault 1 1பில்லாவில் ரஜினிக்கு இரு வேடங்கள். ரஜினி முதன் முதலில் இரு வேடங்களில் நடித்த படம் பில்லா தான் என்பது கூடுதல் சிறப்பு. அதே வருடம் வெளியான ஜானியிலும் இரு வேடம், அது இன்னொரு சிறப்பு. ( ‘ஜானி’ திரைவிமர்சனத்தைப் படிக்க இங்கே சொடுக்கவும்.)

பெண்மை கலந்த வேடங்களைப் பின்னாளில் பல நடிகர்கள் செய்து இருந்தாலும் பில்லாவின் ராஜப்பாவே அதற்கு முன்னோடி என்று சொல்ல வேண்டும்.

பில்லா ஒரு அழுத்தமான வேடம்,  அதிகம் பேசாமல் உடல் மொழியால் மட்டும் மிரட்ட வேண்டிய பாத்திரம்.  ராஜப்பவாக வளைந்து, நெளிந்து, குழைந்து, நெகிழச் செய்யும் ரஜினி பில்லாவாக விரைப்பாகவும் முறைப்பாகவும் வேறு பரிமாணம் காட்டியிருப்பார்.  நடிப்பின் உச்சம் அது.

மிதமான ஸ்டைல், இயல்பான நடிப்பு, புன்னகைக்கச் செய்யும் நகைச்சுவைச் சேட்டை,  அதிரடி சண்டை காட்சிகளில் ஆக்ரோஷம் என ரஜினி தன் சூப்பர் ஸ்டார் பொறுப்புக்கான பட்டாபிஷேகத்திற்கு பில்லாவில் நிறையவே உழைத்திருப்பார்.

பில்லா படம் முதலில் இந்தி பின் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் எடுக்கப்பட்டிருக்கிறது.  பின்னாளில் தமிழிலே மறு உருவாக்கமும் செய்யப்பட்டு வெற்றி கண்டது. ஆனாலும், இன்றும் பில்லா என்றால் புலி முக மூடி போட்டு வந்து அதை அகற்றி… மை நேம் இஸ் பில்லா என்று திரையில் சீறிய சூப்பர் ஸ்டார் ரஜினியின் முகமே நம் மனக்கண்களில் விரிந்து நிற்கும். அதுவே ரஜினி என்ற மகத்தான கலைஞரின் வெற்றி.

பில்லா ரஜினிக்கு மட்டுமல்ல ரஜினி ரசிகர்களுக்கும் என்றும் மறக்க முடியாத இனிய நினைவலைகளைக் கொடுக்கும் ஒரு படம். பில்லாவுக்குப் பின் தான் ரஜினி தொடர்ந்து பல படங்களில் கோபக்கார இளைஞர் வேடத்தில் நடித்து தன் வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்தார் என்பது வரலாறு.

பில்லா சூப்பர் ஸ்டார் பயணத்தின் ஒரு முக்கிய மைல் கல்.

DPK Devnath
DPK Devnath
சென்னை வாசி - தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை - தமிழ் இணைய ஆர்வலர்

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
பில்லா ரஜினிக்கு மட்டுமல்ல ரஜினி ரசிகர்களுக்கும் என்றும் மறக்க முடியாத இனிய நினைவலைகளைக் கொடுக்கும் ஒரு படம். பில்லாவுக்குப் பின் தான் ரஜினி தொடர்ந்து பல படங்களில் கோபக்கார இளைஞர் வேடத்தில் நடித்து தன் வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்தார் என்பது வரலாறு. பில்லா சூப்பர் ஸ்டார் பயணத்தின் ஒரு முக்கிய மைல் கல்.[ரஜினி டூ சூப்பர் ஸ்டார்]: 'பில்லா' திரை விமர்சனம்
error: Content is DMCA copyright protected!