1978-ம் ஆண்டு. சர்வ வல்லமை பொருந்திய கதாநாயகன். வேலியிடப்பட்ட மாளிகைக்குள் நாயகி, காதல், சண்டை என படங்கள் வந்துகொண்டிருந்த நேரத்தில் வெளியானது முள்ளும் மலரும் படம். மனிதன் நல்லவனும் அல்ல. கெட்டவனும் அல்ல. இரண்டுமே ஒவ்வொருவரிடத்தும் நிச்சயம் இருக்கும். இந்த ஒரு வரியை வைத்தே மொத்தப்படத்தையும் எடுத்த வித்தைக்காரர் மகேந்திரன்.
ரஜினியின் மிகச்சிறந்த படங்கள் என்று பட்டியலிட்டால் நிச்சயம் அதில் முள்ளும் மலரும், ஜானி படங்கள் இருக்கும் இந்த இரண்டையும் இயக்கியவர் மகேந்திரன். சூப்பர் ஸ்டாராக மட்டும் இருந்த ரஜினியை கலைஞனாக மாற்றியவரும் இவரே.
கெட்டபய சார் இந்த காளி
நீ நடிச்சதுலேயே உனக்குப் பிடிச்ச படம் எது? என கே.பாலச்சந்தர் ரஜினியிடம் கேட்க, சற்றும் யோசிக்காமல் முள்ளும் மலரும் என பதிலளித்தார் ரஜினி. அப்படி வெண்ணிற ஆடை மூர்த்தி, சரத்பாபு, ரஜினி ஆகியோரின் நேர்மாறான குணங்களின் வழியே பயணிக்கும் இந்தக்கதை பாலுமகேந்திராவின் கேமராவில் கவிதை போல படம் பிடிக்கப்பட்டிருக்கும்.
கெட்டபய சார் இந்த காளி வசனம் சுமார் 40 வருடங்களுக்குப் பின்னால் இன்றும் ரஜினியின் ட்ரேட்மார்க் டயலாக்குகளுக்குள் ஒன்றாக இருக்கிறது.
ஜானி
மனிதர்களுடைய குணங்களை படம்பிடிப்பது அத்தனை எளிதான காரியம் இல்லை. ஜானியும் இதே கதைதான். இசையை நேசிக்கும் ஒரு ரஜினி திருட்டைத் தொழிலாக செய்கிறார். அதே இசையை வாழ்க்கையாகக் கொண்ட ஸ்ரீ தேவியின் அன்பின் நிழலில் அடைக்கலம் கொள்கிறார். மற்றொரு புறம் கஞ்சனாக வரும் ரஜினியின் காதலி துரோகக் கத்தியால் இவரது இதயத்தை துண்டிக்கிறார். எந்த ஜோடி இணைகிறது? இதை மனித உணர்வுகள் அன்பு கிடைக்கும்போது எப்படியெல்லாம் மாறுகின்றன என்பதைத் துல்லியமாக பதிவு செய்திருந்தார் மகேந்திரன்.
இந்த உலகத்துல ஒன்ன விட இன்னொன்னு பெட்டெர் னு தோணிகிட்டே தான் இருக்கும் என்ற ரஜினியின் வரி வாழ்க்கையின் மிக முக்கிய இடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
நிறைவேறாமல் போன ஆசை
மகேந்திரன் தனது கடைசி காலத்தில் வண்ணாத்திக்குளம் என்னும் நாவலை படமாக்க விருப்பப்பட்டிருக்கிறார். புகழ்பெற்ற ஈழ கவிஞரான நடேசன் எழுதிய நாவல் தான் இந்த வண்ணாத்திக்குளம். இதில் கீர்த்தி சுரேஷ், ஷியாம் மற்றும் சேரன் ஆகியோரைக்கொண்டு இயக்க இருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் அதற்குள் காலன் முந்திக்கொண்டான்.
நடிகன்
ஸ்டார்ட் கேமரா, ஆக்ஷன் மட்டும் சொல்லிக்கொண்டிருந்த மகேந்திரன் அட்லீ இயக்கிய தெறி படத்தின் மூலம் நடிகரானார். அதுவும் வில்லனாக! நல்ல இயக்குனர் என்பர் மிகச்சிறந்த நடிகர் என்பதற்கு சாட்சியம் சொன்னவர் மகேந்திரன்.

கமல்ஹாசனை நடிகனாக்கிய பாலச்சந்தர் கடைசியாக நடித்த படம் கமலின் உத்தமவில்லன். அதேபோல் ரஜினியை கலைஞனாக்கிய மகேந்திரன் நடித்த கடைசிப்படம் ரஜினியின் பேட்ட. சந்தேகமே இல்லாமல் மகேந்திரன் தமிழ் சினிமா தேடிக்கொண்ட செல்வம்.
அவர் புகழ் என்றென்றைக்கும் நிலைத்து நிற்க உதிரிப்பூக்கள் மட்டுமே போதும்!