80 – களின் தமிழ் சினிமா காட்டிய சமுதாயக் கட்டமைப்பு, குடும்பக் கோட்பாடுகள் எல்லாம் கொஞ்சம் வேறு. பெண் என்பவள் ஆண்கள் சார்ந்த உலகத்தின் ஒரு அங்கமாக மட்டுமே பாவிக்கப்பட்டு வந்தாள். பெண்களுக்கான உலகத்தைத் தள்ளி நின்றே தமிழ் சினிமா பார்த்து வந்த காலக்கட்டம் அது.
அப்போது பெரும் வெற்றி அடைந்த சில படங்களை, நாம் இன்றைய காலத்தைக் கொண்டு அளவிட முயற்சிப்பதை விட அந்தச் சூழலுக்கு நாம் நம் மனத்தைக் கடத்திச் சென்று பார்ப்பது மிகவும் அவசியமாகிறது.
அந்த சமயத்தில் மக்கள் கடைப்பிடித்து வந்த பழக்க வழக்கங்கள், அனுசரித்து வந்த சடங்குகள் ஆகியவைகளைக் குறித்த குறைந்த பட்சப் புரிதல் நமக்கு இருப்பது நேற்றைய திரைப்படங்களைப் பார்க்க அவசியம் ஆகிறது.
எங்கேயோ கேட்ட குரல் !
படம் வெளிவந்த ஆண்டு : 1982
தயாரிப்பு : பி ஏ ஆர்ட் ப்ரொடக்சன்ஸ்
இசை: இளையராஜா
இயக்கம் : எஸ் பி முத்துராமன்
ஒளிப்பதிவு : பாபு
திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் மட்டும் ஏற்படும் உறவு ஒப்பந்தம் என்பதையும் தாண்டி இரு குடும்பங்கள், அவர்கள் சார்ந்த சமூகம் சார்ந்த ஒப்பந்தம் என்று இருந்து வந்திருக்கிறது. திருமண விலக்கு எல்லாம் கிராமத்துப் பஞ்சாயத்துகளால் பேசி செய்யப்பட்டிருக்கின்றன. அதற்கென்று எழுதி வைக்கப்பட்ட சட்டங்கள் பெரிதாக எதுவும் இருந்ததாகத் தகவல் இல்லை.
கொஞ்சம் நீளமான பீடிகை போட்டாச்சு இனி படத்துக்கு வருவோம்.
கதைச் சுருக்கம்
குமரன் என்ற கிராமத்து விவசாயி வேடத்தில் வருகிறார் ரஜினி. கடுமையான உழைப்பாளி, இருப்பதை வைத்து கொண்டு நேர்மையான ஒரு வாழ்க்கை வாழ முயற்சிக்கும் மனிதன். அவனுக்கு சொந்தம் என்று சொல்லிக் கொள்ள அத்தை குடும்பம் மட்டுமே அந்த ஊரில் இருக்கிறது.
அத்தைக்கு இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். பொன்னி மற்றும் காமாட்சி என்பது அவர்களது பெயர்கள். மூத்தவள் பொன்னியாக அம்பிகா மற்றும் இளையவள் காமாட்சியாக ராதா. பொன்னி ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படுபவள். காமாட்சியோ இருப்பதை வைத்து மன ரம்யமாக வாழும் ஒரு பெண். அத்தோடு குடும்ப பொறுப்புகளையும் உணர்ந்து வளர்ந்தவள்.
சிறு வயதிலே எடுக்கப்பட்ட முடிவின் படி, பொன்னியைக் குமரனுக்கு மணம் முடிக்க அத்தையும் அவள் கணவரும் ஏற்பாடு செய்கிறார்கள். குமரனுக்கும் பொன்னியின் மீது ஆசை. அவளைக் கட்டி கொண்டு நல்லதொரு வாழ்க்கை வாழ அவன் இன்பக் கனவு காண்கிறான்.
பொன்னியின் தங்கை காமாட்சி கொஞ்சம் சுட்டி என்றாலும் , வாழ்க்கையின் யதார்த்தம் உணர்ந்த பெண். அவளுக்கு தன் அத்தான் குமரன் மீது கொள்ளைப் பிரியம். அதை நாசூக்காய் அவனிடம் வெளிப்படுத்துகிறாள். ஆனால் குமரன் பக்கம் அதற்கு இசைவு இல்லை.
பொன்னி குமரன் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது, காமாட்சி அதை அறிந்து வெகுவாய் மனம் வருந்துகிறாள். சாடை மாடையாக தன் தாயிடம் குமரனுக்கு பொன்னி பொருத்தமானவள் அல்ல என சொல்லிப் பார்க்கிறாள். அதை அவள் தாய் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டு விடுகிறாள்.
காமாட்சி இதே விஷயத்தை குமரனிடமும் எடுத்துச் செல்கிறாள். நேரடியாக விஷயத்தைச் சொல்லாமல் சுற்றி வளைத்துச் சொல்லியும் குமரன் கேட்காததால் , தன் விருப்பத்தைக் குமரனிடம் போட்டு உடைக்கிறாள். குமரன் அவளுக்கு புத்தி சொல்லி அனுப்புகிறான்.
பொன்னி குமரன் திருமணம் நடக்கிறது. முதலிரவிலேயே அவர்களுக்குள் இருக்கும் பொருத்தமின்மை கொஞ்சம் கொஞ்சமாக வெளியாகிறது. குமரன் பொன்னிக்கு புத்தி சொல்கிறான். நிதானமாய் தன் வாழ்க்கைச் சூழலை விளக்கி சொல்கிறான். மிகவும் பொறுத்து போகிறான். ஆனால், பொன்னியால் எதையும் ஏற்றுக் கொள்ள முடியாமல் தனக்குள் பொருமி பொசுங்குகிறாள்.
பொன்னியின் ஆடம்பர ஆசைகளைக் குமரன் ஆரம்பத்திலேயே எடுத்து கூறி மட்டுப்படுத்தப் பார்க்கிறான். இருப்பினும் பொன்னியின் மனம் என்னவோ வசதியான வாழ்க்கையை நாடியே பறக்கிறது.
பொன்னி சிறு வயது முதற்கொண்டு அந்தக் கிராமத்தில் இருக்கும் பெரிய அய்யா என்று அழைக்கப்பட்டு வந்த செல்வந்தர் வீட்டில் வேலை செய்து வருகிறாள். பணத்தை விட அந்த வீட்டில் இருக்கும் வசதிகளை அனுபவிக்கவே அவள் அங்கு சென்று வருகிறாள்.
செல்வந்தர் வீட்டில் ஒரு கிளை கதை வருகிறது. பெரியவருக்கு ஒரு மகன், சுந்தரம். அவன் ஒரு பொருந்தாத் திருமணத்தில் சிக்கி அல்லல்படுகிறான். அவன் மீது பொன்னிக்கு ஒரு வித கவர்ச்சி வெகு காலமாய் இருந்து வந்து இருக்கிறது. திருமணத்திற்கு முன் சுந்தரத்தை பொன்னி விரும்பியிருக்கிறாள்.
இது பார்வையாளர்களாகிய, நமக்கு படத்தின் போக்கில் தெரிய வருகிறது. பெரியவர் ஒரு கட்டத்தில் தன் மகனுக்கு தான் பொன்னியைத் திருமணம் செய்ய எண்ணியதை அவளிடமே சொல்கிறார். பொன்னியின் சலனப்பட்ட மனம் மேலும் சலனம் அடைகிறது.
பெரியவரின் இந்த பேச்சைக் கேட்டு விடும் அவர் மருமகள் வீட்டை விட்டு வெளியேறுகிறாள். பொன்னியின் சலனப்பட்ட மனம், அவள் திருமண வாழ்வை ஏமாற்றங்களால் நிறைக்கத் துவங்குகிறது. குமரன் எவ்வளவோ நெருங்கியும் இறங்கியும் வருகிறான் பொன்னியோ மனதளவில் குமரனை விட்டு தூரமாய் விலகிச் செல்லத் துவங்குகிறாள். குமரன் மீதான தன் வெறுப்பை வெளிப்படுத்த ஆரம்பிக்கிறாள்.
இந்த தருணத்தில் பொன்னி கர்ப்பமாக வேறு ஆகிறாள். மனதில் மண்டிக் கிடக்கும் சபலமும் வெறுப்பும் அவளைக் கருவைக் கலைக்கச் சொல்கிறது. அதைத் தன் தாயிடமும் குமரனிடமும் கூறி இருவரது கோபத்துக்கும் ஆளாகிறாள். பின் விருப்பமின்றி ஒரு பெண் குழந்தைக்குத் தாயாகிறாள். தான் பெற்ற பிள்ளையின் மீதே பாசம் காட்ட முடியாத படி விலகி வாழ்கிறாள்.
குமரனுக்கும் பொன்னிக்குமான சண்டைகள் அதிகரிக்கின்றன. பொன்னியை பெரிய அய்யா வீட்டுக்குப் போக கூடாது என குமரன் தடை போடுகிறான். இது பொன்னிக்குப் பிடிக்கவில்லை. அவள் மேலும் மேலும் தனக்கு நடந்த திருமணத்தின் மீதும் குடும்பத்தின் மீதும் அதிருப்தி அடைகிறாள்.
நோய்வாய் பட்டு இருக்கும் பெரிய அய்யாவும் அந்த கட்டத்தில் இறந்து விடுகிறார். பொன்னி நொறுங்கிப் போகிறாள். அந்த செல்வந்தரின் வீடு என்பது பொன்னிக்கு அவளுடைய அன்றாட வாழ்க்கையில் இருந்து தப்பிப் பெரு வாழ்வு வாழ ஒரு மாற்று வழியாக இருந்து வந்தது. அதுவும் தற்சமயம் மூடபட்டு போனதால் தன்னிலை தடுமாறிப் போகிறாள்
பெரியவரின் மகன் சுந்தரமும் மனைவியைப் பிரிந்து தனித்து நிற்கிறான். அவனைச் சந்திக்க செல்லும் பொன்னியிடம் தானும் அவளை விரும்பியதாகச் சொல்கிறான். தாங்கள் இருவருமே பொருந்தாத ஒரு மண வாழ்வில் சிக்கித் துயரப் படுவதாகப் பேச்சுக் கொடுக்கிறான். பொன்னியின் சலனம் சபலமாக மாறி அவளை ஆட்டுவிக்கிறது.
தன் சொந்த வாழ்க்கையில் அடைந்த ஏமாற்றங்கள் பொன்னியின் எண்ணங்களை திசை மாற்றுகிறது. கணவன் மீது வெறுப்பு இல்லாத போதும் அவன் மீது பெரிய ஈடுபாடு கொள்ள முடியாத பொன்னி, விளக்கில் விழுந்த விட்டில் பூச்சியாக ஆகிறாள். சுந்தரம் மீது முன்னாள் கொண்டிருந்த ஈர்ப்பும் அவள் சிந்தனையை மழுங்கடிக்கிறது.
தன் கணவன், குழந்தை, குடும்பம் எதுவும் அவள் கண்ணுக்குத் தெரியாமல் போக வசதியான வாழ்க்கையை எதிர் நோக்கி சுயநல முடிவு எடுக்கிறாள். சலனம் அவளை ஆளுகிறது. சுந்தரத்தோடு ஊரை விட்டு ஓடுகிறாள். விவரத்தை ஊர் வாயிலாக அறியும் குமரன் கலங்கிப் போகிறான். ஆனாலும், தடுமாறாமல் நிற்கிறான். தன் உணர்ச்சிகளைக் காத்து அடுத்து என்ன ஆக வேண்டும் என சிந்திக்கிறான்.
ஆரம்பம் முதலே குமரனின் பாத்திரம் வெகு நிதானமான ஒன்றாகவே சித்திரிக்கப்பட்டு வருகிறது. கோபத்தில் கொந்தளிக்கும் குமரனின் மாமனார், அவனுடைய பக்குவமான பேச்சைக் கேட்டு அமைதியாகிறார். ஆனால், ஒரு பஞ்சாயத்துத் தலைவராக ஊர் பாரம்பரியத்தைக் கருத்தில் கொண்டு தன் சொந்த மகள் என்றும் பாராமல் ஊரை விட்டுப் பொன்னியை ஒதுக்கி வைத்துத் தீர்ப்பு அளிக்கிறார்.
தன் மூத்த மகளால் பாதிக்கப்பட்ட குமரனின் வாழ்க்கையைத் தன் இளைய மகள் காமாட்சி மூலம் சீர்ப்படுத்த முடிவெடுக்கிறார். குமரன் அதற்கு முதலில் உடன்பட மறுத்தாலும் அவன் மாமனார் பேசி அவன் மனத்தை மாற்றுகிறார். குமரனுக்கும் காமாட்சிக்கும் திருமணம் நடக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாய் குமரனின் மனக் காயம் ஆறுகிறது. காலம் உருண்டோடுகிறது.
குழந்தையாக இருந்த குமரனின் மகள் சிறுமியாகிறாள். இதற்கு இடையில் ஊரை விட்டு ஓடிய பொன்னியின் மனம் அவள் எடுத்த முடிவை ஒப்பாமல் அவளை வாட்டுகிறது. கணப் பொழுதில் சலனப்பட்டு சங்கடத்தில் போய் விழுந்ததை எண்ணி எண்ணி எண்ணெய் கொப்பரையில் விழுந்த புழுவாகத் துடிக்கிறாள். தான் தேடி வந்த வாழ்க்கையைத் தொடர முடியாது தவிக்கிறாள்.
பொன்னியின் மனப் பிசைவுகளை புரிந்து கொள்ளும் சுந்தரம் , அவளிடம் தன்மையாகவே பேசுகிறான். அவள் திரும்பிப் போகவும் தடையாக இன்றி விலகி கொள்கிறான். பொன்னி ஊருக்குத் திரும்பி குடியிருக்க தன் நிலத்தில் இடம் ஒதுக்குகிறான். பொன்னி அங்கு ஒரு குடிசை போட்டு வாழுகிறாள். அவளுக்குத் துணையாக ஒரு பணியாள் இருக்கிறாள்.
பணியாள் மூலம் தன் மகளைப் பற்றி கேட்டறியும் பொன்னிக்கு மகளைப் பார்க்கும் ஆவல் எழுகிறது. பள்ளி சென்று பிள்ளையை பார்க்கிறாள். தாயாகப் பரவசம் கொள்கிறாள். மகளைத் தன் வீட்டுக்கு அழைத்து போய் கொஞ்சி மகிழ்கிறாள்.
தினம் தினம் அந்த சந்தோஷத்தை அனுபவிக்க எண்ணி பொன்னி, மகளை எதாவது பொய் சொல்லிவிட்டு தன்னைச் சந்திக்க வர சொல்கிறாள். அறியா சிறுமியும் மிட்டாய்க்கு ஆசைப்பட்டு வருகிறாள்.
இந்தக் கட்டம் கொஞ்சம் சிக்கலானது. மகள் பாசத்துக்காக ஏங்கும் தாய் ஒரு பக்கம், அக்காவின் குழந்தையைத் தன் மகளாய் எண்ணி வளர்க்கும் காமாட்சி மறுபுறம். அக்காவின் தாய் பாசத்தை விட அவள் குடும்பத்திற்குச் செய்த துரோகமே காமாட்சியின் கண்ணுக்குப் பெரிதாகத் தெரிகிறது.
அந்தக் கோபம், பொய் சொன்ன சிறுமியின் மீது திரும்புகிறது. காமாட்சி சிறுமிக்கு சூடு வைத்து தண்டித்து விடுகிறாள்.
மகளுக்கு சூடு வைப்பதைக் காணும் குமரன், காமாட்சியைப் பார்த்து சட்டென அந்த கேள்வியைக் கேட்டு விடுகிறான். அத்தோடு நில்லாமல் காமாட்சியின் கையில் சூடும் போடுகிறான்.
உன் மகளாக இருந்தா இப்படி செய்வியா?
சின்னக் கேள்வி தான். ஆனால், அது ஏற்படுத்தும் காயத்தின் ஆழம் மிகவும் அதிகமாக இருக்கிறது குமரன் வைத்த சூடு ஆறினாலும் அவன் சொல்லினால் வைத்த சூடு காமாட்சியின் மனத்தை வருத்துகிறது. தங்கை அக்காவைச் சந்தித்து வெடிக்கிறாள். தன் மகளிடம் இருந்து விலகி இருக்கச் சொல்கிறாள்.
அக்கா தனக்கு கிடைத்த வாழ்க்கை என்னும் செல்வத்தை உதறிச் சென்றாள். இன்று அவள் தொலைத்த அந்த செல்வத்துக்கு சொந்தக்காரி அவள் சொந்த தங்கை. எந்தக் குழந்தையை வேண்டாம் என்று வெறுத்துச் சென்றாளோ, அந்தக் குழந்தையின் அன்புக்காக ஏங்கி நிற்கும் இடம், நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும் என்று எடுத்துரைக்கிறது.
காலச் சக்கரம் சுழல்கிறது, குமரனின் மகள் மீனா பருவம் எய்துகிறாள். குமரனுக்குப் பொறுப்புக்கள் கூடுகிறது, பக்குவமும் கூடுகிறது.
பொன்னியின் தவிப்புக்கும் வலிக்கும் மருந்தை காலமும் கொடுக்கத் தவறுகிறது. தன் இறுதிக் காலத்தைப் பொன்னி நெருங்குகிறாள். அந்த நிலையில் அவளுக்கு என்று இருக்கும் ஆசைகள் இரண்டு, அவை நிறைவேறியதா இல்லையா என்பதை இயக்குனர் அழகுற சொல்லி படத்தை முடிக்கிறார்.
எங்கேயோ கேட்ட குரல்.
நாம் எல்லோரும் நம் வாழ்க்கையில் எதோ ஒரு கட்டத்தில் கேட்ட கதை தான். நாம் வாழும் சமுதாயத்தில் திருமணம் என்பது மிக முக்கியமான வாழ்க்கை நிகழ்வு. விருந்தாளிகளுக்கு அது ஒரு நாள் கூத்து. சாப்பாடு, மொய் என முடிந்து போகும் என்றால் அது தான் இல்லை. அது ஒரு ஆயுள் கால கதை
அதில் வெற்றி, தோல்வி என்பது வெகு உன்னிப்பாகக் கவனிக்கப் படும் விஷயம். நம் சமுதாய அமைப்பில் சார்பு நிலை என்பது இன்றும் முற்றிலும் தவிர்க்க முடியாத ஒரு விஷயம். மண வாழ்க்கை தோல்வி என்பது ஆண் பெண் இருவருக்கும் வாழ் நாள் தோல்வியாகவே பார்க்கப்பட்டது. இன்றும் பார்க்கப் படுகிறது. அந்தப் பார்வையில் தமிழ் திரையுலகுக்கு வெகு முக்கியமான படம் எங்கேயோ கேட்ட குரல்.
ரஜினி
காதல் தோல்வி அடைந்த ஆணைக் கொண்டாடிய சமூகம், திருமண தோல்வி அடைந்த ஆணைக் கொஞ்சம் கேலிப் பார்வை தான் பார்த்தது. எள்ளி நகையாடியது.
அப்படிப்பட்ட ஒரு வேடத்தை, அதுவும் ஒரு வணிக சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக உருப்பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் ரஜினி ஏற்றது பெரும் ஆச்சரியம் தரும் நிகழ்வு. நட்சத்திர நடிகர்கள் பிம்பம் குறித்துப் பெரும் கவலை கொண்டவர்கள். ரஜினி அதை அன்றே உடைத்தவர்.
குமரனாக மிகவும் சாதாரண வேடம். தன் புஜ பராக்கிரமங்களைக் காட்ட எந்த ஒரு வாய்ப்பும் இல்லாத ஒரு வேடம். கதையின் நாயகனாக, இயக்குனரின் நடிகனாக ரஜினி ஜொலித்தார். இளைஞன், நடுத்தர வயது, முதுமையைத் தொட்ட மனிதன் என பாத்திரத்தின் பரிணாம வளர்ச்சியைத் தன் இயல்பான நடிப்பால் வெளிக்கொண்டு வந்திருப்பார். நம்மைக் குமரன் என்ற மனிதனின் வாழ்க்கையோடு பயணிக்க வைத்து இருப்பார்.
அம்பிகா மீது காதல் கொள்ளும் வாலிப ஏக்கம் ஒரு புறம் என்றால் தன் மீது ஏக்கம் கொள்ளும் ராதாவிடம் காட்டும் மென்மையான ஆண்மையின் பக்குவம் மறுபுறம் ரஜினியின் நடிப்பு படு யதார்த்தம்.
அடகுக் கடையில் தனக்குப் போடப்பட்ட நகை போலி என உணரும் அந்தத் தருணம் ரஜினி முகம் காட்டும் எண்ண ஓட்டம் அட்டகாசம். தான் ஆசைப்பட்டவளிடம் காட்டும் காதலில் பாயச்சலும், தன்னை ஆசைப் பட்டவளிடம் காட்டும் காதலில் கனிவும் என ரஜினியின் தேர்ந்த நடிப்பு ஆஹா
மரணப் படுக்கையில் இருக்கும் அம்பிகாவைப் பார்க்க வரும் ரஜினி, தன் உடல் மொழியில் சிறிது தடுமாற்றம் கனத்த ஏமாற்றம் என அசத்தியிருப்பார்.
நட்சத்திரங்கள்
அம்பிகா அழகு. ஆசைகளின் அலை மேலே மனத்தை அலைய விட்டு பின் அதனால் வாழ்க்கையின் திசை தொலைத்து நிற்கும் வேடத்தில் மிளிர்கிறார். இவர் மீது கோபமும் பரிதாபமும் ஒரு சேர வரவழைக்கிறார். இவர் சினிமா வாழ்க்கையில் இந்தப் படம் இவருக்கு ஒரு மைல்கல்.
ராதா, குமரன் மீது கொள்ளும் காதலில் நம் மனங்களை அள்ளுகிறார். பின்னர் குமரனின் மனைவியாக அவன் பிள்ளைக்குத் தாயாக நம் இதயங்களைத் தன் பாந்தமான நடிப்பால் வென்று விடுகிறார்.
பேபி மீனா அறிமுகம், அமுல் பேபியாக வருகிறார். இரண்டு மூன்று காட்சிகள் என்றாலும் நடிக்க நல்ல வாய்ப்பு இருந்திருக்கிறது.
வி எஸ் ராகவன் பெரிய அய்யாவாக வருகிறார். குணச்சித்திர நடிப்பு.
பசி சத்யாவுக்கும் குறிப்பிடும் படியான வேடம்.
டெல்லி கணேஷுக்கு கனமான பாத்திரம், இள வயது ஆனாலும் நடிப்பில் முதிர்ச்சி காட்டியிருப்பார் கவுரவத்தை சொத்தாக நினைத்து வாழும் வேடம். படத்தில் அவருக்கு ஒரு வசனமுண்டு.
“தப்பான பொன்னைக் கொடுத்தேன் அதுக்கு மாத்துப் பொன்னு கொடுத்து சரி பண்ணிட்டேன்… பொண்ணு தப்பாப் போச்சே என்ன பண்ணுவேன் ” அந்தக் காலத்து மனிதர்கள் எதை இழந்தாலும் தம் நம்பகத் தன்மையை இழக்க விரும்பமாட்டார்கள் என விளம்பும் வசனம் அது.
நாயகிகளின் தாயாக கமலா காமேஷ் இவருக்கும் நல்லதொரு பெயர் சொல்லும் வேடம் தான். பெயரை நாட்டி இருக்கிறார்.
ரஜினி படம் ஆச்சே.. சண்டை இல்லாமலா..? இருக்கிறது இரண்டு சண்டைக் காட்சிகள். சட்டுன்னு ஆரம்பித்து விருட்டென்று முடிகிறது. இயக்குநர் நட்ராஜ் அடிதடி ஆளாக வந்து போகிறார்.
இசை
இசையைப் பொறுத்த வரை “பட்டு வண்ணச் சேலைக்காரி…” பாடல் இன்றும் செவிக்குள் தேன் பாய்ச்சும் கீதம். கண்களுக்கும் குளுமையான படமாக்கல்.
சில்லுனு கண்ணுக்கு விருந்தாக இன்னொரு பாடல் “ஆத்தோரம் காத்தாட ஒரு பாட்டு தோணுது.. ”
“தாயும் நானே தங்க இளமானே..” உள்ளத்தை உருக்கும் இந்தப் பாடல், அடிப்படையில் ஒரு கிறித்துவ மத கீர்த்தனை ( தேவனே நான் உமதண்டையில்..) பாடலின் பிரதி ஆகும்.
” நீ பாடும் பாடல் எது ” என்று ஒரு பாடலும் படத்தில் உண்டு.
வசனங்கள்
வசனங்களின் வீச்சு படத்தில் அதிகம். அதற்குச் சான்றாக சில வசனங்கள்,
“பொழைப்புக்காக இல்லாமல் பொழுதுபோக்காக வேலைக்குப் போனவங்க நிம்மதியா இருந்து நான் பாத்ததே இல்ல.”
“பணத்தை அளவா சம்பாதிச்சா நம்மை அது காப்பதும். அளவுக்கு அதிகமா சம்பாதிச்சா நாம தான் அதைக் காப்பாத்தணும்”
“க்ஷண சித்தம் க்ஷண பித்தம் “
எங்கேயோ கேட்டக் குரல் – நாம் எல்லோரும் கேட்டுக் கொண்டிருக்கும் குரல் தான். பொருந்தாத் திருமணம், சபலம், அதனால் விளையும் பாதகங்கள் என அந்தச் செய்திகள் ஓயாது ஒலித்துக் கொண்டே தான் இருக்கின்றன.
ஊர் ஓயாது பேசிக் கொண்டிருக்கும். நாம் கேட்க வேண்டியது நம் மனசாட்சியின் குரல் மட்டுமே.
மனிதம் என்பது விதிகளுக்கு அப்பாற்பட்டது. மனிதம் என்ற குரல் எப்போதும் எங்கேயும் கேட்டு கொண்டே இருக்க வேண்டிய குரல். அதை உணர்த்தும் அழுத்தமான கிளைமாக்ஸ் படத்தில் உண்டு.