உலகப்புகழ் பெற்ற இத்தாலிய ஓவியரான லியனார்டோ டாவின்சியின் மிகச்சிறந்த படைப்பு மோனலிசா. ஒரு நிமிடம். அவரை ஓவியர் என்றா சொன்னேன்? இல்லை. அவர் ஒரு தத்துவவாதி, விஞ்ஞானி, பொறியாளர் எனப்பல துறைகளில் கால்பதித்து அவற்றில் வரலாறு போற்றும் வெற்றிகளை ஈட்டியிருக்கிறார். கடைசி விருந்து, சால்வடார் முண்டி போன்றவை அவருடைய மிகச்சிறந்த ஓவியங்களாகும். இடது மற்றும் வலது கையினால் திறம்பட வரையக்கூடிய டாவின்சியின் மோனாலிசா படத்தினைப் பற்றிய மர்மம் தற்போது விலகியிருக்கிறது.

மொனாலிசா ஓவியம் இரண்டு விஷயங்களுக்காக புகழ்பெற்றது. முதலாவது மோனாலிசாவின் மர்மப் புன்னகை. இன்னொன்று கிட்டத்தட்ட 500 வருட காலமாக நம்பப்பட்ட, பரப்பப்பட்ட மோனாலிசாவின் பார்வை. இந்த ஓவியத்தை பார்வையாளர் எங்கிருந்து பார்த்தாலும் தங்களைப் பார்ப்பது போன்றே இருக்கும். டாவின்சி இதற்கென பிரத்யேக நுணுக்கங்களை கையாண்டார் என வரலாற்றில் பல பெட்டிச்செய்திகள் இருக்கின்றன. “அதெல்லாம் பொய்” என ஒரே போடாகப் போட்டிருக்கிறது ஜெர்மனியைச் சேர்ந்த பைலஃபெல்ட் பல்கலைக்கழகம் (Bielefeld University).
காந்தப் பார்வை
ஒரே ஓவியம் இப்படியான தோற்றத்தைத் தர இயலாது. அதாவது, பார்வையாளர்களை எல்லா கோணத்தில் இருந்தும் நோக்கும்படியான சித்திரத்தை ஒரே ஓவியத்தால் நிகழ்த்த முடியாது. ஆனால் பார்வையாளர்களுக்கு அப்படி தோன்றுவதற்கான காரணத்தைக் கண்டறிய ஒரு சோதனை நடத்தப்பட்டது. இதற்காக 24 நபர்களை ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறது அந்த பல்கலைக்கழகம்.
கெர்னாட் ஹார்ஸ்ட்மேன் (Gernot Horstmann) என்னும் ஆராய்ச்சியாளரின் தலைமையில் நிகழ்த்தப்பட்ட இந்த ஆய்வில் மோனாலிசாவின் ஓவியம் பல்வேறு கோணங்களில் வைக்கப்பட்டு பார்வையாளர்களால் கவனிக்கச் செய்யப்பட்டிருக்கிறது.
ஆய்வு
கணினியின் திரையில் காட்சிப்படுத்தப்பட்ட மோனாலிசாவின் புகைப்படத்திற்கும், பார்வையாளர்களுக்குமான இடைவெளி 26 அங்குலமாகும். 30% முதல் 70% வரை படமானது உருப்பெருக்கப்பட்டு (Zoom) திரையிடப்பட்டிருக்கிறது. மேலும் இடது மற்றும் வலது புறத்திலும் புகைப்படம் நகரும் படி செய்யப்பட்டது. இதனால் மோனாலிசாவின் பார்வையை வெவ்வேறு கோணங்களில் அவர்களால் பார்க்க முடிந்திருக்கிறது.

இதன்முடிவில் ஆய்வில் ஈடுபட்ட எவரும் மோனலிசாவின் பார்வை தங்களை நேரிடியாக பார்க்கவில்லை எனத் தெரிவித்திருக்கிரார்கள். இதுகுறித்துப் பேசிய ஹார்ஸ்ட்மேன் மோனாலிசாவின் பார்வை சுமார் 15 டிகிரி அளவில் இருக்குமாறு டாவின்சி வரைந்துள்ளார். பார்வையாளரின் வலது புறத்தில் தோள் பகுதியில் இருந்து காது வரையிலுமான உயரத்தில் இந்தப்பார்வை அமைந்திருப்பதுதான் இந்த காட்சிப் பிழைக்குக் காரணம் என்றார். ஆனால் டாவின்சி இதனை 500 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்திருப்பதுதான் நீங்காத ஆச்சர்யத்தை அளிக்கிறது. அல்லது, தற்போது இருக்கும் நவீன தொழில்நுட்பங்களின் உதவியால் கூட கண்டுபிடிக்கமுடியாத மர்மத்தை அத்தனை ஆண்டுகாலத்திற்கு முன்னால் அவர் வரைந்தது தான் டாவின்சி யார் என்பதற்குச் சான்று.