குழந்தைகளின் வாழ்க்கையில் ஓர் அங்கமாக இருந்த சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் போன்ற காமிக்ஸ்களை வடிவமைத்தவர் ஸ்டான் லீ. ஹாலிவுட் படங்கள் அதுவரை சந்தித்திராத பெரும் வெற்றியினை தனது படைப்பின் மூலம் நிகழ்த்திக்காட்டியவர். வயது மூப்பின் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஸ்டான் லீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு வயது 95 ஆகும்.

முதல்படி
வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில் கஷ்டப்படும் அனைவரும் சாதிப்பதில்லை. ஆனால் சாதித்தவர்கள், இந்த உலகை திரும்பிப் பார்க்கவைத்த அனைவரும் தொடக்கத்தில் கஷ்டங்களைச் சந்தித்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். இதற்கு ஸ்டான் லீ யும் ஒரு உதாரணம். சிறிய வீடு. நடுத்தரக்குடும்பம். ஆனால் கண்களில் சாதிக்கவேண்டும் என்கிற வெறி. இவைதான் லீயை பெரும் வெற்றியாளராக மாற்றியிருக்கிறது. 1939 – ஆம் ஆண்டு Timely Comics – ல் உதவியாளராகச் சேர்ந்தார் லீ.
சிறுவயது முதலே அவர் கண்ட கனவுலக வாழ்க்கையின் முதல்படி அதுதான். சிறிய சிறிய வேலைகளே முதலில் அவருக்குக் கிடைத்தன. பணியாளர்களுக்கு தேநீர், உணவு போன்றவை கூட கொண்டுவரும்படி ஸ்டான் லீ பணிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் லட்சிய வெறி கொண்டவர்களை காலம் என்றாவது ஒருநாள் உச்சாணிக்கொம்பில் கொண்டுபோய் நிறுத்திதானே ஆகவேண்டும். அங்குலம் அங்குலமாக முன்னேறினார். பெரும் சிரமங்களுக்கு இடையில் தன்னுடைய Marvel நிறுவனத்தின் முலமாக தனது முதல் படைப்பான Fantastic Four – ஐ வெளியிட்டார். ஹாலிவுட் உலகம் ஸ்தம்பித்துப்போன கணம் அது.
வெற்றி வெற்றி வெற்றி
தனது நண்பர்களான Jack Kirby மற்றும் Steve Ditko உடன் இணைந்து தயாரித்த முதல் படைப்பு உலகமெங்கிலும் பிரம்மாண்ட வெற்றியினை அவருக்கு அளிக்கவே, அடுத்தடுத்து புது அவதாரங்களை எடுக்கத் தொடங்கினார் லீ. ஸ்பைடர் மேன், தி ஹல்க், அயன் மேன், தோர், எக்ஸ் மேன் என அடுத்தடுத்த வெற்றிப்படங்கள் அவரை உச்சத்திற்கு அழைத்துச் சென்றன.

தன்வாழ்நாளில் கடைசி வரையிலும் புதிய ஆக்கப்பூர்வ சிந்தனைகளுக்கு தன் பெரும்பான்மையான நேரத்தை செலவிடுபவராக இருந்தவர் லீ. அவருடைய காமிக் புத்தகங்கள் திரைப்படங்களாக வெளிவந்ததும் அவை அடைந்த இமாலய வெற்றி பற்றிச் சொல்லத் தேவையில்லை. உலகின் ஓர் ஒப்புமையில்லாத கலைஞன் மரணத்தின் மடியில் துயில் கொண்டிருக்கிறார். அவருடைய ஆளுமையை அவரது படைப்புகள் காலம் முழுவதும் பறைசாற்றும்.