வண்ணதாசன் என்னும் வண்ணத்துப்பூச்சி..!!

0
146
Credit : Malaimalar

எல்லோருக்கும் கல்யாண்ஜியாகத் தான் முதலில் வண்ணதாசன் அறிமுகமாகிறார். அவரை எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. காரணம், அவர் என்னவாக உருமாறி நிற்கிறாரோ, அதைத்தான் நாம் எல்லோரும் தேடிக் கொண்டிருக்கிறோம் அல்லது தொலைத்திருக்கிறோம். இடதுசாரி எழுத்தாளர்களைப் பொறுத்தவரை அவர் கடந்த காலத்தின் காதல் கடிதத்தைப் போன்றவர். அது அவர்களின் வாழ்க்கையில் இல்லை என்றாலும் கூட, அந்தச் சொற்கள்தான் அவர்களுக்கான ஆறுதலாக எஞ்சியிருக்கின்றன.

எல்லா வீடுகளிலும் உள்ளே நுழைந்து தன் புன்னகையையும், அன்பையும் கொட்டி விட்டு இரையெடுக்காமல் நகர்கிற அழகான பறவை அவர். அவரது கதை உலகம் வித்தியாசமானது. சொல்லப் போனால், அவர் கதையே சொல்வதில்லை. ஊதிப் பெருக்கி நம்மிடம் எதையோ திணித்து விட்டு நகர்கிற பலூன் வியாபாரி அல்ல வண்ணதாசன். கதையென்ற பெயரில் அவர் நம்மிடம் தருவது வரைபடங்களைத்தான். நாம் அந்த ஊருக்குப் பயணப்படுகிற போதுதான் அதை நிஜமாகவே கண்டுபிடிக்க முடியும்.

Credit : Pinterest

அவருடைய சிறுகதை ஒன்றில், திருமணமாகி விட்ட முன்னாள் காதலியைப் பார்ப்பதற்காக ஒருவன் செல்கிற பாதைதான் கதையாக நீளும். அந்தப் பாதையில் பல்வேறு சாக்கடைகள் குறுக்கிடுவதை அவ்வப்போது காட்சிப்படுத்துவார். ‘அதுதான் அவனுடைய அப்போதைய மனம்’ என்று உணர்ந்தால், அநேகமாக நம் பக்கத்தில் வண்ணதாசன் புன்னகைத்தபடி நிற்பதைப் பார்க்க முடியும்.

வண்ணதாசன் கதைகளில் வருகிற பூக்கள் , செடி, கொடி, மரங்கள் அனைத்துமே அவரது கதைமாந்தர்களுக்கு இணையான முக்கியத்துவம் உடையவை. போகிற போக்கில் ஒரு சாமந்திப் பூவையோ, நந்தியாவட்டையையோ அவரால் ஓரக்கண்ணால் பார்த்துவிட்டுச் செல்ல முடிவதில்லை. எத்தனை அவசரத்திலும் அவற்றோடு சில நிமிடங்கள் செலவிடுகிறார். நமக்கும் அவற்றை அறிமுகப்படுத்துகிறார்.

‘அடுத்த சீஸனுக்கு இந்த உலகத்துல நாவற்பழங்கள் இருக்குமா?’ என்கிற சந்தேகமெல்லாம் யாருக்கும் வரக் கூடிய ஒன்றுதான்.

வண்ணதாசனின் கதைகளில் வருகிற மனிதர்களின் மனதுக்குள் தோன்றுகிற யோசனைகள் அனைத்துமே சாமானியர்கள் அனைவருக்குமான பொதுவான யோசனைகள். வெளியே சொல்லாமல் மனதுக்குள் மட்டுமே பொத்தி வைத்துக் கொள்கிற சமாச்சாரங்கள். ‘அடுத்த சீஸனுக்கு இந்த உலகத்துல நாவற்பழங்கள் இருக்குமா?’ என்கிற சந்தேகமெல்லாம் யாருக்கும் வரக் கூடிய ஒன்றுதான். வெளியே சொல்லக் கூச்சப்படுவார்கள். ஆனால், வண்ணதாசன் தனது கதாபாத்திரங்களின் மனதுக்குள் இருப்பதை வெளியே வந்து கொட்டுகிறார்.

தனது கதைகளில் காதல், கோபம், குரோதம், வேதனை, அழுகை, சிரிப்பு என எல்லாவிதமான ரசங்களையும் அவர் பதிவு செய்கிறார் தான். ஆனால், அவரது எல்லாக்  கதைகளும் தொடர்ச்சியாக அன்பையே வலியுறுத்துகின்றன. ஒரு பிரசாரமாக அதைச் சொல்லாமல் வெவ்வேறு வார்த்தைகளில் அன்பை, அன்பாகவே சொல்லிச் செல்கிறார்.

அவருக்கு அன்பு போதனையல்ல, போதை. தனது எல்லாக் கதைகளிலும் அன்பு ஒன்றிலேயே கிறங்கிக் கிடக்கிறார். ஒரு படைப்பாளியின் இலக்கு அன்பைச் சென்றடைவது தான். ஆனால், வண்ணதாசனால் தனது எல்லாக் கதைகளிலுமே வெகு எளிதாக அன்பைச் சென்றடைய முடிகிறது. அவரது கதாபாத்திரங்கள் சக மனிதர்களிடம் காட்டும் அன்பும், பரிவும் அத்தனை இயல்பாக இருக்கிறது.

Credit : Pinterest

அவரது கதைகளில் அறச்சீற்றமெல்லாம் கிடையாது. கொடுமையைக் கண்டு யாருமே பொங்கியெல்லாம் எழ மாட்டார்கள். ஆனால், எதிர்க்காற்றில் மூச்சு வாங்க சைக்கிள் மிதித்து வருகிற ஒருவர், சோர்வாக நடந்து செல்லும் சக மனிதரிடம், ‘பின்னால உக்காருங்க. கொண்டு போயி எறக்கி விடுதேன்’ என்று சொல்வார்கள். கட்டி முடிக்கப்படாத கட்டடத்தின் வாட்ச்மேன் குடிசைக்குள் உலை கொதிக்கும் அடுப்பை எட்டிப் பார்த்து, ‘வாட்ச்மேன் தாத்தா, சாப்பிட வரலாமா’ என்று கேட்டு, அந்த வறுமையான வயோதிகரின் முகத்தில் சந்தோஷச் சிரிப்பைப் பூக்க வைப்பார்கள்.

எல்லா படைப்பாளிகளாலும் செய்ய முடியாத காரியம் இது. இது வித்தையல்ல. விந்தையுமல்ல. தன்னைப் போல் பிறரையும் நினைத்து மதிக்கும் ஓர் உயர்ந்த ஆன்மசக்தி. அந்த உயர்குணம் வண்ணதாசனுக்கு இயல்பாக அமைந்திருப்பதாலேயே அவரால் அவரது பாத்திரங்களை அத்தனை பிரியமானவர்களாகப் படைக்க முடிகிறது.

அவருடைய கவிதையொன்றில் பழைய சேலை கேட்டு ஒரு பெண் வாசலில் நிற்பாள். கதவைத் திறக்காமலே வீட்டுக்குள் இருந்தபடி ‘நாளைக்கு வரச் சொல்வார்கள் ‘.அவள் அனுதாபத்தைக் கூட்டுவதற்காக ‘தன் துணிகளெல்லாம் வெள்ளத்தில் போய் விட்டதாகப் பொய் சொல்வாள் ‘.அவர்களோ, தங்கள் கருணையைப் பறை சாற்றுவதற்காக, ‘நேற்றுதான் துணிகளை அநாதை ஆசிரமத்துக்குக் கொடுத்தோம். ‘ என்று இன்னொரு பொய்யைச் சொல்வார்கள் .அந்தக் கவிதையை இப்படி முடித்திருப்பார்

“அந்தப் பக்கம் ஒரு பொய்யும்
இந்தப் பக்கம் ஒரு பொய்யும்
அசையாமல் இருக்கிறது வாசல் கதவு
உண்மையின் துருப்பிடித்த மௌனத்துடன் “.