தமிழ் இலக்கிய வளர்ச்சியில் மொழிபெயர்ப்பு நூல்கள் மிக முக்கிய இடங்களை ஆக்கிரமித்திருகின்றன. நாம் கேள்வியே பட்டிராத மண்ணையும் அதன் மக்களையும் வாழ்க்கை முறையையும் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு மொழிபெயர்ப்பு மூலமே சாத்தியமாகியிருக்கிறது. உலகின் மிக முக்கிய படைப்புகளை தமிழில் கொண்டுவரும் விருப்பம் உங்களுக்கு இருக்கிறதா? அதற்கான வாய்ப்பை டிஸ்கவரி புக் பேலஸ் வழங்க இருக்கிறது.

ஆத்மாநாம் அறக்கட்டளை மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ் இணைந்து நடத்தும் மொழிபெயர்ப்பு முகாம் வரும் ஜூன் 13 தேதி கோத்தகிரியில் நடத்த இருக்கிறது. நான்கு நாட்கள் நடக்கும் இந்த மாபெரும் நிகழ்ச்சியில் தமிழகத்தின் மிக முக்கிய மொழிபெயர்ப்பு ஆளுமைகள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். தமிழகத்தில் மொழிபெயர்ப்பின் தோற்றமும் வளர்ச்சியும் மற்றும் ஒரு மொழி பெயர்ப்பாளர்களுக்கான முக்கிய அறிவுரைகள் ஆகியவற்றை துறைசார் வல்லுனர்கள் வழங்க இருக்கின்றனர். இதற்கான கட்டணமாக ரூபாய் 3000 (தங்குமிடம் மற்றும் உணவையும் சேர்த்து) நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
மொழிபெயர்ப்பின் தேவை
இலக்கியத்தில் சிறுகதையோ, நாவலோ எழுத்து நடை மிக முக்கியம். நூலில் கதை சொல்லி யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். பெரும்பாலும் எழுத்தாளர்களே அந்தக்கதையை விவரிப்பார்கள். அடுத்ததாக கதை துவங்கும் புள்ளி அதன் ஆரம்பமாகவே இருக்கவேண்டும் என்ற கட்டாயம் வெகுநாட்களாக தமிழகத்தில் இருந்திருக்கிறது. உதாரணமாக கதையின் நிகழ்விடம், கதை மாந்தர் குறித்த தகவல்களை முதலில் சொல்லிவிடுவது. இப்படி காலங்காலமாக சில வரையறைகள் தமிழிலக்கியத்தை சூழ்ந்திருந்தன.
மேற்கத்திய நூல்களின் தாக்கம் இங்கே பரவ ஆரம்பித்ததன் பின்னர் கதை சொல்லும் விதமும் மாற்றத்தினைக் கண்டிருக்கிறது. எளிய மக்களின் வாழ்க்கையை அதிகம் பேசும் ரஷ்ய, லத்தீன் அமெரிக்க படைப்புகள் தமிழிலக்கிய ஆர்வலர்களுக்கு புதிய பாதையை திறந்துவிட்டது. டாலஸ்டாய், இவான் துர்கனேவ், கேப்ரியல் கார்சியா மார்க்குவேஸ், புஷ்கின், மாக்சிம் கார்க்கி ஆகியோரின் தாக்கம் நவீன தமிழ் எழுத்தாளர்களிடம் இருப்பதை நம்மால் மறுக்க இயலாது. ஆகவே உலகைச் சுற்றி வெளிவரும் ஏராளமான இலக்கிய வளங்களை தமிழகத்திற்கு மடைமாற்றம் செய்ய உதவும் ஓர் பயிற்சிப்பட்டறை வரும் ஜூலை 13 அன்று துவங்க இருக்கிறது. வாய்ப்பும் விருப்பமும் உள்ளவர்கள் கலந்துகொண்டு பயன்பெற வாழ்த்துக்கள்.