காதல், உலகத்து ஆயுதங்கள் எவற்றாலும் உடைக்க முடியாத மாபெரும் மலை. காலம் தன்னை எடுத்து காதலை எழுதிக்கொண்டே இருக்கிறது. ஏதுமற்றவர்களை காதல், சிம்மாசனத்தில் உட்கார வைக்கிறது. இந்த உலகம் அழகானது என்று புலம்ப வைக்கிறது.
மக்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். காதல் தான் நிலை பெற்றிருக்கிறது. களம் பல கண்டு வென்ற போர் மறவர் எத்தனையோ பேர் வேல்விழித் தாக்குதலில் சரிந்திருக்கிறார்கள். பட்டுத் துணியில் மட்டுமே பதிந்த கால்கள், உயிரின் பாதியைத் தேடி பாலை நிலத்தில் பரபரத்திருக்கிறது.
காலம் அமைத்த மேடையில் நம் ஒவ்வொருவர் மூலமாகவும் ஒரு புது அத்தியாயம் எழுதுகிறது காதல். இப்படி வரலாறு முழுவதும் காதல் வரவு வைத்திருக்கிற காதலர்களைப் பற்றியே ‘காண்பதெல்லாம் காதலடி’ பேச இருக்கிறது.
உலகின் எந்த மூலையிலும் காதல் ஒன்றுதான். ஒரே உணர்வு தான்.
முன்னொரு காலத்தில் மன்னன் மகளை மணக்கத் துடித்த ஏழைப் புலவனின் புலம்பல்கள் முதல் நிகழ்காலத்தில் இரவு முழுவதும் நீண்ட சண்டைக்குப் பின்னால் காலை வருகிற மிஸ் யூ செய்தி வரை காதல் அப்படியே பயணித்திருக்கிறது.
இன்றும் செய்தித் தாள்களில் படிக்கிறோம்… காதலியை மணக்க நாடு விட்டு நாடு போகும் காதலனைப் பற்றி… வருங்காலங்களில் விண்வெளி தாண்டியும் பயணிக்கும் காதல் ராக்கெட்.
காதல் பயணத்தின் இலக்கு இணைதல் தான் போலும்… கண்டங்களும், கடல்களும், எல்லைக்கோடுகளும், மதக்கோட்பாடுகளும், மனிதன் ஏற்படுத்திய பிற தடைகளும் காதலால் பிறக்கும் ‘அட்ரீனலின் ரஷ்’ (Adrenaline Rush) முன்பு சுக்கு நூறாகிப் போகிறது. காதலுக்கும் இயற்கைச் சீற்றத்தின் வலிமை இருக்கிறது என்றே நினைக்கத் தோன்றுகிறது.
காதலர்களையே வீழ்த்தினாலும், வென்றது காதலாகத்தான் இருக்கிறது. ஏதும் செய்ய முடிவதில்லை மனிதர்களால்! காதல் காற்றுடன் கலந்து அடுத்தடுத்து காதலர்களுக்கு ஆக்சிஜனாகிறது.
காதலர்களையே வீழ்த்தினாலும், வென்றது காதலாகத்தான் இருக்கிறது.
மேஜாதாவின் ஒற்றை வினாடி பார்வைக்காக காலமெல்லாம் காத்துக்கிடந்த கலீல் ஜிப்ரானுக்கு காதல் கோயில் கட்டியிருக்கிறது. வார்த்தையின் வசீகரத்தில் எவரையும் வீழ்த்தும் வல்லமை கொண்ட ஜிப்ரான் தன் தாய்மொழியையே மறந்தான் மேஜாதாவின் கடிதம் பார்த்து.
வன்முறை என்ற சொல்லிற்காகவே வந்து பிறந்த ஹிட்லர், மொத்த உலகத்தையும் காலடியில் மிதித்த ஹிட்லர், ஈவா பிரவுனின் கை நகங்களுக்கு என்ன நிறம் கொடுக்கலாம் என எத்தனை இரவுகள் விழித்திருந்தானோ?
ஏனென்ற கேள்வியை எதற்கும் கேட்பீர், எவரிடமும் துணிவுடன் விளக்கம் கேட்பீர் என கிரேக்கத்தின் தெருக்களில் முழங்கிய சாக்ரடீஸின் காதல் எத்தனை மகத்தானது? தத்துவார்த்தக் கடலை தன்கையாலே கடைந்து அமிர்தம் எடுத்தவர், தன் காதலி சாந்திபேவின் கன்னகதுப்பின் குழியில் மூழ்கிப்போனார்.
பாலைவனத்து மணலிலும் காதல் செழித்து வளரும் விருட்சம் என்பதை இந்த உலகிற்கு காட்டவே அவதரித்த லைலா-மஜ்நூன் ஜோடியின் காதல் கதை நம்மை கண்ணீரில் குடியிருக்கும் தேவதையிடம் அழைத்துச் செல்கிறது. பிரிவு நிரந்தரம் என்ற உண்மை எத்தனை முறை படிக்கப்பட்டாலும் கசக்கத்தான் செய்கிறது.
ரோமாபுரியின் செல்வமனைத்தும் கிளியோபாட்ராவின் இமைகளுக்கு ஒப்பாது எனப் புலம்பிய ஆண்டனியின் அவலக்குரல் வரலாற்றின் இரும்புப் பெட்டியிலிருந்து இன்றும் கசிகிறது. செருக்களம் தன்னில் கர்ஜித்த ஆண்டனியின் உதடுகள் அவளிடம் சிறைப்பட்டுக் கிடந்தன. அவள் தருவதானால் சாவும் வரமே என்றவனின் வாழ்க்கை எப்படி இருந்தது? இப்படியான காதலர்களைத்தான் நாளையிலிருந்து நாம் பார்க்கப்போகிறோம்.
இரத்தச் சகதியில் நீந்திய எத்தனை வீரர்கள் காதலியின் சிவப்புச்சாய உதட்டில் வாழ்க்கையைத் தொலைத்திருக்கிறார்கள் என கணக்கெடுக்கப் போகிறோம் நாம். மாட மாளிகைகளை விட்டு மரத்தடியில் அவனுக்காக/அவளுக்காக காத்திருந்த காதலர்களை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்போகிறேன். காலமென்னும் கடலில் மூடிக்கிடக்கும் சிற்பிகளின் திறப்பு விழாவிற்கு அனைவரையும் அழைக்கிறேன்.