மழை இரவுக்காட்சியை அப்போதுதான் நிறுத்தியிருந்தது. குளிர்க்காற்று எழும்புகளுக்குள் புகுந்து இம்சித்தது. வெனிஸ் நகரத்தின் பிரபுவான பிரபான்சிபோவின் வீட்டு முற்றத்தில் கதைகேட்க நின்றிருந்தாள் பிரபுவின் மகளான டெஸ்டிமோனா. வீனஸ் தேவதைக்கும் வெட்கம் வரவைக்கக்கூடிய அளவிற்கு அழகானவள். அவளுடம்பில் கறுப்பென்று உள்ளதென்றால் கண்களை மட்டுமே சொல்லலாம். ஆனால் ஒத்தேல்லோவோ ஆப்பிரிக்காவின் வழித்தோன்றல். மூர் இனத்திலிருந்து முளைத்தவன். வேற்றுமைகள் என்னும் வார்த்தைகளே இல்லாத காதல் அகராதியில் இருவரும் இன்னும் இருக்கின்றனர்.
மிகச்சிறந்த போர்வீரனான ஒத்தெல்லோ, பிரபான்சிபோவின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவன். இருகைகளிலும் அனாயசமாக வாள் சுழற்றும் வல்லமை வாய்ந்தவன். பிரம்மிக்க வைக்கும் உடல்வாகு. கண்ணசைத்தால் உலகின் சிறந்த நூறு செல்வந்தனை அவளால் வரிசையில் நிற்கவைக்க முடியும். ஆனால் அந்தக் காலாப மயில் கறுப்பனைத் தேர்ந்தெடுத்தது. மாலையும் இரவும் புணரும் வேளைகளில் அவளிடம் கதைகேட்க வருவாள் டெஸ்டிமோனா. மெசபட்டோமியாவில் தான் செய்த வீரத்தையும், கிரேக்கக் குகை ஒன்றில் இரண்டுவாரம் இருந்ததையும் கதையென சொல்வான். ஆனால் அவள் வருவது கதைகேட்க அல்ல, என்பது ஒத்தெல்லோவைத்தவிர எல்லோருக்கும் தெரிந்தது.
ஒட்டுமொத்த இத்தாலியிலும் இணையில்லாத அழகுகொண்ட தங்கப்பதுமை தகரத்தை நாடுவதாக ஆண்கள் பொறாமைத் தீயில் பொசுங்கினர். இப்படியானவர்களில் இயாகோவும் ஒருவன். டெஸ்டிமோனாவின் விருப்பத்தினை பிரபான்சிபோவிடம் பற்றவைத்தான் இயாகோ. அவர் இதையெல்லாம் கட்டுக்கதை என்றே நம்பிவந்தார். இரவுகளில் கதை தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. ஒரு நாள் மழை வெளியே வெளுத்துக்கொண்டு இருந்தது. அவன் கிரேக்கக் குகையை விட்டு வெளியே வந்தபாடில்லை. அவனது மடியில் தூங்கிப்போனாள் டெஸ்டிமோனா. அதுவரை அவளை இளவரசியாகவே நினைந்து வந்தவன் தன் இணை என இனங்கண்டுகொண்டான்.
ரோஜாவின் நிறத்தைத் தோற்கடிக்கும் நிறத்தில் இருந்த இதழை சுவைக்கட்டும் என பொய்த் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தாள் டெஸ்டிமோனா. இறுகக் கட்டிக்கொண்டான் அவன். இரும்புக்கையின் இறுக்கம் இன்னும் வேண்டும் என புலம்பினாள் இளவரசி. அதிலிருந்து இரவு முழுவதும் கேட்கும் கதைகளுக்கு முடிவுகள் வேறுவிதமாய் இருந்தன. பகலெல்லாம் அவனுக்காக கடிதம் எழுதி, அவற்றை இரவில் வாசித்துக்காட்டினாள் அவள். இலக்கியம் எல்லாம் வேண்டாம் உன் இதழ் மட்டும் போதும் என ஒரேபோடாக போட்டான் ஒதெல்லோ.
டேஸ்டிமோனாவின் காதல் கடிதம் ஊழியன் ஒருவனால் பிரபான்சிபோவிடம் கொண்டுபோய் சேர்க்கப்பட்டது. அரியணைக்கு ஆப்பிரிக்கன் வேண்டாம் என மகளிடம் மன்றாடினான் தந்தை. காதல் இல்லை காலன் இதுவே எனது முடிவென்றாள் டெஸ்டிமோனா. ஒரே மகளின் உரநெஞ்சிற்கு இறுதியில் ஒப்புதல் அளித்தார் பிரபான்சிபோ. தண்ணீர்த் தாடாகை நகரமான வெனிஸ் திருவிழாக்கோலம் கண்டது. இணைந்தவர்கள் இருவரையும் ஊர்முன்பே இணைத்து வைத்தார்கள் பாதிரிமார்கள்.
இரவு பகல் பாராமல் அவளுடம்பை உழுதுகொண்டிருந்தான் ஒத்தெல்லோ. அவனுடைய கைகளில் சிக்கித் தவிப்பதையே வரமென்றாள் டெஸ்டிமோனா. வெனிஸ் நகரம் இரவில் மட்டும் இவர்களுக்காக கண்விழித்திருந்தது. இப்படி காலம் கனியினும் இனியனவாகக் கடந்தன. அப்படி ஒரு நாளில்தான் விதி தனது முதல் பகடையை உருட்டியது. பொறாமை தாளாமல் இரவெல்லாம் தூக்கமின்றித் தவித்த இயாகோ புதுத் திட்டம் ஒன்றைத் தீட்டினான். காசியோ என்னும் மந்திரி ஒருவனும் இவனுக்குப் பகையாளி. பகையை பதம் பார்க்க பகையைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்தான்.
வாள் பயிற்சியில் இருந்த ஒத்தெல்லோவிடம் வார்த்தைகளை வீசினான் இயாகோ. பேச்சுவார்த்தையின் இறுதியில் காசியோவின் மீது கவனம் தேவை மன்னா, என்னயிருந்தாலும் அவன் உங்களைவிட அழகு என்று சொல்லி நகர்ந்துவிட்டான். ஒத்தெல்லாவால் ஒரு அடிகூட எடுத்துவைக்க முடியவில்லை. இரவெல்லாம் சந்தேகக் கண்ணோடு அவளைத் துளைத்தெடுத்தான். இயாகோ தினமும் செய்திகொண்டு சென்றான்.
ஒதெல்லோவிற்கு தன் மீது தாழ்வுமனப்பான்மை பெருகியது. உதடுகள் சிரிப்பை மறந்து பலநாட்கள் ஆகின. கோப நரம்புகள் கொப்புளிக்க இருந்த ஒதெல்லோ ஒருமுறை காசியோவின் அறைக்குச் சென்றான். ஒதெல்லோவின் பரம்பரை கைக்குட்டை ஒன்று அவனது படுக்கையறையில் படர்ந்திருந்தது. பாவப்பட்ட சந்தேகங்கள் வலுபெற்றது. ஆம். ஒதெல்லோ அதனை டேஸ்டிமோனாவிடம் கொடுத்திருந்தான்.
ஒத்தெல்லோவை ஓவியமாக வடித்துக் கொண்டிருந்தவளை கேள்வியே கேட்காமல் கொன்றான். ஆசை தேவதையாக இருந்தவளின் சவத்தினருகே உட்காந்திருந்தவனைப் பார்க்க ஓடோடி வந்தாள் இயாகோவின் மனைவி. கைக்குட்டை விவகாரம் இயாகோவின் இழிச்செயல் என்று இயம்பினாள். காலத்தின் முன் தீர்க்கமுடியா குற்றவாளியாக உணரத்தான் ஒத்தெல்லோ. ஆண்டாண்டுக் காலமாக தன்னை நம்பியவளை நான் நம்பவில்லையே எனக் குமுறினான். இடையில் தொங்கிய வாளினை எடுத்து தன்தலையை தானே கொய்தான். மன்னிப்புக் கேட்க டேஸ்டிமோனாவிடம் போய்ச்சேர்ந்தான் ஒத்தெல்லோ.
இன்றும் சந்தேகத் தீயினில் தங்களது வாழ்வினை வதைத்துக்கொல்லும் எத்தனையோ ஒத்தெல்லோ இருக்கத்தான் செய்கிறார்கள்.