தமிழில் இலக்கியத்தை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று தீவிர இலக்கியம். மற்றொன்று வெகுஜன இலக்கியம். சுந்தர ராமசாமியும், புதுமைப்பித்தனும் தீவிர இலக்கியத்தில் புதிய உயரங்களைத் தொட முயற்சிக்கும்போது எதார்த்த இலக்கியத்தை மக்களிடம் பரப்பினார் சுஜாதா. மனிதர்களின் உள்மனங்களையும், உளவியலையும் புனைவாக தீவிர(இலக்கிய)வாதிகள் பரப்பிக்கொண்டிருக்க, சுஜாதாவோ கொலையுதிர்காலம், வசந்த் வசந்த் என திகில் நாவல்களை எழுதினார்.

பரபரக்கும் எழுத்து நடை, அடுத்த பக்கத்தை படக்கென்று திருப்பி என்ன ஆச்சு என்று படிக்கும் படி நம்மை செய்யும் சுவாரஸ்யம் தான் சுஜாதாவின் ட்ரேட்மார்க் எழுத்திற்கு கிடைத்த வெற்றி. நைலான் கயிறு, அப்சரா போன்ற குறுநாவல்களிலும் தன்னால் மர்மம் இழையோடும் படைப்புகளை தரமுடியும் என்று நிரூபித்தார் சுஜாதா.
சுஜாதாவின் முதல் கதை சிவாஜி என்னும் சஞ்சிகையில் வெளிவந்தது. அதன் பிரதி கிடைக்காமல் வெகுகாலம் தேடியலைந்து அலுத்துப்போன பின்னர்,” அதனை கண்டுபிடித்து தருபவருக்கு என் ராஜ்யத்தில் ஒரு பகுதியையும், என் மகளையும் மணமுடித்து தருகிறேன் ” என சுஜாதா ஒருமுறை வேடிக்கையாக குறிப்பிட்டிருந்தார்.
மத்திய அரசு வேலையில் இருந்த போதும் மற்றொரு புறம் தனது பேனாவிற்கு மை ஊற்றுவதை மட்டும் நிறுத்தவேயில்லை. ஒரே நேரத்தில் சுமார் 7க்கும் மேற்பட்ட வார/மாத இதழ்களுக்கு எழுதிய சுஜாதா ஒருகட்டத்தில் தனக்கென தனியாக உயிர்மெய் எனப்படும் பதிப்பகத்தை துவங்கினார்.
சென்னையில் பிறந்தாலும் சுஜாதாவின் ஆரம்பகால வாழ்க்கை முழுவதையும் ஸ்ரீரங்கம் தான் பார்த்திருக்கிறது. அப்போது தான் சந்தித்த மனிதர்கள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றோடு கொஞ்சம் கற்பனையையும் கலந்து சுஜாதா எழுதியது தான் ஸ்ரீ ரங்கத்து தேவதைகள். எழுத்தாளன் ஒரு நிகழ்வை அல்லது ஒரு பொருளை விவரிக்கும் விதத்தில் தான் அடுத்த பாரா போவோமோ வேண்டாமா என வாசகனை தீர்மானிக்க வைக்கிறது.

உதாரணமாக ஸ்ரீரங்கத்து தேவதைகள் தொகுப்பில் வரும் பாம்பு சிறுகதையில் சைக்கிள் பற்றி இப்படி எழுதுகிறார் ” சிவாவின் சைக்கிள் ராலிக்கு பச்சையில் கைப்பிடிக்குப்பூண், சக்கரத்தின் நடுவில் வர்ணக் கொச கொச, பளபளவென்று காரியர் எல்லாம் வையாளிக் குதிரை போலத்தான் இருக்கும்.”
அந்த தொகுப்பில், சின்ன ரா, பேப்பரில் பேர், கிருஷ்ண லீலா, காதல் கடிதம் போன்றவை வெடிச்சிரிப்புகளை வரவழைக்கக்கூடியவை. இருப்பினும் அதில் இருக்கும் “மரு” கதை நிச்சயம் வாசிக்கப்பட வேண்டிய கதை. அது அவரது பாட்டியைப் பற்றிய கதை.
மின்னணுவியல் படித்ததால் அவருக்கு கணினி மற்றும் அறிவியல் மீது ஆர்வம் அதிகம். அவற்றை தமது என் இனிய இயந்திரா மற்றும் மீண்டும் ஜீனோ ஆகிய நாவல்களில் வெளிக்காட்டியிருப்பார். இந்த நாவல்களைத் தழுவியே எந்திரன் படம் எடுக்கப்பட்டது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களான சங்கர், மணிரத்னம் போன்றவர்களின் படங்களுக்கு வசனகர்த்தாவாக இருந்திருக்கிறார். சுஜாதாவின் எழுத்துக்களில் அறிவுக்கூர்மைக்கு அடுத்து பேசப்படுவது அவருடைய நகைச்சுவை தெறிக்கும் வசனங்கள்.
உன் பெயர் என்ன?
கயல்
மொத்தமே அவ்வளவுதானா? இல்ல கண்ணுக்கு மட்டுமா?
இப்படி எதார்த்த வசனங்களில் ஹியூமரைக் கொட்டி முழக்கியிருப்பார் சுஜாதா. தொழில்நுட்பம், சினிமா, ஜோக்குகள் என எழுதிவந்தவர் திடீரென வரலாறு பக்கம் தலைகாட்டினார். அதன் விளைவுதான் காந்தளூர் வசந்த குமாரன் என்னும் நாவல். ராஜ ராஜ சோழன் காலத்தில் நடப்பதாக கதைக்களத்தை அமைத்து புகுந்து விளையாடியிருப்பார் தலைவர்.
சுஜாதாவின் எழுத்தை விமர்சிக்கும் ஒரு கூட்டமும் அதே நேரத்தில் இருக்கத்தான் செய்தது. பழுத்த மரத்தின் மீது கல்லெறி காயங்கள் விழுவது வழக்கம் தானே. ஆனால் சுஜாதாவின் நகரம் சிறுகதை அசாத்தியமான படைப்பு என்றே சொல்லவேண்டும். அதே போல் எல்டராடோ, கர்ஃபியு போன்றவை அவருடைய இலக்கிய முகத்திற்கு அடையாளமாக இருக்கின்றன.

தன்னிடம் கேட்கப்படும் அறிவுப்பூர்வமான கேள்விகளுக்கு தான் அளித்த பதில்களை ஏன் எதற்கு எப்படி? என்னும் புத்தகத்தின் மூலம் வெளியுலகத்திற்கு கொண்டுவந்தார் சுஜாதா. ஒற்றைத்தலைவலிக்கு வெற்றிலையை பிய்த்து வைக்கலாமா முதல் காஸ்மிக் ரேடியேஷன் வரை ஏராளமான கேள்விகளுக்கு தனக்கே உரித்தான பாணியில் பதில் சொல்லியிருப்பார். இடையிடையே மெக்சிகோ சலவைக்காரி போன்ற ஜோக்குகளும் கிடைக்கும். (மெக்சிகோ சலவைக்காரியை குடும்பமாக படிப்பது உசிதம் அல்ல)
இப்படி மர்மம், எளியவர்களின் சோகங்கள், சினிமா பஞ்ச் வசனங்கள், விஞ்ஞான நாவல்கள் என அனைத்து வெளிகளிலும் ஒரே நேரத்தில் இயங்கியவர் சுஜாதா தான். அதே நேரத்தில் எழுத்து துறையில் அதிகமானோரை ரசிகர்களாக கொண்டவர் என்றால் அது சுஜாதா மட்டுமே.
அவருடைய பல முக்கியமான நூல்களை மேலே குறிப்பிடத் தவறியிருக்கலாம். சுஜாதாவின் படைப்புகளில் உங்களுக்குப்பிடித்த நூலை கமென்ட் செய்யுங்கள்