ஞாபகம் வருதே…. ஞாபகம் வருதே… – தமிழர்கள் மறந்து போன பழைய விளையாட்டுகள்

Date:

ஓடியாடி கூடி விளையாடும் பாரம்பரிய குழு விளையாட்டுகள் அறிவுத்திறன், கூட்டு முயற்சி, தன்னம்பிக்கை, சகிப்புத் தன்மையை சிறுவர்கள் மத்தியில் உருவாக்கும்.
அத்தகைய விளையாட்டுகளில் கில்லி, பம்பரம், தாயம், பல்லாங்குழி, சிலம்பம், பச்சைக்குதிரை, நொண்டி, நாடு பிடித்தல் உள்ளிட்ட விளையாட்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்து வருகின்றன. தற்போதுள்ள தலைமுறையினர் இந்தப் பெயர்களைக் கேட்டிருக்கக் கூட வாய்ப்பு இல்லை.

இருப்பினும் ஒரு சில கிராமங்களில் இன்றும் உயிர்ப்புடன் இருந்து வந்த பாரம்பரிய விளையாட்டுகளைப் பின்னுக்குத் தள்ளும் வகையில் தனிநபர் வீடியோ கேம்ஸ் இடையில்  புகுந்து விட்டன.

பழந்தமிழர் விளையாட்டுகள்

பழங்காலத்தில் சிறுவர்களுக்கு மரங்கொத்தி, காயா?பழமா?, உப்பு விளையாட்டு,  ஐந்து பந்து என 65 விளையாட்டுகள் இருந்தன.

downloadஇதே போல சிறுமியர்களுக்கு ஒண்ணாங்கிளி இரண்டாம்கிளி, பருப்புசட்டி, கண்கட்டி, அக்கா கிளி செத்துபோச்சு, மோருவிளையாட்டு, கரகர வண்டி, கும்மி, சோற்றுபானை என 27 விளையாட்டுகளும்,

சிறுவர் சிறுமியர் இருவரும் சேர்ந்து விளையாடும் வகையில் தொட்டுவிளையாட்டு, குரங்கு விளையாட்டு, கண்ணாமூச்சி, நொண்டி, குலைகுலையாய் முந்திரிக்காய் போன்ற 30 விளையாட்டுகளும்,

ஆண்கள் மட்டும் விளையாடும் வகையில் ஜல்லிகட்டு, வாடிவாசல், சிலம்பம், பாரிவேட்டை, சடுகுடு, புலிவேடம், பானை உடைத்தல் போன்ற 30 விளையாட்டுகளும்,

குழந்தைகளுக்கு என்று தென்னைமர விளையாட்டு, பருப்புகடைந்து, சீப்பு விக்கிறது என 5 விளையாட்டுகள் இருந்தன.

தமிழர்கள் நாம் கண்டுபிடித்த விளையாட்டுக்கள் அனைத்தும் நமது உடல், மனம், சிந்தனை, மொழி, கலாச்சாரம், பண்பாடு, கணிதம், நிர்வாகம், வாழ்க்கை முறை, விடாமுயற்சி என்று ஏதேனும் ஒரு வகையில் நம் மனதிற்கும், உடலிற்கும்
நன்மைகளை வழங்கக் கூடிய விளையாட்டாகவே இருந்து வந்தது.

நொண்டி விளையாட்டு

நாம் நம் பண்டைய விளையாட்டுக்களை முற்றிலும் மறந்து விட்டோம். அவற்றில் ஒன்று தான் நொண்டி விளையாட்டு. ஒற்றைக்காலில் தவ்வி நடப்பது நொண்டி. ஓடுபவர்களை நொண்டி அடித்துத் தொடுவது நொண்டி விளையாட்டு. இது குழந்தைகளுக்கு நல்ல உடற்பயிற்சி ஆகும். நொண்டி விளையாட்டு குழந்தைகளின் உடலுக்கு ஒரு புத்துணர்ச்சியை அளித்து, அவர்களின் சோம்பேறித்தனத்தை குறைக்கிறது. இது கால்களுக்கு இடையே ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது.

04BGM HOPSCOTCH 2 1572019gபம்பரம் விடுதல்

இந்த பம்பர விளையாட்டிற்கு இத்தனை பேர் தான் விளையாட வேண்டும் என்று வரைமுறையில்லை. இதில் எத்தனை பேர் வேண்டுமானாலும் கலந்துக்கொள்ளலாம். முதலில் ஒரு வட்டம் போட்டுக் கொள்ள வேண்டும். அந்த வட்டத்தைச் சுற்றி நின்று பம்பரத்தையும் சாட்டையையும் சுற்றுவதற்காகத் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒன் டூ த்ரி சொல்லியவுடன் அனைவரும் பம்பரத்தைச் சாட்டையால் சுற்றிக் கொண்டு வட்டத்திற்குள் பம்பரத்தை சுழலவிட வேண்டும்.

பின்பு சாட்டையைப் பயன்படுத்தி பம்பரக்கட்டையை மேல் எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்க முடியாதவர்களின் பம்பரங்களை வட்டத்தின் உள்ளே வைக்க வேண்டும். வெளியே உள்ளவர்கள் வட்டத்திலிருக்கும் பம்பரத்தை, தங்கள் பம்பரத்தைப் பயன்படுத்தி வெளியே எடுக்க வேண்டும். அவ்வாறு பம்பரத்தை வட்டத்தினுள் விடும்போது, பம்பரம் இல்லாதவர் அந்தப் பம்பரத்தை பிடித்துவிட்டால் அந்தப் பம்பரமும் வட்டத்தினுள் வந்துவிடும். சுழற்றுபவரின் பம்பரம் சுழலவில்லை எனில், அந்தப் பம்பரமும் வட்டத்தினுள் வைக்கப்படும். வட்டத்தில் உள்ள அனைத்துப் பம்பரங்களும் வெளியே வந்து விட்டால் மீண்டும் ஆட்டத்தைத் துவங்க வேண்டும்.

ஆடு புலி ஆட்டம்

ஆடு புலி ஆட்டம் என்பது திண்ணை வியூக விளையாட்டு ஆகும். இது குறிப்பிட்ட கட்டங்கள் கொண்ட வரைவில் விளையாடப் படுகிறது. ஊர்புறங்களில் தரையில் இந்தக் கட்டங்களை சுண்ணாம்புக் கட்டி அல்லது சாக் பயன்படுத்தி வரைந்து கொள்வார்கள். புளியங்கொட்டைகள், கற்கள், மற்றும் சிறப்பாக தயாரிக்கப்பட்ட காய்களை அதில் நகர்த்தி விளையாடப் படுகிறது. ஆடு புலி ஆட்டத்தை வெட்டும் புலி ஆட்டம் என்றும் கூறுவர். இது ஒரு மதிநுட்ப உத்தி விளையாட்டு.

Aadupuliஆடு புலி ஆட்டக்கோடு விளையாடுவதற்கு தேர்ந்தெடுத்த பகுதியில் முக்கோணக் கூம்புக் கோடு ஒன்றை வரைந்து, கூம்பின் உச்சியிலிருந்து அடிக்கோட்டை உள்ளே தொடும் மேலும் இரண்டு கோடுகள். இந்தக் கோடுகளை வெட்டும்படி போட்ட 3 கிடைக்கோடுகள். கிடைக்கோடுகளின் முனைகள் இருபுறமும் குத்துக் கோடுகளால் இணைக்கப்பட்டிருக்கும்.

மெல்ல வந்து கிள்ளிப்போ

2 அணியினர் எதிரெதிரே அமர்ந்திருப்பார்கள். இரு அணித் தலைவர்களும் தங்கள் அணியினருக்கு ஒவ்வொரு பெயர் வைப்பார்கள். பழத்தின் பெயர், பூவின் பெயர், சினிமாவின் பெயர் என எதுவாக இருந்தாலும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். பின்னர் எதிர் அணியில் உள்ள ஒருவரின் கண்களை இறுக மூடிக்கொண்டு தம் அணிக்கு வைத்த ஒரு பெயரைச் சொல்லி அழைப்பார் (உதாரணத்துக்கு… ‘ரோஜாப்பூவே ரோஜாப்பூவே மெல்ல வந்து கிள்ளிப்போ…’).

ரோஜாப்பூ சத்தமில்லாமல் வந்து கிள்ளிவிட்டு சாதாரணமாக அமர்ந்து விடும். பின், எல்லோரும் தலையை வெட்டி நாய்க்குப் போடுங்க என்று ஆணையிடுவார். எல்லோரும் கீழே குனிந்து கொள்வார்கள். அதன் பிறகு கண்களை திறந்து விடுவார். இப்போது கிள்ளு வாங்கியவர் ரோஜாப்பூ யாரென கண்டுபிடிக்க வேண்டும்!

VANGUDUகல்லன் வாரான் கண்டுபுடி

மொத்த பிள்ளைகளில் பெரியவர்களாக இருவர் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள்தான் விளையாடப்போகும் வீரர்கள். மற்ற அனைவரும் ஒரே வரிசையில் கீழே சம்மண மிட்டு அமர்ந்து கொள்வார்கள். எல்லோரும் கைகளை பின்னால் வைத்திருப்பார்கள். வீரர்களில் ஒருவர் முன்னால் நிற்பார். மற்றவர், கையில் ஒரு கல்லை எடுத்துக்கொண்டு,

காயே கடுப்பங்கா
கஞ்சி ஊத்தி நெல்லிக்கா
உப்பே புளியங்கா
ஊறவச்ச நெல்லிக்கா
கல்லன் வாரான் காரைக்குடி
கல்லை நீயும் கண்டுபிடி’

என்று பாடியபடி ஒவ்வொருவருடைய கையிலும் கல்லை வைப்பது போல பாவ்லா காட்டி யாராவது ஒருவரின் கையில் வைத்து விடுவார். வைத்தபின் எல்லாரும் தலையை வெட்டி நாய்க்குப் போடுங்க என்பார். எல்லோரும் குனிந்து கொள்ள, யாருடைய கையில் கல் இருக்கிறது என்பதை எதிரில் நிற்பவர் கண்டுபிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் கல்லை வைத்தவருக்கு ஒரு மதிப்பெண்.

1 32பூப்பறிக்க வருகிறோம்

2 குழுவினர் எதிரெதிர் திசையில் நிற்பார்கள். ஒருவரோடு ஒருவர் கைகோர்த்த படி எதிர் அணியினரை நோக்கி குதித்தபடி பாட்டு பாடி வருவார்கள். இரு அணியிலும் சமமான பிள்ளைகள் இருக்க வேண்டும்.

‘பூப்பறிக்க வருகிறோம் வருகிறோம்

எந்த மாதம் வருகிறீர் வருகிறீர்

டிசம்பர் மாதம் வருகிறோம் வருகிறோம்

யாரைத் தேடி வருகிறீர்

பூவைத் தேடி வருகிறோம்

எந்தப் பூவை தேடுவீர்

மல்லிகையைத் தேடுவோம்’

இப்படி பாடியதும் ‘மல்லிகை’ என்று பெயர் வைத்த பெண்ணைப் பிடித்து இழுப்பார்கள். அந்த பெண் அந்தப் பக்கம் சென்றுவிடாமல் இந்த அணி இழுக்க, ஒரே களேபரம்தான்!

இவை எனக்குத் தெரிந்த விளையாட்டுகள். உங்களுக்குத் தெரிந்தவற்றை நீங்களும் பின்னூட்டத்தில் பகிருங்கள்.

 

Image Credits : Tamilnadu Tourism

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!