புதிதாக அச்சடிக்கப்பட்ட 100 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்தது.
ஊதா வண்ணத்தில் இந்த ரூபாய் நோட்டுகள் இருக்குமென்றும், முந்தைய 100 ருபாய் நோட்டுகளை விட புதிய நோட்டுகள் அளவில் சிறியதாக இருக்குமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நோட்டுகளுக்கான மாதிரி வடிவத்தில், ரூபாய் நோட்டின் பின்புறம் குஜராத் மாநிலத்தில் உள்ள பாரம்பரிய சின்னமான ராணியின் கிணறு இடம் பெற்றுள்ளது.

இந்த ராணியின் கிணறு, இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பதான் நகரத்தில் அமைந்துள்ள ஒரு படிக்கிணறு ஆகும். நூற்றுக்கணக்கான படிகளுடன் கூடிய அழகிய இக்கிணற்றை இந்தியாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்களின் ஒன்றாக 22 ஜூன் 2014 அன்று யுனெஸ்கோஅறிவித்துள்ளது.இராணி உதயமதி நிறுவியதால் இக்கிணற்றுக்கு இராணியின் கிணறு என்று பெயராயிற்று.
காலப் போக்கில் இந்த அழகிய கிணறு கற்களாலும் மணலாலும் மூடப்பட்டுவிட்டது. இதனால் பலருக்கும் இந்தக் கிணற்றை பற்றித் தெரியாமலே போய்விட்டது. 1960 ஆம் ஆண்டு தொல்லியல் துறையால் இந்தக் கிணறு கண்டுபிடிக்கப்பட்டது.

இக்கிணற்றின் பக்கவாட்டுச் சுவர்களில் விஷ்ணுவின் பத்து அவதாரங்கள், காளி, ராமர், கிருஷ்ணர், நரசிம்மர், கல்கி, மகிசாசூரனை வென்ற மகிசாசூரமர்தினி, வாமனர், வராகி, நாககன்னிகள், யோகினி, 16 வகையான கலைநயத்துடன் கூடிய அழகிய தேவலோக தேவதைகளின் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. மேலும் கௌதம புத்தர், சாதுக்கள், திருபாற்கடலில் ஆதிசேசன் மீது பள்ளி கொண்டுள்ள விஷ்ணுவின் சிற்பங்கள் கொண்டுள்ளன.
மேலும் இந்த ராணியின் கிணறு மழை நீர் சேமிக்கும் இடமாக இருந்துள்ளது. இக்கிணற்றைச் சுற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு விஷக்காய்ச்சல் நீக்கும் ஆயுர்வேத மருத்துவக் குணம் கொண்ட செடி, கொடிகள் வளர்க்கப்பட்டு வந்தது என்று தெரிய வந்துள்ளது.

இந்த ராணியின் கிணறு நீர் சேமிக்கும் இடமாக மட்டும் இல்லாது குஜராத் மக்களின் ஆன்மிகத் தலமாகவும் விளங்கியுள்ளது. இக்குளத்தின் பக்கவாட்டுச் சுவர்களில் 800 க்கும் மேற்பட்ட அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் பாரம்பரியமான கலை மற்றும் பண்பாட்டுச் சின்னமாக திகழ்கிறது, ராணி கி வாவ் (Rani ki vav) என்று அழைக்கப்படும் ராணியின் கிணறு.