மோனாலிசாவைத் தெரிந்தவரெல்லாம் கைதூக்குங்கள். லியனார்டோ டாவின்சி வரைந்த உலகின் அதிக மதிப்புள்ள ஓவியம் அது என உங்களுக்கு ஞாபகம் வந்திருந்தால் உங்களுடைய ஞாபகத்திறனுக்கு ஒரு வணக்கம். ஆனால் இப்போது விஷயம் அதுவல்ல. மோனாலிசாவை ஜப்பானைச் சேர்ந்த கெய்டா சகாகி (Keita Sagaki) என்பவர் தத்ரூபமாக மறுவடிவமைப்பு செய்திருக்கிறார். அதுவும் வெறும் பேனா கொண்டு. இருங்கள், ஆச்சர்யப்பட இன்னும் ஒரு விஷயமும் இருக்கிறது. ஒட்டுமொத்த ஓவியமும் ஜப்பானின் கார்ட்டூன் தொடரான மாங்கா – வைக் கொண்டே மோனாலிசாவை வரைந்து முடித்திருக்கிறார். இப்படி யோசிப்பீர்கள் என்று தெரிந்துதான் படத்தை கீழே கொடுத்துள்ளேன்.

தீராத கலைப் பணி
மேற்கு உலகப் படைப்புகளை ஜப்பானின் ஓவியக்கலையோடு கலந்து வரைவதால் இது ஓவியத்துறையின் புதிய புரட்சி என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். 0.015 தடிமனுள்ள கருப்புப் பேனாவால் தான் இந்த ஒட்டுமொத்த ஓவியத்தையும் வரைந்தார் என்பது நம்புவதற்குக் கடினமாக இருந்தாலும் அதுதான் உண்மை. வரையும்போது முன்மாதிரிகளை எல்லாம் வரைவதில்லை இவர். நேரிடையாக வெள்ளைத் தாளில் வரைய ஆரம்பித்துவிடுவாராம். சிறு தவறு நடந்தாலும் மறுபடி பிள்ளையார் சுழியிலிருந்து துவங்கவேண்டும். இதன் காரணமாகவே மிகப் பொறுமையாகத் தன் படைப்புகளை செதுக்குகிறார் சகாகி. சில ஓவியங்கள் வரைந்து முடிய வருடக்கணக்கில் ஆகுமாம். ஆனாலும் அதையெல்லாம் நாம்மாள் பொருட்படுத்துவதேயில்லை. கலைஞர்களுக்கே உரித்தான பொறுமை.
மனித வரலாற்றில் அதிக விலைக்கு விற்கப்பட்ட 10 ஓவியங்கள்.
2004 – ஆம் ஆண்டு முதல் சகாகி இப்படியான ஓவியங்களை வரைந்து வருகிறார். அவர் மாங்கா கதாபாத்திரங்கள் கொண்டு வரைந்த ஒரே பழைய ஓவியம் மோனாலிசா மட்டுமே. டாவின்சியின் Last Supper, பொட்டிசெல்லியின் The Birth of Venus போன்ற ஓவியங்களிலும் தன் திறமையைக் காட்டியிருக்கிறார் சகாகி.
மாங்கா
இதை ஆங்கிலத்தில் எழுதினால் Manga என்று வரும். அதாவது Man மற்றும் Ga. அர்த்தம் வேடிக்கையான ஓவியங்கள். ஜப்பானில் இந்த தொடர் மிகவும் பிரபல்யம். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக அதுவும் உருவாக்கப்பட்டு புத்தகமாகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சியாகவும் வெளிவருகிறது. ஜப்பானியர்கள் மனிதப்பிறவி எடுத்ததே மாங்கா பார்ப்பதற்குத்தான் என்ற அளவிற்கு அதன்மேல் மோகம் கொண்டு படித்து/பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

புத்த மதத்தின் மேல் பற்றுக்கொண்டு ஆழ்நிலை தியானத்தில் ஈடுபட்டிருந்த ஒருநாள் திடீரெனெ இந்த யோசனை வந்ததாகவும் அதிலிருந்து இதில் ஈடுபட்டு வருவதாகவும் சகாகி தெரிவிக்கிறார். எப்படி வந்தாலும் கலை கலை தானே மக்களே !! அவரைப்பற்றி இவ்வளவு தூரம் சொல்லிவிட்டு அவரைக் காண்பிக்காமல் இருப்பது சரியல்ல. இவர்தான் மோனாலிசாவின் முகத்தில் பொம்மை போட்டவர்.
