நாம எல்லோருமே பள்ளி நாட்கள்ல கப்பல், கத்தி கப்பல் செஞ்சு தேங்கியிருக்குற மழைத் தண்ணீர்ல விட்டு விளையாடிருப்போம்.. நோட்டு புத்தகத்தின் கடைசி பக்கத்தை கிழித்து ராக்கெட் செஞ்சு வகுப்பறையில் பறக்க விட்டிருப்போம். அப்படி காகிதத்தை மடித்தும் வளைத்தும் உருவங்கள் செய்யும் கலைக்கு பெயர் தான் ஓரிகாமி. இது 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு ஜப்பானிய கலை.
ஜாப்பனீஸில் ‘ஓரி’ என்பது மடித்தலையும் ‘காமி’ என்பது காகிதத்தையும் குறிக்கிறது. இக்கலை ஆரம்பத்தில் ஓரிகாடா எனவும் அழைக்கப்பட்டிருக்கிறது.
Also Read: ஓவியம் போலவே இருக்கும் ஜப்பான் நாட்டு அதிசய குளம்! கண்கவர் படத்தொகுப்பு!
இந்த கலை, காகிதத்தை மடித்து மட்டுமே செய்யக்கூடியதே தவிர வெட்டுதல் ஒட்டுதல் எதுவும் இல்லாத கலை.

ஆறாம் நூற்றாண்டில், புத்த துறவிகள் முதன்முதலில் காகிதங்களை ஜப்பானிற்கு கொண்டு வந்த சில காலங்களில் இந்தக் கலை உருவானது. ஆரம்பத்தில் காகிதங்களின் விலை அதிகமாக இருந்ததால் மதம் சார்ந்த விழாக்களுக்கு மட்டுமே இக்கலையை பயன்படுத்தியுள்ளனர்.
1797 ல் சென்பஜுரு ஓரிகாடா என்பவர் இக்கலையை முதன்முதலில் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்.
மிகவும் பிரபலமான ஓரிகாமி மடிப்புகளில் ஒன்று ஜாப்பனீஸ் நாரை. ஜப்பானிய கலாச்சாரத்தில் நாரை அதிர்ஷ்ட பறவையாக கருதப்படுவதால் யாரொருவர் ஓரிகாமி மடிப்பில் ஆயிரம் நாரைகளை செய்து முடிக்கிறார்களோ அவர்களுடைய ஆசைகள் நிறைவேறுமென நம்பப்படுகிறது.
சடாகோ சசாகி

1945, ஆகஸ்ட் 6 அன்று ஜப்பானிலுள்ள ஹிரோஷிமாவில் நடத்தப்பட்ட அணுகுண்டு தாக்குதலின் கதிர்வீச்சினால், பிறந்தபோதே பாதிக்கப்பட்ட சடாகோ சசாகி என்னும் சிறுமி, தனது பன்னிரெண்டாம் அகவையில் இரத்த புற்றுநோயால் அவதியுற்றிருந்தாள். அப்போது அவளது தோழியொருத்தி, ஓரிகாமி நாரையைப் பற்றியும் அதன் மீதிருந்த நம்பிக்கை பற்றியும் சடாகோவிடம் கூற, தான் இன்னும் அதிக காலம் வாழவேண்டுமென ஆசைப்பட்ட சடாகோ, ஆயிரம் நாரைகளை செய்து முடித்துவிட வேண்டுமென தீர்மானிக்கிறாள். மருத்துவமனையில் இதே நோயினால் பாதிக்கப்பட்ட பல குழந்தைகளின் இறப்பை பார்த்த சடாகோ தன்னால் நீண்ட காலம் வாழ முடியாதென்பதை உணர்ந்து, உலக அமைதிக்காக வேண்டி ஆயிரம் நாரைகளை செய்யத் துவங்குகிறாள். ஆனால் அவள் இறப்பதற்கு முன் 644 நாரைகளை மட்டுமே செய்யமுடிந்துள்ளது. சடாகோவின் இறப்பிற்குப்பின், அவள் வகுப்பு நண்பர்கள் அவள் சார்பில் மீதமுள்ள 356 நாரைகளை அவளுக்காக செய்து முடித்திருக்கிறார்கள். அவள் செய்து முடித்த நாரைகளையும் அவளது நண்பர்கள் செய்த நாரைகளையும் அவளது உடலோடு சேர்த்து அடக்கம் செய்துள்ளனர். அவள் உலக அமைதியை வேண்டி நாரைகள் செய்ததால், இந்த ஓரிகாமி நாரை அமைதிச் சின்னமாகவும் கருதப்படுகிறது. அவளது நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஹிரோஷிமா அமைதிப் பூங்காவில் அவளது சிலையை நிறுவியுள்ளார்கள். ஒவ்வொரு வருடமும் 10,000,000 ஓரிகாமி நாரைகள் ஹிரோஷிமாவிற்கு அனுப்பப்பட்டு அவை சடாகோவின் சிலை முன் வைக்கப்பட்டு வருகிறது. மொத்தமாக ஓராயிரம் ஓரிகாமி நாரைகளை ஜப்பானிய மொழியில் சென்பாஜுரு (senbazuru) என அழைக்கிறார்கள்.
Also Read: ஹிரோஷிமா- புத்துயிர்ப்பின் நகரம்..!! மொத்த நகரமும் மீண்டெழுந்த கதை!

பரிசுப்பொருளாக பயன்படும் ஓரிகாமி!
ஜப்பானியத் திருமணங்களில் ஓரிகாமி பட்டாம்பூச்சிகளும் இன்னும் பல உருவங்களும் செய்யப்பட்டு பரிசுப்பொருட்களோடு சேர்த்துக் கொடுப்பது நடைமுறையில் உள்ளது. ஆரம்பத்தில் ஓரிகாமி, பண்டிகைகளிலும், விழாக்காலங்களிலும் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பின்னர் பல மக்கள் இதன் மீது ஆர்வம் கொண்டு, அலங்கரிக்கவும் கலைநயத்திற்காகவும் கற்றுக்கொண்டுள்ள ஆரம்பித்துள்ளனர். இந்தக் கலை கணிதம் மற்றும் வடிவியலின் அடிப்படையைக் கற்பிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
சாமுராய்கள் (ஜப்பானிய பெருமக்களின் மெய்காவற்படை வகுப்பினர், படைத்துறை வகுப்பினர்) எதிர்காலத்தில் எதிர்கொள்ளப்போகும் ஆபத்துகளிலிருந்து தப்பிக்கும் நல்வாய்ப்புக்காக, ஓரிகாமி மடிப்புகளால் ஆன உருவங்களை கருவாடு அல்லது இறைச்சியோடும் சேர்த்து ஒருவருக்கொருவர் அன்பளிப்பாய் கொடுத்துக் கொள்வது வழக்கமாய் இருந்திருக்கிறது. காலப்போக்கில் இறைச்சிகள் கொடுக்கும் வழக்கம் மறைந்து வெறும் ஓரிகாமி மடிப்புகளை மட்டுமே பரிசளிப்பது வழக்கமாகிவிட்டிருக்கிறது. இந்த பாரம்பரியம் நோஷி அவாபி என அழைக்கப்படுகிறது.
ஓரிகாமி கின்னஸ் சாதனைகள்!
- கின்னஸ் புத்தகத்தில் ஓரிகாமி மடிப்பிற்கான பல சாகசங்கள் இடம்பெற்றிருக்கிறது. மிகச்சிறிய அல்லது மிகப்பெரிய ஓரிகாமி உருவங்கள், குறைந்த நேரத்தில் ஆயிரம் நாரைகள் செய்தது என இன்னும் பல அதில் இடம் பெற்றுள்ளன.
- உலகிலேயே மிகச்சிறிய ஓரிகாமி நாரையை 0.1mm அளவில் செய்து நைட்டோ அகிரா என்பவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
- இதுவரை செய்யப்பட்டதிலேயே மிகப்பெரிய ஓரிகாமி நாரையின் அளவு – 256 அடி 6 இன்ச் ஆகும்.
- ஓரிகாமி மடிப்பில் மிக நீளமான விமான உருவம் வெறும் 22.46 விநாடிகளில் செய்து முடிக்கப்பட்டுள்ளது.