17,508 தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில் உள்ள பாலி (Bali) தீவில்தான் இந்த விசித்திர அமைதிப் பண்டிகை (Day of silence) இன்று கொண்டாடப்படுகிறது.
நேப்பி (Nyepi) – அமைதிக்காக ஒரு நாள்
மார்ச் 7. இந்தோனேசியா பாலி தீவில் வருடந்தோறும் இந்தக் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. புது வருட நாளன்று நம்மைப் போல அவர்கள் பட்டாசு வெடித்து, தொல்லை கொடுக்கும் கேலிக்கூத்துகளில் அவர்கள் ஈடுபடுவதில்லை. மொத்தமாக ஒரு ஏஜென்சியிடம் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பணத்தைக் கொடுத்து, இரவு சென்று பார்த்தால் ஜனவரி ஒன்று ஏப்ரல் ஒன்றாகியிருக்கும். சென்னையில் இந்த ஆண்டு இப்படியெல்லாம் சம்பவம் நடந்தேறியது. இதுபோலெல்லாம் பாலி வாசிகள் (Balinese) முட்டாளாவதில்லை. பாலி வாசிகள் வருடம் முழுவதும் ஏற்படும் மன உளைச்சலில் இருந்து விடுபட ஒரு நாள் முழுவதும் அமைதிக்காக மட்டும் செலவிடுகின்றனர். சத்தம் போட்டால் நீங்கள் கைது செய்யப்படுவீர்கள். ஹேப்பி நியூ இயர். ஸ்ஸ்ஸ் …த டே ஆஃப் சைலன்ஸ்ஸ்ஸ்….

சத்தம் போடாம நியூ இயரா…
வருடத்தின் கடைசி நாளன்று பல்விதமான கோர பொம்மைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்கின்றனர் பாலி வாசிகள். மது, மாது, தீ என அசையும் அசையா பொருள்களெல்லாம் வண்ண மயத்தில் வானவில்லாக காட்சியளிக்கும். டபடப ட்ரம்செட், மடமட மைக்செட் என விடிய விடிய கத்திக் கூப்பாடு போட்டபின் புதுவருடத்தின் காலை 6 மணிக்குள் கப்சுப்பென்று வீடுகளுக்குள் அடங்கிவிடவேண்டும். சத்தமிடும் மின்னணு உபகரணங்கள் அனைத்தும் ஆஃப் செய்யப்படவேண்டும். ஜில்லுனு காத்து ஜன்னலை சாத்து. பகல்ல எதுக்கு விடிபல்பு. மின்விளக்குகள் அன்று மட்டும் மின்னா விளக்குகள். காலை ஆறு மணி முதல் தீவே மயானக் காட்சி அளிக்கும். மறுநாள் காலை ஆறு மணிவரை. சத்தம் போடும் குட்டிப்பிள்ளைகளை “அஞ்சுகண்ணன் பூச்சாண்டியக் கூட்டிகிட்டு வர்றான் “ என பயமுறுத்தி அடித்து படுக்கப் போட்டுவிடுவர். வீட்டுக்குள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். சமைக்கக் கூடாது. சத்தம் வந்தது..சங்கத்துல பைன் கட்டணும்.
முந்தைய தினம் தமது தீய குணங்களையெல்லாம் உருவமாக்கி (Ogoh-ogoh) தீயிட்டுப் பொசுக்கியபின், இன்று மட்டுமாவது நமக்காக வாழ்வதைக் உணர்த்தும் இந்நாள் அங்கு வாழும் இந்துக்களின் பண்டிகையாகும். ஆனால் அனைத்து மதத்தவருமே இப்பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடுகிறார்கள். தான் செய்த பாவங்களையும், உறவினர்களோடு சண்டையிட்டதையும் எண்ணிப்பார்த்து தவற்றைத் திருத்திக்கொள்ள இந்த நாளை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக அரசாங்கமும் பாலி மக்களுக்கு உதவுகிறது.

நோ சீட்டிங்..நோ சாட்டிங்..
காலை ஆறுமணிக்கு அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்படும். 24 மணிநேரம் வரை பாலி விமானநிலையம் வேலைநிறுத்தம் செய்யும். டேட்டாவுக்கு டாட்டா. செல்போன் சிம்கார்டு செயலிழந்து விடும். வைஃபை க்கு பைபை. இத்தோடு அனைத்து “வாயும்” தனது சேவையை நிறுத்திக்கொள்ள வேண்டும். பொது இடங்களில் உலவி வரத் தடா. வெளிநாட்டவர் கூட இந்த நாளை மதித்து மதுவை உறிஞ்சிக்கொண்டு ஹோட்டல் அறைகளுக்குள்ளேயே அடங்கியிருப்பர். அன்று முழுவதும் காவல்துறையும் அவசரகால உதவிமையங்களும் மட்டுமே இயக்கத்தில் இருக்கும்.
“சிங்கிள்ஸ்”இதனைப் படிக்க வேண்டாம்…
ஒருநாள் முழுவதும் சும்மா இருந்த வாய்க்கு மறுநாள் தான் தீபாவளி. உள்ளூர் இளைஞர்களால் இந்நாள் “கிஸ்ஸிங் டே”வாக கொண்டாடப்படுகிறது. திருமணமாகாத இளைஞர்கள் வெளிநாடுகளில் இருந்து கூட இங்கே கூடிவிடுவர். அன்று கூட சிங்கிளாக சுருண்டு கிடந்த மிருகசீரிஷ ஆட்களும் உண்டு. இந்த முத்தநாள் இந்தியாவில் தெலுங்கானா, கர்நாடகா,ஆந்திரா மாநிலத்தில் “உகடி” நாளாக கொண்டாடப்படுகிறது. கிளம்பிவிட நினைக்காதீர்கள். அது நமது தமிழ் வருடப்பிறப்பு போலத்தான். கல்ச்சர். கல்ச்சர்.

இதுபோல் புரளியையும் புரணியையும் பேசாதிருக்கதான் மாதமொரு நாளை நாம் மவுன விரதமாகவும், நோன்பாகவும் இந்தியாவில் கடைபிடிக்கிறோம். கஜாப் புயலால் ஒரு வாரத்துக்கு சத்தியத்துக்கு கட்டுப்பட்டு கெடந்தோமே அதைத்தான் அவர்கள் பண்டிகையாக கொண்டாடுகிறார்கள்.