சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பே செழித்திருந்த நாகரீகங்களில் முக்கியமானது பாபிலோனிய நாகரீகம் ஆகும். யூப்ரடிசும், டைக்ரீசும் இணையும் வளமான பிரதேசத்தில் தோன்றிய இந்த நாகரீகம் பல ஆண்டுகாலம் வரை நீடித்தது. நேபுகாட் நேசர் மற்றும் ஹம்முராபி போன்ற மிகச்சிறந்த சக்கரவர்த்திகள் இந்த பிரதேசத்தை ஆட்சி செய்தார்கள்.
மக்களின் சமூக நிலை, கட்டிடக்கலை, வானியல் அறிவு மற்றும் நீதி நிர்வாகம் போன்ற துறைகளில் இந்த அரசர்கள் தேர்ந்த ஆட்சியை நடத்தியிருக்கிறார்கள். இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த நாகரீகத்தின் மையமான பாபிலோனாவின் நிலைமை தற்போது சிதைந்திருக்கிறது. இத்தனைக்கும் ஏழு உலக அதிசயத்தில் இதுவும் ஒன்றாக இருந்தது. சொல்லப்போனால் உலக வரலாற்றில் அந்நகரத்தின் புகழ் வீழ்ச்சியடைந்தது இப்போதைய காலம் தான். அதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று, ஈராக்கை ஆண்ட சாதாம் உசைனின் மாளிகைக் கனவு. தற்போது பாபிலோனா இருக்கும் இடத்தில் மிகப்பெரிய மாளிகை ஒன்று கட்ட முன்னாள் அதிபர் சதாம் முயற்சித்தார். இதனால் பழைமையான பல பொக்கிஷங்கள் அழிக்கப்பட்டன.

இரண்டாவது அமெரிக்கா. வளைகுடா யுத்தத்திற்கு பிறகு அமெரிக்கா – ஈராக் சச்சரவு உச்சகட்டத்தை எட்டியது. 2003 ல் அமெரிக்க படையெடுப்பின் போது பாபிலோனியா அவர்களின் ராணுவ முகாமாக செயல்பட்டது. இதனை உலகில் உள்ள பல்வேறு வரலாற்று ஆய்வாளர்கள் அப்போதே எதிர்த்தனர். ஆனாலும் புஷ் எதையும் கண்டுகொள்ளவில்லை. இத்தனை வரலாற்று சிறப்புமிக்க நகரத்திற்கு உலகின் புராதான நினைவுச்சின்னங்களுக்கு கொடுக்கப்படும் யுனெஸ்கோ விருதை வாங்கிக்கொடுத்துவிட ஈராக் 1980 களில் இருந்து முயன்று வந்தது. அவர்களுடைய குரலுக்கு தற்போதுதான் செவிமடுத்திருக்கிறது ஐ.நா.

சமீபத்தில் அசர்பைஜானில் நடந்த ஐநாவின் சிறப்பு கூட்டத்தில் புதிய சில நகரங்கள் உலகின் புராதான சின்னங்களின் பட்டியலில் இணைத்துக்கொள்ளப்பட்டன. மேலும் இக்கூட்டத்தில் தற்போதைய பாபிலோனின் நிலை மிக மோசமாக இருக்கிறது. உடனடி புனரமைப்பு வேளைகளில் ஈடுபடவும் திட்டங்கள் முன்மொழியப்பட்டன. அதில் பாபிலோனும் ஒன்று. இதன்மூலம் இராக்கின் 36 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறி இருக்கிறது.
புதிதாக புராதான சின்னங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மற்ற இடங்கள் :
புர்கினோ பேசோவில் உள்ள பழங்கால இரும்பு ஆய்வு மையம்
பிரேசிலில் இருக்கும் பராடி மற்றும் இல்ஹா கிராண்டி.
ஐஸ்லாந்தில் இருக்கும் வட்னாஜோகுள் தேசிய பூங்கா.
பிரெஞ்ச் கடற்கரை மற்றும் ஆஸ்ட்ரல் நிலப்பகுதிகள்.
அல்பேனியாவில் இருக்கும் ஓஹ்ரிட் பகுதி.