சீனாவின் சுஹாய் நகரத்தையும், ஹாங்காங்கையும் இணைப்பதற்குக் கட்டப்பட்டிருக்கும் பாலமே உலகின் மிக நீளமான பாலம் என்ற பெயரை தட்டிச் சென்றிருக்கிறது. கிரேட்டர் வளைகுடா திட்டத்தின் முக்கிய அம்சமாக இத்திட்டம் பார்க்கப்படுகிறது. இதன்மூலம் சீனா மற்றும் ஹாங்காங் இடையேயான போக்குவரத்து மற்றும் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லலாம் என்கிறது சீனா. 9 ஆண்டுகால கடின உழைப்பில் இப்பாலம் கட்டி முடிக்கப்பட்டு இருக்கிறது.

உலகின் மிக நீண்ட கடல் பாலம்
கடந்த 2010 – ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இத்திட்டத்திற்கு 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்பட்டது. அதற்கு முன் தைவான் நாட்டின் அதிவேக ரயில் திட்டத்திற்கு கட்டப்பட்ட பாலமே உலகின் மிகப்பெரிய பாலமாக இருந்தது. தற்போது சீனா – ஹாங்காங் இடையே 55 கிலோமீட்டர் நீளத்தில் கட்டப்பட்ட இப்பாலத்தினால் 6 கோடியே 80 லட்சம் மக்கள் பயன்பெறுவர். 2006 – ஆம் ஆண்டிலேயே இப்பணிகள் முடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பணிகளில் தாமதம் தொடர்ந்து ஏற்பட்டதால் மேலும் இரண்டு வருடங்கள் பணி நீடித்தது.
தென் சீனாவில் 56,500 சதுர கிலோமீட்டர்களை இப்பாலம் இணைக்க இருக்கிறது. இதனால் 11 பெரு நகரங்கள் வளர்ச்சியடையும். ஹாங்காங்கை ஓட்டியுள்ள பகுதிகளில் வாழும் மக்களில் பெரும்பாலானோர் வறுமையில் தவித்து வருகின்றனர். இப்புதிய பாலம் அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் என ஹாங்காங் நகர போக்குவரத்து உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பூகம்பங்களைத் தாங்கும்
தென்சீனக்கடல் பகுதிகளில் நிலநடுக்க அபாயம் அதிகம் என்பதால் இந்தப் பாலத்தினை வடிவமைக்கும் போதே பூகம்பங்களைத் தாங்கும் படி வலுவான கட்டமைப்பாக இருக்கவேண்டும் என சீன அரசு பல யுக்திகளை பயன்படுத்தியது. ரிக்டர் அளவுகோலில் 8 வரை ஏற்படும் நிலநடுக்கங்களைத் தாங்கும் விதத்தில் பாலம் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அதி பயங்கர சூறாவளிகளில் இருந்தும் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் இந்தப் பாலம். இது அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகர பாலத்தினை விட 4.5 மடங்கு அதிக நிதி இந்த பிரம்மாண்ட திட்டத்திற்குச் செலவளிக்கப்பட்டிருக்கிறது.

அரசியல் காரணங்கள்
சீனாவிலிருந்து ஹாங்காங் செல்வதற்கான பயண நேரம் இப்பாலத்தின் வருகையால் 3 மணிநேரத்திலிருந்து 30 நிமிடங்களாகக் குறையும். ஹாங்காங் சீனாவிலிருந்து வெளியேற பல போராட்டங்கள் அங்கே இன்று வரை நடந்துகொண்டே தான் இருக்கின்றன. எனவே ஹாங்காங் பிராந்தியத்தில் தன்னுடைய ஆளுமையை நிலைநிறுத்தவே சீனா இவ்வளவு செலவளிப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.