தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தியில் கவனம் செலுத்தி வரும் இந்தியா, உட்கட்டமைப்பு விவகாரத்தில் தீவிரமாக இயங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்தியாவின் 100 – வது விமான நிலையம் சிக்கிம் மாநிலத்தில் துவங்கப்பட்டிருக்கிறது. வட கிழக்கு மாநிலங்களின் போக்குவரத்துத் தேவைகளை குறைக்கும் நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.

4,500 அடி உயரத்தில் !!
சிக்கிம் மாநிலத்தின் பாக்யாங் (Pakyong) கிராமத்தில் அமைந்துள்ள இப்புதிய விமான நிலையம் கடல் மட்டத்திலிருந்து 450 அடி உயரத்தில் அமையப் பெற்றிருக்கிறது. மத்திய அரசின் UDAN (Ude Desh Ka Aam Nagrik) திட்டத்தின் கீழ் இந்த விமான நிலையம் கட்டப்பட்டது. சிக்கிம் மாநிலத் தலைநகரான கேங்டாக் – கிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த விமான நிலையம் வரும் அக்டோபர் முதல் வாரத்திலிருந்து தன் சேவையைத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தொழில்நுட்ப சாதனை
வட இந்தியாவுக்கே உரித்தான கடும் பனி, அடர் மழை காரணமாக ஏற்படும் நிலச்சரிவு ஆகியவற்றிற்குத் தகுந்தாற் போல் இவ்விமான நிலையம் கட்டப்பட்டிருக்கிறது. 605 கோடி செலவில் 201 ஏக்கர் பரப்பளவில் இப்புதிய விமான நிலையம் பரந்து விரிந்திருக்கிறது. மலைப்பிரதேச மண்ணின் நிலையில்லாத் தன்மையை சரிக்கட்டும் விதத்தில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

திட்டத்தின் தேவை என்ன?
இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் உட்கட்டமைப்பு வசதிகளில் கவனம் செலுத்துவது இன்றியமையாததாகிறது. உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்குவதில் தடையற்ற போக்குவரத்து முக்கியப் பங்கு வகிக்கிறது. அதன் பொருட்டே புல்லட் ரயில், விமான நிலைய விரிவாக்கத் திட்டங்கள் முழுமூச்சில் நடைபெற்று வருகின்றன. துறையில் குறிப்பாக வட கிழக்கு மாநிலங்களில் போக்குவரத்து வசதிகள் இன்னும் பின்தங்கிய நிலையிலே உள்ளன. அதனால் இம்மாதிரியான திட்டங்கள் அம்மாநில எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றும் என்பதில் சந்தேகமில்லை.