இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் சந்தேகத்திற்கு இடமில்லாமல் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் இயக்கத்திற்கும் முதுகெலும்பாக உற்பத்தித் துறைக்கு அடுத்தபடியாக இருப்பது உள்கட்டுமானம் தான். பெருகிவரும் மக்கள்தொகைக்கு இணையாகப் போக்குவரத்து நெரிசலுக்குப் பஞ்சமே இருப்பதில்லை. அந்த பஞ்சமற்ற நிலையை பஞ்சராக்கவே வருகிறது “மிதக்கும் பாலம் (Submerged Floating Tunnel)”. சாதாரண பாலம்தான். ஆனால் கட்டும் இடம்தான் அதற்கான சிரமத்தையும் சிறப்பையும் தர உள்ளது. மிதக்கும் பாலமா? காற்றில் தான் நம்ம ஊர் பாலமே மிதக்குமே? பாலங்கள் காற்றில் மிதப்பது இயல்புதான் ஆனால் கடல் மேல் அல்லது பெரும் நீர்ப்பரப்பில் மிதக்கும் பாலம் எங்காவது உண்டா? வந்துவிடும் 2035 ல் நார்வே நாட்டில்.

ஆர்க்கிமிடீஸ் பாலம்
வளர்ந்த நாடுகளான சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கே அங்குள்ள சாலைப்போக்குவரத்து போதுமானதாய் இல்லை. எனவேதான் கடந்த ஆண்டு இத்தகைய பாலங்களைப் பற்றிய பொறியியல் தொழிற்கூடம் ஒன்று சீனாவில் கூடியது. அதில் சீனாவுடன் ஜப்பான், இத்தாலி மற்றும் நார்வே நாடுகளைச் சேர்ந்த பொறியாளர்கள் மற்றும் கட்டிடக்கலை வல்லுனர்கள் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
உண்மையில் கடலாழத்தில் மூழ்கிய/தொங்கும் பாலம் என்பது எங்கேயும் இல்லை 2016 வரை. ஆயினும் ஆராய்ச்சிகள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. ஏனெனில் நிலத்தை விட நீருக்குள்தான் அழுத்தம் அதிகமாக இருக்கும். தரையில் சாதாரணமாக 1 வளிமண்டல அழுத்தம் எனில் கடலுக்குள் சராசரியாக ஒவ்வொரு பத்து மீட்டர் ஆழத்திற்கும் ஒரு வளிமண்டல அழுத்தம் அதிகரிக்கும். விதிவிலக்காக குறைந்தபட்ச தொலைவிற்கும் குறைந்த ஆழத்தில் கட்டப்படும் பாலங்களுக்கு பெரிய இயற்பியல் தொல்லை இல்லை. அதிக ஆழத்தில் பிரம்மாண்ட அழுத்தத்தைத் தாங்கக் கூடிய கான்கிரீட் கலவைகளோ, அதனைத் தயாரிக்கும் தொழில்நுட்பமோ இன்றுவரை ஏட்டளவிலே இருக்கின்றன. ஆனாலும் நார்வே இதனைச் சவாலாக ஏற்றுக்கொண்டுள்ளது.
ஆயிரத்திற்கும் அதிகமான துறைமுகங்களைக் கொண்ட ஸ்காண்டிநேவியன் நாடுதான் நார்வே. (வடக்கு ஐரோப்பிய யூனியனில் உள்ள டென்மார்க், ஸ்வீடன் மற்றும் நார்வே ஆகியவைதான் ஸ்காண்டிநேவியன் நாடுகள்). காரணம் அங்குள்ள “கிரிஸ்டியன்சான்ட் மற்றும் ட்ரோன்தோய்ம் (Kristiansand and Trondheim)” இடையிலுள்ள 1000 கிலோமீட்டரை கடப்பதற்கு 21 மணிநேரத்திற்கும் அதிக நேரம் பிடிக்கும். இடையிடையே படகுகளும் குறுக்குமறுக்குமாக போய்க்கொண்டிருக்கும். போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் நேரவிரயத்தையும் சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் களையவே இந்த பொறியியல் சோதனை.

இயற்பியல் தடைகள்
நீர்ப்பரப்பைப் பொறுத்தமட்டில் இரண்டே பாலங்கள் தான் சாத்தியமாகும். ஒன்று இரு தொலைவுகளுக்கும் இடையே இரும்புக் கயிறு/அல்லது ஆங்காங்கே மிதப்புகள் அமைத்து அதில் கட்டப்படும் தொங்குபாலம். மற்றொன்று கடலில் தூண்கள் அமைத்து கட்டப்படும் பாலம். 1000 கிலோமீட்டர் தொலைவுக்கு இரும்புக் கயிற்றின்மீது தொங்குபாலம் அமைப்பது சாத்தியமில்லை. ஏனெனில் பாலத்தின் எடையால் இரும்புக் கயிற்றில் ஏற்படும் தொய்வு கவனிக்கத்தக்கது. ஆழமதிகமெனில் அவ்வளவு ஆழத்திற்கு அடியில் அஸ்திவாரம் அமைத்து அதில் தூண்கள் எழுப்புவது சாத்தியக் குறைவு. முன்பே குறிப்பிட்டது போல், ஆழத்தில் தூண்கள் எழுப்பினால் அவை அவற்றின் மீது ஏற்படும் அழுத்தத்தை அவை தாங்கும்படி கட்டமைக்கப்பட்ட வேண்டும். தூணில் ஏற்படும் சிறு துளைகூட ஆழியின் அழுத்தத்தால் முழுத் தூணையும் சேதப்படுத்திவிடும் எனில் விளைவை நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள். மேலும் கடலில் ஏற்படும் வெப்ப நீரோட்டம் மற்றும் குளிர் நீரோட்டம், திடிரென எழும்பும் உயர் அலைகள் மத்தியில் கப்பல் மற்றும் ராணுவத்தின் நீர்மூழ்கிக் கப்பல்களின் போக்குவரத்தையும் நார்வே பொறியாளர்கள் கையாளவேண்டும். இயற்கையும், இயற்பியலும் சாத்தியமெனில் $40 மில்லியன் டாலர் செலவில் கடலுக்கடியில், அதிகபட்சமாக 392 மீட்டர் ஆழத்தில் கட்டப்படும் முதல் பாலம் நார்வேயுடையதுதான்.
E39 எனப்படும் அதிவேக நெடுஞ்சாலைக்கருகில் வரவுள்ள இந்தத் திட்டத்தின்படி கடலுக்கு அடியில் மேற்கூறிய இரண்டு வகையான பாலங்களும் இணைந்தே வரவுள்ளன. 20 மீட்டர் ஆழத்தில் வரவுள்ள இப்பாலம் சில கடற்பாறைகளையும் குடைந்து கொண்டு 80 முதல் 100 சென்டிமீட்டர் தடிமனுள்ள கடினமான கான்கிரீட் தோலைக் கொண்டிருக்கும். இந்தத் தோல்கள் பாலத்தின் உட்பகுதியில் எதிர்பாராத விதமாக வாகனங்களால் ஏற்படும் வெடிப்புகளைக் கூட தாங்கும் சக்தி உடையவை.
முன்னோடிகள்
13000 தீவுகளை உடைய இந்தோனேசியா 2004 ஆம் ஆண்டில் மேற்கண்ட பாலம் ஒன்றை சுமத்ரா தீவுக்கும் ஜாவா தீவிற்கும் இடையே கற்பனை செய்தது. அது ரிங் ஆஃப் ஃபயர் எனும் நிலத்தட்டுகள் மோதும் இடமாகையால் கற்பனை கைவிடப்பட்டது.
அமெரிக்காவின் சியாட்டிலில் உள்ள SR 520 (state route) தான் மிகச்சிறிய தொங்கு பாலமாகும். 7700 அடி நீளமுள்ள இப்பாலம் 77 மெகா காற்றடைக்கப்பட்ட கான்கிரீட் கலந்த பெட்டிகளின் உதவியால் தொங்கி வருகிறது. கான்கிரீட் பெட்டியானது பயான்சி (Buoyancy force ) என்ற மிதவை விதியால் மிதக்கிறது (கப்பல் மிதக்கும் தத்துவம்). ஒவ்வொரு மிதவையும் தண்ணீர் கசிவை துல்லியமாக கண்டறியும் நவீன சென்சார்களால் வார்க்கப்பட்டது. ஒரு சென்சாரிலிருந்து கூட சமிக்ஞை நின்றுபோனால், உடனே களத்திற்கு பொறியாளர்கள் வந்துவிடுவார்கள்.

குறிப்பிடும்படியாக சீனாவின் மெக்காவு – ஹாங்காங் இடையேயுள்ள பாலம்தான் உலகிலேயே மிக நீளமான கடல்வழி சாலையாகும். 55 கிலோமீட்டர் நீளமுள்ள இப்பாலம் ஆங்காங்கெ தூண்களுக்காக செயற்கை தீவுகளைக் கொண்டது. இத்தனை இயற்பியல் தடைகளையும் மீறி, நார்வே இதனை சாதிக்குமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.