அழகாக வடிவமைக்கப்படும் கட்டுமானங்களுக்கு ஆபத்தாக மாறுபவை விரிசல்கள். தொடக்கத்தில் சுவர்களில் சிறிய கோடாகத் தென்படும் விரிசல்கள் நாளடைவில் விரிவடையும் போது ஒட்டு மொத்த கட்டுமானமே பாதிப்புக்குள்ளாக நேரிடும்.
கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றுள் முக்கியமான சில காரணிகள் குறித்துப் பார்ப்போம்.
1. கட்டுமானப் பொருட்களை சரியான விகிதத்தில் பயன்படுத்தாமல் போவதே விரிசலுக்கு முதன்மை காரணியாக அமைகிறது. அதிலும் குறிப்பாக சிமெண்ட், மணல் கலவை சரியான விகிதத்தில் கலந்திருக்க வேண்டும். கட்டுமானப் பணிக்கு ஏற்ப அதன் அளவுகளிலும் மாற்றங்கள் இருக்க வேண்டியது அவசியம். அதாவது சுவர் கட்டுமானம், பூச்சு வேலை என பணிகளின் தன்மைக்கேற்ப கலவை முறை அமைய வேண்டும்.
2. மேலும், கலவையை சரிவரக் கலக்க வேண்டும். முதலில் மணலையும், சிமெண்டையும் ஒன்றாக கலக்கும் போது அவை ஒன்றோடொன்று சரிவர சேர்ந்திருக்க வேண்டும். ஒரு இடத்தில் சிமெண்ட் அதிகமாகவும், மணல் குறைவாகவும் கலக்கப்பட்டிருந்தால் அதுவும் விரிசலுக்கு காரணியாக அமைந்துவிடும். சிமெண்ட், மணல் கலவையுடன் தண்ணீரும் சரியான அளவு சேர்க்கப்பட வேண்டும். அதனை கலவையாக மாற்றும் போது சிமெண்ட், மணல், தண்ணீர் மூன்றும் ஒன்றோடு ஒன்று நன்கு கலக்கப்பட வேண்டும். கலவையின் ஒரு பகுதியில் சிமெண்ட் அதிகமாக இருந்தால் அதுவும் விரிசலுக்கு வித்திடும்.

3. சிமெண்ட் பல கிரேடுகளை கொண்டதாக இருக்கிறது. ஒட்டுமொத்த கட்டுமானத்திற்கும் ஒரே கிரேடு சிமெண்டை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சிலர் சுவர் கட்டுமானத்திற்கும், பூச்சு வேலைக்கும் ஒரே கிரேடு சிமெண்டுகளையே பயன்படுத்துவார்கள். அது பூச்சு வேலைக்கு தகுந்த சிமெண்ட் தானா என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் விரிசல் தவிர்க்க முடியாத பிரச்சினையாகி விடும்.
4. கட்டுமான பணியின் போது எழுப்பப்பட்டிருக்கும் சுவர்களுக்கு தண்ணீர் ஊற்றி வருவது அவசியமான ஒன்று. ஒவ்வொரு நாளும் காலை, மாலை இருவேளையும் சுவர்களுக்கு தண்ணீர் தெளித்து வர வேண்டும். அப்போது தான் சிமெண்ட் கலவை சுவருடன் சேர்ந்து நன்றாக இறுகும் தன்மை பெறும். அதே வேளையில் சுவர்களுக்கு அளவுக்கு அதிமாகவோ, குறைவாகவோ தண்ணீர் ஊற்றிவிடக்கூடாது. சுவரின் தன்மைக்கேற்ப தண்ணீர் விட வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு வாரங்களுக்காகவாவது சீராக தண்ணீர் விட்டு வர வேண்டும்.
5. சிமெண்ட் கலவைக்குப் பயன்படுத்தும் தண்ணீரும், சுவர் மீது ஊற்றும் தண்ணீரும் உப்புத்தன்மை இல்லாதவாறு இருக்க வேண்டும். தரமான தண்ணீரை பயன்படுத்த வேண்டும். அப்போது தான் விரிசல் பிரச்சினை எட்டிப் பார்க்காது. சிலர் கட்டுமான பணிகளுக்கு உப்பு தன்மை இல்லாத தண்ணீரை பயன்படுத்துவார்கள். ஆனால், சுவர் மீது தரமற்ற உப்புத்தன்மை கொண்ட நீரை தெளித்துவிடுவார்கள். அதன் காரணமாகவும் விரிசல் விஸ்வரூபம் எடுக்கக்கூடும்.
6. பூச்சு வேலைகளின் போதும் தண்ணீரின் அளவை கவனிக்க வேண்டும். சரியான விகிதத்தில் தண்ணீர் கலந்து சிமெண்ட் கலவையை உருவாக்க வேண்டும். அதை விடுத்து நீரை உறிஞ்சும் தன்மையில் பூச்சு வேலைப்பாடு அமைந்துவிடக்கூடாது. அது சுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

7. கான்கிரீட் கம்பிகள் நீர் கசிவு பிரச்சினையை எதிர்கொள்ளாதபடி பராமரிக்கப்பட வேண்டும். அதற்கு வீட்டின் மாடி தளம் நீர் தேங்காதபடி அமைக்கப்பட வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் மாடியின் தரைத்தளத்தின் வழியே நீர் ஊடுருவி கான்கிரீட் கம்பிகளை துருபிடிக்க செய்துவிடும். அதன் காரணமாக மேல் கூரையில் விரிசல் ஏற்படக்கூடும்.
8. சிலர் வீட்டை விரிவுபடுத்தத் திட்டமிட்டு பழைய சுவர்களின் மேல் கட்டுமானத்தை எழுப்புவார்கள். அப்படி புதிய கட்டுமானத்திற்காக சுவரை இணைக்கும்போது முறையாக பணிகளை மேற்கொள்ள வேண்டும். இணைப்பு சுவர் வாயிலாக விரிசல் எட்டிப்பார்ப்பதற்கு இடம் கொடுத்து விடக் கூடாது.
9. சுவர்களை பருவ காலத்திற்கு ஏற்பப் பராமரிக்க வேண்டும். அதிலும் குளிர் காலத்தில் நீர் கசிவு பிரச்சினை சுவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அதற்கு காற்றில் கலக்கும் ஈரப்பதமும் காரணமாக இருக்கும். அதற்கேற்ப பராமரிப்பு அமைய வேண்டும். முக்கியமாக வீட்டின் வெளிப்புற சுவர்களுக்கு தீட்டப்படும் வண்ணங்கள் நீர் கசிவை தடுக்கும் வகையில் அமையவேண்டும். அதற்கேற்ற பெயிண்டிங் வகைகளை தேர்ந்தெடுத்து பூசுவது பலன் தரும்.