வீட்டுக்குள் பூச்சித் தொந்தரவா? – இதோ ‘டிப்ஸ்’

0
100
pest-control-home-tips

குறைந்த விலையில் கிடைத்தது என்பதற்காகப் பதிமூன்று வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட பழைய வீடு ஒன்றை வாங்கினார் ஒருவர். நகரின் முக்கியப் பகுதியில் ஒரு தனி வீட்டை குறைந்த விலையில் வாங்கியதற்காகப் பார்த்தவர்கள் எல்லாம் அவரைப் பாராட்டினார்கள் .

ஆனால், சில மாதங்களுக்குப் பிறகுதான் ஓர் அதிர்ச்சி அவருக்குக் காத்திருந்தது. வீட்டில் கரையான்களின் ஆதிக்கம் எக்கச்சக்கம். மரச்சாமான்கள் எல்லாம் பாதிக்கப்பட்டன. எல்லாவற்றையும் சரி செய்யப் பல ஆயிரங்கள் தேவைப்பட்டன.

வீடுகளை வாங்கும் பலரும் ஏனோ பூச்சிகள் வீட்டுக்குச் செய்யக் கூடிய பாதிப்பைக் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. அடுக்ககங்களை(Apartments) கட்டுவதற்கு முன் கரையான்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். பூச்சித்தொல்லையில் இருந்து விடுபட உங்களுக்கு சில ‘டிப்ஸ்’.

கரையான்களை ஒழிக்க:

மிகப்பெரிய தொல்லை கரையான்களிடம் இருந்து தான் வருகிறது. ஏனெனில், நிலத்தின் அடியில் நீண்ட காலமாக இருந்து ஒரு மழை நாள் அன்று நம் கண்ணுக்குத் தென்படும்.

  1. நீங்கள் வீடு கட்டுகிறீர்கள் என்றால் அந்த நிலத்திலுள்ள மரம், செடிகளை முற்றிலும் அகற்றிவிடுதல் நல்லது. (மனச்சாட்சி குரல் கொடுத்தால் வேறு ஏதாவது இடத்தில் மரம் நடுங்கள்). சிலர் மரங்களின் மேற்பகுதிகளை மட்டுமே வெட்டி விடுகிறார்கள். இது போதுமானதல்ல. பூமியிலுள்ள மரத்தின் வேர்ப் பகுதி உலரும் போது கரையான்களின் ஆதிக்கம் தொடங்கிவிடும்.
  2. அஸ்திவார முளைக் குச்சிகளைச் சிலர் அப்படியே விட்டு விடுகிறார்கள். வேறு சிலர் அவற்றை மண்ணுக்குள் தள்ளிவிடுகிறார்கள். அவ்வாறு செய்யக்கூடாது. கரையான்கள் குடியேற வாய்ப்பு உண்டு.
  3. வீட்டைச் சுற்றியுள்ள தோட்டங்களில் செம்மண் பயன்படுத்தினால் கரையான்கள் அதிக அளவில் இடம் பெற வாய்ப்பு உண்டு.
  4. கட்டுமானத்தின்போதே உரிய வேதிப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். அஸ்திவாரச் சுவர்களில் குறிப்பிட்ட வேதிப் பொருள்களை நன்கு தெளிக்க வேண்டும்.
  5. பக்கத்திலுள்ள நிலங்களிலிருந்துகூடக் கரையான்கள் குடி புகலாம் என்பதால் கட்டிடத்தின் வெளிப்பகுதியில் கூட உரிய வேதிப் பொருள்களைப் பயன்படுத்த வேண்டும்.

கரையான்களை ஒழிக்க ரசாயன மருந்துகளையும் பயன்படுத்தலாம்.

பிற பூச்சிகளை அழிக்க:

வீடுகளில் எலித் தொல்லை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் தங்கள் பற்களைக் குறைத்துக்கொள்வதற்காக அவை மரச் சாமான்கள், துணிமணிகள் என்று எதையும் கடித்துக் குதறும் அபாயம் உண்டு. கரப்பான் பூச்சிகள் காரணமாகப் பரவும் நோய்கள் நிறைய.

வேறு பல பூச்சிகளும் நமக்குத் தொல்லை அளிக்கலாம். பாக்டீரியா உங்கள் உணவுப் பொருட்களிலிருந்து நோய்களை உருவாக்கலாம். அதுவும் வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்க்கும்போது அவற்றின் மூலம் பாக்டீரியா நம்மிடம் பரவுவது எளிதாகிறது.

இவை அனைத்தையும் விரைவாக ஒழிக்க ஒரே சிறந்த வழி இது தான்!

பூச்சி ஒழிப்பு (Pest Control) நிறுவனங்கள் பல உள்ளன. என்றாலும் தொழில் முறையில் பயிற்சி பெற்ற நிறுவனத்திடம் இந்தப் பணியை ஒப்படைப்பது நல்லது. குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை இவர்கள் வந்து உரிய பூச்சி மருந்துகளைத் தெளித்துவிட்டுச் செல்வார்கள். இவ்வளவு காலத்துக்குப் பூச்சிகள் புகாது என்று உத்தரவாதம் கொடுக்கும் நிறுவனங்களும் உண்டு. (முன்பெல்லாம் பல வருடங்களுக்கான உத்தரவாதம் கிடைத்து வந்தது. காரணம் அப்போது மிகவும் சக்தி வாய்ந்த பூச்சி மருந்துகள் பயன்படுத்தப்பட்டன. அவற்றிலுள்ள அதிக நச்சுத்தன்மை மனிதர்களுக்கும் கேடு விளைவிக்கலாம் என்பதால் பல வேதிப் பொருள்கள் இதுபோன்ற பயன்பாட்டில் தடைசெய்யப்பட்டு விட்டன. எனவே, உத்தரவாதத்துக்கான காலமும் குறைந்துவிட்டது). குறிப்பிட்ட நிறுவனத்தின் சேவையை யாராவது பயன்படுத்தி இருக்கிறார்களா என்று தெரிந்துகொண்டு அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பூச்சிகளை ஒழிக்க நாமே செய்யக்கூடியவை

நாமாகச் செய்யக் கூடிய செயல்களும் உண்டு. ஜன்னல்களில் வலைத்திரைகளைப் (Mesh Screens) பொருத்துவது, வீட்டுக்குள் பூச்சிகள் நுழைய வசதி செய்து தரும் துவாரங்களை அடைப்பது, தண்ணீர் மற்றும் கழிவு நீர்ப் பகுதிகளை மூடி வைப்பது போன்ற பல விதங்களில் பூச்சி மற்றும் தொல்லை கொடுக்கும் உயிரிகளிடமிருந்து வீட்டைப் பாதுகாக்க முடியும்.

கரப்பான் பூச்சியை ஒழிக்க பல்வேறு வகையான மருந்துகள் உள்ளன. 6 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் இருக்கும் வீட்டில் கரப்பான் பூச்சிக்கொல்லியை பயன்படுத்துவதை தவிர்த்து, பூச்சி கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் பொறுப்பை விட்டுவிடுவது தான் சிறந்தது. பூச்சி ஒழிப்பு நடவடிக்கையை நீங்களே மேற்கொள்ளும் போது குழந்தைகளை வெளியே அனுப்பிவிடுவது சாலச்சிறந்தது.

எறும்பு தொல்லையில் இருந்து விடுபட இதை பயன்படுத்தலாம்.

சில ஹோட்டல்களில் ஈக்களைக் கொல்லும், நீல வண்ண ஒளிகொண்ட கருவிகளைப் பார்த்திருப்பீர்கள். அவற்றை முடிந்தால் வீடுகளில் பொருத்திக் கொள்ளலாம். உணவுப் பொருள்களை எப்போதும் மூடி வைத்திருக்க வேண்டும். வீட்டுக்குள்ளும் வெளியிலும் தண்ணீரைத் தேங்கவிட வேண்டாம். முடிந்தவரை வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

மழைகாலம் என்பதால் கொசுக்கள் வீட்டின் உள்ளே வரக்கூடும். கொசுக்களை எக்காலத்தும் ஒழிக்க முடியாது என்பதால், ரசாயனத்தை சிறிதளவே நம்பலாம். கொசுவுக்கு எதிராக தற்காப்பு முறையை கையாளலாம். கொசு வலை ஒன்றை விலை ஏறுவதற்கு முன்பு இப்போதே வாங்கி விடுங்கள். இல்லையேல் கொசு விரட்டும் மட்டை வாங்கிக்கொள்ளலாம்.

மறைவிடங்கள் அதிகம் இருந்தால் பூச்சிகளுக்குக் கொண்டாட்டமாகிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

பொறுப்புத் துறப்பு:மேற்கண்ட கட்டுரையில் குறிப்பிடப்பட்ட பொருட்களை நாங்கள் தயாரிக்கவில்லை. பொருட்களின் உண்மைத்தன்மைக்கும், நம்பகத்தன்மைக்கும், தரத்திற்கும்  எழுத்தாணி நிர்வாகம் பொறுப்பல்ல. வாசகர்களே பொருட்களைப்பற்றி படித்து அறிந்துகொண்டு முடிவை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.