குஜராத் மாநிலத்தில் நர்மதா நதிக்கரையில் இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலின் சிலை திறப்பு விழா இன்று நடந்தது. இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி சிலையினை திறந்து வைத்தார். சீனாவில் இருக்கும் 419 அடி உயரமுள்ள புத்தர் சிலையே உலகின் மிகப்பெரிய சிலையாக இருந்துவந்தது. இந்நிலையில் தற்போது கட்டப்பட்டிருக்கும் படேலின் சிலையானது 787 அடி உயரம் கொண்டது. எனவே இனி உலகத்தின் உயரமான சிலை சர்தார் படேலின் சிலைதான்.

இரும்பு மனிதர்
300 வருட வெள்ளையர்களின் ஆட்சிக்குப் பிறகு இந்தியா சுதந்திரமடைந்திருந்த நேரம். ஒரு புறம் இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையினால் எல்லைகள் பற்றி எரிந்து கொண்டிருந்தன. அப்போதைய கிழக்கு பாகிஸ்தானில் (வங்க தேசம்) போராட்டம் உச்ச கட்டத்தை எட்டியிருந்தது. நாடு முழுவதும் மத மோதல்கள் கட்டவிழ்க்கப்பட்டிருந்தது. மற்றொரு புறம் தனித்தனி மாகாணங்களாக இருந்த காஷ்மீர், ஹைதராபாத், ஜூனாகாத் ஆகிய இடங்கள் இந்தியாவுடன் சேர மறுத்துவந்தன. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தான் நேரு தலைமையிலான அரசு அமைந்திருந்தது. பிரச்சனையை முடிக்கத் துணிந்தார் உள்துறை அமைச்சராக இருந்த படேல். இந்திய அரசின் சார்பில் மாகாணங்களுக்கு அழைப்புக்கள் விடப்பட்டது. படேல் இறங்கி அடிக்கக்கூடியவர். பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் இந்திய ராணுவம் களம் இறக்கப்படும் என கர்ஜித்தார். பின்னர் ஒரு வழியாக மூன்று மாகாணங்களும் இந்தியாவுடன் இணைவதற்கு ஒப்புக்கொண்டன. இத்தகைய நடவடிக்கைகளால் தான் படேல் இரும்பு மனிதர் என்று புகழப் பட்டார்.
பிரம்மாண்டம்
2013 – ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தச் சிலையைக் கட்டி முடிக்க 18,500 டன் இரும்பு, 1,700 டன் பித்தளை மற்றும் 70,000 சிமெண்ட் மூட்டைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. சிலைக்கு மேலே செல்வதற்கு இரண்டு லிப்ஃடுகள் உள்ளன. அதில் ஒரே சமயத்தில் 40 பேர் வரைப் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சிலையின் மார்புப்பகுதியில் (501 அடி உயரத்தில்) பார்வையாளர் நிற்பதற்கான தளம் கட்டப்பட்டுள்ளது. அதில் 200 பேர் நின்று நர்மதா நதியையும் அதன் சுற்றுப்புறத்தையும் கண்டுகளிக்கலாம். இவைபோக சிலை இருக்கும் பகுதியில் நட்சத்திர விடுதிகள், பூங்காக்கள் ஆகியவையும் இருப்பது பல சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் விதத்தில் கட்டப்பட்டுள்ளன.

வலுக்கும் எதிர்ப்பு
சிலை நிறுவப்பட்டுள்ள நர்மதா நதிக்கு அருகில் வசிக்கும் பழங்குடியின மக்கள் இந்த திட்டத்திற்கு ஆரம்பம் முதலே எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அப்பகுதியில் வாழும் விவசாயிகளுக்குப் போதுமான நீர்ப்பாசன வசதிகள் இல்லாமல் அவதியுறும் இவ்வேளையில் 3000 கோடியில் சிலை யாருடைய தேவைகளைத் தீர்க்கப்போகிறது ? என கேள்வியெழுப்புகின்றனர். விவசாயத்திற்குத் தேவையான உட்கட்டமைப்பு விஷயங்களில் அரசு கவனம் செலுத்தவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்தே இதனை பாஜக செய்துவருவதாக பல அரசியல் கட்சிகள் தெரிவித்து வருகின்றன.