கி.பி. 1500 களின் துவக்கம். தென்னமெரிக்க நாடுகளான பெரு, மெக்ஸிகோ, பாரகுவே ஆகியவற்றில் தனது ஆதிக்கத்தை செலுத்தி தனக்கான காலனியை உருவாக்கிக்கொண்டிருந்தது ஸ்பெயின். அப்போதைய ஸ்பெயினின் அரசராக இருந்தவர் ஐந்தாம் சார்லஸ். தென்னமெரிக்க நாடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்தை எடுத்துச் செல்வதில் பிரச்சினை வந்தது. ஸ்பெயினிலிருந்து பெருவிற்கு கப்பலில் பயணிக்க வேண்டுமென்றால் அவ்வளவு பெரிய தென்னமெரிக்கக் கண்டத்தை சுற்றிக்கொண்டு செல்ல வேண்டும். இப்படிச் சொன்னால் புரிவது கஷ்டம். எதற்கும் கீழே உள்ள படத்தைப் பார்த்துவிடுங்கள். இதில் ஆரஞ்சு நிறத்தில் இருப்பது ஸ்பெயின். பச்சை நிறம் பெரு.

இந்த சிக்கலைத் தீர்த்துவைக்க உயர்மட்ட மந்திரிகள் கூட்டம் ஒன்று நடந்து கடைசியாக பனாமா நாட்டில் கால்வாய் கட்டலாம் என்று மன்னர் ஐந்தாம் சார்லசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. நீ மந்திரியா? மங்குனியா? என்று திட்டி திட்டத்தை தூக்கி எறிந்தார் மாமன்னர். அதன்பிறகு கால்வாய் திட்டத்தை உலகமே மறந்துபோனது.
நான் இருக்கிறேன்
ஸ்பெயின் பின்வாங்கினாலும் சுமார் 300 ஆண்டுகளுக்குப் பின்னால் பிரான்ஸ் பனாமா கால்வாயை கட்ட முன்வந்தது. இந்தப் பிரம்மாண்ட திட்டத்துக்காக 250 மில்லியன் அமெரிக்க டாலர் ஒதுக்கப்பட்டது. 20 ஆண்டுகள் கடின உழைப்பைக் கொட்டியது பிரான்ஸ். கிட்டத்தட்ட 70 கோடி டன் மண்வெட்டி அகற்றப்பட்டது. ஆனால் திடீரென முயற்சியை கைவிடுவதாக அறிவித்தது பிரான்ஸ். நீங்க போனா போங்க நான் பாத்துக்குறேன் என களத்தில் இறங்கியது அமெரிக்கா.

ஆரம்பத்தில் நிரகுவா நாட்டில் கால்வாய் கட்டுவதாகத்தான் திட்டம் தீட்டியது அமெரிக்கா. ஆனால் பிரான்ஸ் விட்ட இடத்தில் இருந்து தொடர அமெரிக்கா பின்னர் முடிவெடுத்தது. கால்வாயைக் கட்டிமுடிக்க அமெரிக்கா 10 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. இந்தப்பணியில் 50,000 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இந்தக் கால்வாய் கட்டும் பணியின் பொது இறந்தவர்களின் எண்ணிக்கை 25,000. விபத்துகள் தவிர மலேரியா, மஞ்சள் காமாலை, காய்ச்சல் போன்ற நோய்களும் தொழிலாளர்களின் உயிரைக் குடித்தன. கால்வாய் கட்டுவதற்கு அமெரிக்கா செலவழித்த தொகை 400 மில்லியன் டாலர்கள்.
ஆண்டுக்கு 15,000 கோடி ரூபாய் வருமானம்
இப்போது, அட்லாண்டிக் கடலில் இருந்து பசிபிக் கடலை 8 முதல் 10 மணி நேரத்தில் அடைந்துவிட முடியும். தினமும் 50 கப்பல்கள் இந்தக் கால்வாயைக் கடக்கின்றன. கப்பல்களின் சரக்குக் கொள்ளளவைக்கொண்டு டோல்கேட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆண்டுக்கு 15,000 கோடி ரூபாய் பனாமா நாட்டுக்குக் கிடைக்கிறது.

பனாமா சிட்டி அருகே, `பிரிட்ஜ் ஆஃப் அமெரிக்கா’ என்ற இடத்தில் பசிபிக் கடலில் பனாமா கால்வாய் தொடங்குகிறது. கொலம்பியா நாட்டுக்குள் புகுந்து `கோலன்’ என்ற இடத்தில் அட்லாண்டிக் கடலில், மறுமுனையில் இணைகிறது. சுமார் 82 கிலோமீட்டர் தொலைவுக்கு 31 மீட்டர் அகலம் கொண்ட இந்தக் கால்வாயில், இப்போது ஆண்டுக்கு 15,000 கப்பல்கள் கடந்துசெல்கின்றன. 160 நாடுகளைச் சேர்ந்த 1,700 துறைமுக நகரங்களுக்குப் பனாமா கால்வாயுடன் தொடர்பு உண்டு. ஒரு பக்கத்தில் கப்பல் செல்லவும் மறுபக்கத்தில் கப்பல்கள் வரும்படியும் இந்தக் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. பனாமா கால்வாயில் கப்பலை இயக்க கேப்டன்களுக்கு தனித்திறமை வேண்டும்.
ஏற்கனவே அமெரிக்கா நிரகுவாவில் கால்வாய் கட்ட நினைத்தது என்று பார்த்தோம் அல்லவா? பந்தப் பழைய திட்டத்தை சீனா தற்போது தூசு தட்டியுள்ளது. இதனால் சரித்திரப்புகழ் பெற்ற பனாமா கால்வாய்க்குப் போட்டியாக கூடிய விரைவில் புதிய கால்வாய் ஒன்று கட்டப்பட இருக்கிறது.