கி.பி. 1636 ஆம் ஆண்டில் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கரால் இந்த அரண்மனை கட்டப்பட்டது. இத்தாலியக் கட்டிடக் கலைஞர் ஒருவரால் இந்தோ சரசனிக் பாணியில் கட்டிடத்தின் கலைநயத்தில் வடிவமைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இக்கட்டிடத்தில் நான்கில் ஒரு பகுதியே, தற்போது எஞ்சியுள்ளது. பின்னர் கி.பி.1872 பிரித்தானிய இந்தியாவின் சென்னை ஆளுநர், பிரான்சிஸ் நேப்பியர் என்பவரால் இவ்வரண்மனை புதுப்பிக்கப்பட்டது. திருமலை நாயக்கர் அரண்மனை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலிருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
இந்தோ சரசனிக் பாணி என அழைக்கப்படும் கட்டிடக் கலைப் பாணியில் வடிவமைக்கப்பட்ட இந்த அரண்மனையானது, 58 அடி உயரம் கொண்டது. 248 பிரம்மாண்டமான தூண்கள் தாங்கி நிற்கின்றன. மேற்கூரையில் விஷ்ணு மற்றும் சிவன் பற்றிய புராணக்காட்சிகள் ஓவியமாய் சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்த அரண்மனை, இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டதாகவும் அமைந்திருந்தது. ஒன்று சொர்க்க விலாசம் என்றும், மற்றொன்று அரங்க விலாசம் என்றும் அழைக்கப்பட்டன. ‘சொர்க்க விலாசம்’ திருமலை நாயக்கரின் வசிப்பிடமாகவும், ‘அரங்க விலாசம்’ அவரது தம்பி முத்தியாலு நாயக்கரின் வசிப்பிடமாகவும் இருந்தது.
திருமலை நாயக்க அரண்மனையில், இசை மண்டபம், நாடக சாலை, பல்லக்குச் சாலை, ஆயுத சாலை, வழிபாட்டிடம், வேறு அரச குடும்பத்தினர்க்கும், விருந்தாளிகளுக்கும், பணியாளர்களுக்குமான வசிப்பிடங்கள், அந்தப்புரம், பூங்காக்கள், தடாகங்கள் போன்ற பல்வேறு பகுதிகள் இருந்தன.
திருமலை நாயக்க அரண்மனை 1971 ஆம் ஆண்டு தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. 1981 ஆம் ஆண்டு சுற்றுலா வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, ஒலி-ஒளி காட்சி அமைக்கப்பட்டு, இன்றுவரை நடந்து கொண்டு இருக்கிறது. சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் நடைபெறும் இந்த ஒலி-ஒளி காட்சி, நாள்தோறும் மாலை 6.45 க்கு ஆங்கிலத்திலும், இரவு 8 மணிக்கு, தமிழிலும் நடைபெறுகிறது.
பிரம்மாண்ட தூண்கள்

அரண்மனையின் மேல் தோற்றம்

ஒலி-ஒளி காட்சி

திருமலை நாயக்கர் அரண்மனை நாட்டிய மண்டபம்

மண்டபத்தின் மாடம், அரச குடும்பப் பெண்கள் தங்குமிடம்

Also Read: [புகைப்பட தொகுப்பு]: பழங்கால தஞ்சை அரண்மனை வரலாறு..!
தமிழகத்தில் இருக்கும் கேரளாவின் கவிதை! எழில் மிகுந்த பத்மநாபபுரம் அரண்மனை!
பல தலைமுறைகளைக் கடந்து நிற்கும் கலைநயமிக்க செட்டிநாட்டு வீடுகள்