தஞ்சை அரண்மனை தமிழ்நாட்டின், தஞ்சாவூர் நகரில் உள்ள ஒர் அரண்மனை. இந்த அரண்மனை தஞ்சாவூர் நாயக்கர்களால் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. தஞ்சாவூர் நாயக்கர் மன்னர்களான சேவப்ப நாயக்கரால் கட்டத் தொடங்கி, அச்சுதப்ப நாயக்கர், இரகுநாத நாயக்கரால் தொடரப்பட்டு, கடைசியாக விஜயராகவ நாயக்கரால் கட்டி முடிக்கப்பட்டது இந்த தஞ்சை அரண்மனை.
கி.பி. 1674 இல் இருந்து 1855 வரை தஞ்சாவூர் மராத்திய அரசின் வசம் இருந்தது. தஞ்சாவூர் மராத்திய அரசு மாராட்டியர் காலத்தில் மராட்டிய கட்டடக்கலை நுட்பத்துடன் தஞ்சை அரண்மனையின் சில பகுதிகள் கட்டப்பட்டன. பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பிரிட்டிஷ், பிரான்ஸ், இராஜஸ்தான் கட்டடக் கலையின் தொழில் நுட்பங்களைக் கொண்டு தஞ்சை அரண்மனையின் வடிவமைப்பில் சேர்த்து கட்டப்பட்டன.
அரண்மனையின் வளாகம் நான்கு முதன்மையான கட்டிடங்களைக் கொண்டுள்ளது. மணிமண்டபம், தர்பார் மண்டபம், ஆயுத சேமிப்பு கிடங்கு மற்றும் நீதிமன்றம்.
400 ஆண்டு பழமையான அரண்மனை
400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாயினும், அரண்மனையின் 75% அழியாமல் இருக்கிறது. இந்த தஞ்சை அரண்மனை தமிழக அரசு தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ளது. அரண்மனை வளாகம் 110 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
அரண்மனை நுழைவாயில்

தர்பார் மண்டபம்

தஞ்சையைத் தலைமையிடமாக கொண்ட மன்னர்கள் அமர்ந்து ஆட்சி செலுத்திய மண்டபம் தான் தர்பார் மண்டபம். பல வண்ணங்களில் வரைந்த ஓவியங்கள் தர்பார் மண்டபத்தை மேலும் அலங்கரிக்கின்றன. இந்த மண்டபத்துக்கு முன் பெரிய மைதானம் உள்ளது.
மணிமண்டபம்

மணி மண்டபத்தில் மொத்தம் 11 மாடிகள் இருந்துள்ளன. இந்த 11 மாடிகளில், இப்போது 8 மாடிகள் மட்டுமே மிஞ்சியிருக்கிறது. ஒவ்வொரு மாடியிலும் நான்குப்புறச் சுவர்களிலும் மேல் வளைந்த சாளரங்கள் உள்ளன. அதனால் இதனைத் “தொள்ளக்காது” மண்டபம் எனப் பொதுமக்கள் அழைக்கின்றனர். இந்த மண்டபம் கண்காணிப்பு மண்டபமாகப் பயன்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இது கோபுர வடிவில் காணப்படுகிறது. கோபுரத்துக்குச் செல்லும் படிகட்டுகள் மிகவும் சிக்கலான வளைவு, நெளிவுகளைக் கொண்டவை.
இதனை ஜார்ஜவா மாளிகை, சதர் மாளிகை என்றும் அழைக்கின்றனர். சதர் என்ற பாரசீகச் சொல்லுக்கு நீதிமன்றம் என்ற பொருள் உள்ளது. இது 7 மாடிகள் கொண்டதாக இருந்ததாகக் கூறப்படுகிறது என்றாலும், தற்போது 5 மாடிகள் மட்டுமே உள்ளன
அரண்மனை வளாகம்

சரஸ்வதி மகால் நூலகம்

தஞ்சை அரண்மனை வளாகத்தினுள் சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சைக் கலைக்கூடம், தஞ்சை தீயணைப்பு நிலையம், தஞ்சை மேற்கு காவல் நிலையம், அரசுப் பொறியியல் கல்லூரி, அரசர் மேல்நிலைப் பள்ளி, தொல்லியல்துறை அலுவலகம் போன்றவை அமைந்துள்ளன.
Also Read: [புகைப்பட தொகுப்பு]: மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை..
தமிழகத்தில் இருக்கும் கேரளாவின் கவிதை! எழில் மிகுந்த பத்மநாபபுரம் அரண்மனை!
பல தலைமுறைகளைக் கடந்து நிற்கும் கலைநயமிக்க செட்டிநாட்டு வீடுகள்