சீனாவில் இருக்கிறது இந்த மறைக்கப்பட்ட நகரம் அல்லது மர்ம நகரம். ஆங்கிலத்தில் Forbidden City என்று அழைக்கப்படுகிறது. மிங் வம்சம் முதல் கிங் வம்சம் வரை (1420 – 1912) அரசர்களின் அரண்மனையாக இருந்தது இந்த இடம். கிழக்கு ஆசியாவின் தவிர்க்கமுடியாத கலை மையமாக இருக்கும் இந்த நகரம் 94 ஆண்டுகளுக்குப்பிறகு இரவில் திறக்கப்பட இருக்கிறது. இன்றும் நாளையும் இரவிலும் இந்த அரண்மனை நகரம் பார்வையாளர்களுக்காக திறக்கப்படும் என அந்த அரசு அறிவித்திருக்கிறது.

பிரம்மாண்டம்
கி.பி. 14௦6 கட்டத்துவங்கிய இந்த நகரம் 15 ஆண்டு பல்லாயிரக்கணக்கான மக்களின் வேர்வையில் 1420 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. 180 ஏக்கர் நிலப்பரப்பில் கால்பரப்பி நிற்கும் இந்த பிரம்மாண்ட அரண்மனையில் மொத்தம் 980 அறைகள் உள்ளன. இங்குள்ள பெரும்பான்மையான பகுதிகள் மரத்தால் கட்டப்பட்டவையாகும். சீனாவின் ஓவியக்கலை அவ்வளவு சிறப்புற்றிருந்தது என்பதை அறிய நீங்கள் இங்கு சென்றே ஆகவேண்டும். ஆசியாவின் அரசியல் மையமாக 500 ஆண்டுகளாக இருந்த பெருமை இந்த நகரத்திற்கே சேரும். மன்னரின் அனுமதியில்லாமல் எவரும் கோட்டையினுள் பிரவேசிக்க முடியாது. இதன்காரணமாகவே இப்படி பெயர் பெற்றிருக்கிறது.

94 ஆண்டுகளுக்குப்பிறகு
அரசாட்சியையும் பின்னாளில் எழுந்த ஒரு உள்நாட்டுப் போரின் சுவடுகளையும் சுமந்து நிற்கும் இந்த அரண்மனைக்குள் பல்வேறு காலத்திய கலைப் பொருட்களும், அரச குடும்பத்தின் விலைமதிப்பிலா ஆபரணங்களும் இங்கே வைக்கப்படிருக்கின்றன. சீனாவின் சுற்றுலாத்துறையின் காமதேனு இந்த நகரம். ஆண்டுக்கு சராசரியாக 150 மில்லியன் மக்கள் இதனைப் பார்க்க வருகின்றனர். மாலை 4 அல்லது 5 மணிவரை மட்டுமே பார்வையாளர்கள் இதனுள்ளே அனுமதிக்கப்படுவர். சுற்றுலாத்தலமாக மாறிய பின்னர் இருந்து இதே நடைமுறைதான். 94 ஆண்டுகளுக்குப்பிறகு தற்போதுதான் இரவில் இந்த அரண்மனை திறக்க்கப்பட இருக்கிறது.

திருவிழா
சீனாவில் ஆண்டுதோறும் லேண்டர்ன் திருவிழா பிப்ரவரி மாதம் கொண்டாடப்படும். அந்த நாளில் மொத்த சீனாவும் வண்ண விளக்குகள் ஏற்றியும், வானவேடிக்கைகள் மூலமாகவும் களைகட்டும். இன்றும் நாளையும் இந்த திருவிழா சீனாவில் கொண்டப்பட இருக்கிறது. இதன்காரணமாகவே இந்த விஷேச அறிவிப்பை அந்த அரசு வெளியிட்டிருக்கிறது. பட்டாசுகளால் நகரத்திற்கு ஆபத்து ஏற்படாத வண்ணம் வண்ண LED விளக்குகளை பயன்படுத்த இருக்கிறார்கள். இதற்கான நுழைவுக்கட்டணம் இலவசம் என்பதால் பலரும் இங்கு செல்ல முயன்று வருகின்றனர்.