“பிரான்ஸ்” இந்தப் பெயரை உச்சரித்தவுடன் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது உலக அதிசயத்தில் ஒன்றான ஈபில் டவர் தான். கட்டுமானத்துறையில் உலகத்திற்கு விடப்பட்ட சவால் இந்தக் கோபுரம். பிரான்சின் பொக்கிஷமாகப் பார்க்கப்படும் இந்தக்கோபுரத்தின் சில பகுதிகள் ஏலத்தில் விடப்பட இருக்கின்றன. உலக அதிசயமான ஈபில் டவரின் பகுதிகளைக் கைப்பற்ற பல “பெரும் தலைகள்” ஆர்வத்தோடு காத்திருக்கின்றன.
1889 ஆம் ஆண்டு ஈபில் டவர் முதன் முதலில் திறக்கப்பட்டபோது பயன்படுத்தப்பட்ட படிக்கட்டுகள் தான் இப்போது விற்பனைக்கு வர இருப்பவை.

4 மீட்டர் உயரமும் 25 படிக்கட்டுகளைக் கொண்ட இந்தப் பகுதி 1983 ஆம் ஆண்டுவரை பயன்பாட்டில் இருந்திருக்கிறது. ஈபில் டவர் உருவாக்கத்தின் போது இரண்டாம் நிலையிலிருந்து மூன்றாம் நிலைக்குச் செல்வதற்கு இந்தப் படிக்கட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அதன் பின்னர் லிஃப்ட் மூலம் பார்வையாளர்கள் கோபுரத்தின் உச்சிக்குப் பயணம் செய்யத் துவங்கவே இந்தப் படிக்கட்டுகள் கழட்டி எடுக்கப்பட்டிருக்கிறது.
உண்மையில் மிக நீளமான இந்தப் படிக்கட்டானது பல பாகங்களாகப் பிரித்தெடுக்கப்பட்டு முக்கிய இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. பிரான்சின் இரண்டு தேசிய அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு இவை வைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் ஜப்பானில் உள்ள யமனாஷி நகரத்தின் பூங்கா ஒன்றில் இதன் படிக்கட்டுகள் வைக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல் அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையின் அடியிலும் இதன் பகுதிகளைக் காணலாம்.

இதற்கு முன்…
ஈபில் டவரின் படிக்கட்டுகள் விற்பனைக்கு வருவது இது முதல் முறையல்ல. இதற்கு முன் கடந்த 2013 ஆம் ஆண்டு விடப்பட்ட இந்தப் படிக்கட்டின் 3.5 மீட்டர் நீளமுள்ள மற்றொரு பகுதி 2,49,000 அமெரிக்க டாலருக்கு வாங்கப்பட்டது. அதேபோல் 2016 ஆம் ஆண்டு மற்றொரு பகுதியை விற்பனைக்கு அறிமுகப்படுத்த 5,93,000 அமெரிக்க டாலருக்கு அப்பகுதி விற்றுப்போனது.
தற்போது ஏலத்திற்கு வர இருக்கும் பகுதியின் ஆரம்ப விலை 40,000 அமெரிக்க டாலர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.