இமயமலைப் பகுதியில் காணப்படும் முதல் ஜெகார்சினுசிடே (Gecarcinucidae) இனத்தை சேர்ந்த நன்னீர் வகை நண்டு இனத்திற்கு அபோர்டெல்புஷா நம்தபான்ஸிஸ் (Abortelphusa Namdaphaensis) என்று பெயரிடப்பட்டுள்ளது.
அருணாச்சல பிரதேசத்தின், அழகிய காட்டுப்பகுதியில் நம்தபா புலி காப்பகம் (Namdapha Tiger Reserve) ஒன்று அமைந்துள்ளது. இந்த நம்தபா புலி காப்பகமானது, அருணாச்சல பிரதேசத்தின் அழகிய காட்டுப்பகுதியில் அமைந்திருப்பது மட்டுமின்றி, கிழக்கு இமயமலை பகுதியின் பல்லுயிர் மையமாகவும் திகழ்கிறது.
கடந்த 1983 ஆம் ஆண்டில் அருணாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ள, இந்த அழகிய காட்டுப்பகுதிக்கு நம்தபா தேசிய பூங்கா (Namdapha National Park) என்று பெயரிடப்பட்டது.

முதுகெலும்பு இல்லாத, இந்த வகையான சிறிய நன்னீர் நண்டு இனங்கள் இமயமலைப் பகுதியில் அதிகமாக காணப்படுகின்றன. நம்தபா தேசிய பூங்காவில் அமைந்துள்ள நீரோடையின் விளிம்பில் இந்த சிறிய நன்னீர் நண்டு இனங்கள் முதன் முதலில், கண்டுபிடிக்கப்பட்டன. எனவே, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த வகை நன்னீர் நண்டு இனத்திற்கு அபோர்டெல்புஷா நம்தபான்ஸிஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இது குறித்து, கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இப்பகுதியை தொடர்ந்து ஆராய்ந்து வரும் இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தின் (ZSI) க்ரஸ்டேசியா பிரிவின் உதவி விலங்கியல் நிபுணர் சந்தனு மித்ரா (Santanu Mitra) கூறும்போது, இந்த பகுதியில் இன்னும் ஏராளமான ஆராய்ச்சி செய்ய வேண்டிய இடங்கள் உள்ளன. எனவே, இந்த இடங்களில் உள்ள சுவாரஸ்சியமான தகவல்களை வெளி உலகிற்கு எடுத்து சென்று அவற்றைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது, ஆராய்ச்சியாளர்களான எங்களின் முக்கிய கடமை என்றார்.

இந்த நன்னீர் வகை நண்டு இனங்கள் பொட்டமிடே (Potamidae) மற்றும் ஜெகார்சினுசிடே என்று இரண்டு குடும்பங்களாக பிரிக்கப்படுகின்றது. இருப்பினும், இவை இரண்டும் அடிவயிற்று வடிவம் மற்றும் அளவு ஆகியவற்றில் வேறுபட்டு காணப்படும். பொட்டாமிடே நண்டு வகை ஒரு பரந்த முக்கோண வடிவில் அடிவயிற்றைக் கொண்டுள்ளன. அதே நேரத்தில், ஜெகார்சினுசிடே நண்டு வகை அடிவயிறு பெரும்பாலும் “டி” வடிவத்தில் காணப்படும்.
கடந்த 2018 ஆம் ஆண்டில், பொட்டாமிடே குடும்பத்தைச் சேர்ந்த டெரடமான் கே-எம்பி என்ற நன்னீர் நண்டு, நீரோடைகள் மற்றும் வறண்ட பகுதிகளில் வசிப்பதை மித்ரா கண்டுபிடித்தார். இந்த வகை நண்டுகள் தண்ணீரில் இருந்து ஆக்ஸிஜனை எடுத்து கொள்கின்றன. ஆனால் உணவு, இனப்பெருக்கம் மற்றும் பிற நோக்கங்களுக்கு, அவைகளுக்கு தண்ணீர் தேவையில்லை என்பதால் அவைகள் தண்ணீரை சார்ந்து வாழ்வதில்லை. எனவே, தண்ணீருக்கு அருகிலுள்ள நிலத்தில் சுற்றித் திரிவது சாத்தியமாகிறது என்று மித்ரா விளக்கமளித்தார்.
நம்தபா இந்தியாவின் நான்காவது பெரிய பல்லுயிர் பூங்காவாகும். மேலும், இது புலிகள், சிறுத்தைகள் மற்றும் பனி சிறுத்தைகள், போன்ற வன விலங்குகளை வளர்க்கும் சரணாலயமாகவும் திகழ்கிறது.
இந்தியாவில் மொத்தம் 125 நன்னீர் வகை நண்டு இனங்கள் உள்ளன. அவற்றில் வடகிழக்கு பகுதியில் 37, அருணாச்சல பிரதேசத்தில் 15, அசாம் பகுதியில் 21 காணப்படுகின்றன.
இந்த கண்டுபிடிப்பு குறித்து 2020 செப்டம்பரில், பிரபல க்ரஸ்டேசியானா (Crustaceana journal) என்ற பத்திரிகையில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.