உலகில் மனிதர்கள் வாழ, பல உயிரினங்களின் உதவியும் தேவைப்படுகிறது. அதில் பசுக்கள் பால் தந்து மனிதர்களுக்கு உதவுகிறது. கோழி முட்டையிட்டு மனிதர்களுக்கு உணவாகிறது. அது போன்று தான் குதிரைகள் மனிதனுக்கு ஒரு வகையில் உதவியாக இருக்கின்றன.
குதிரைகள் மனிதர்களுக்கு சவாரி செய்யவும், பொருட்களை சுமந்து செல்லவும் உதவுகின்றன. அரசர்கள் காலத்தில் குதிரைப்படை என்று தனி பிரிவே இருந்தது. அந்த அளவு குதிரைகள் மனித வாழ்வில் முக்கியப் பங்காக இருக்கின்றன.
குதிரையின் உறக்கம்
குதிரைகள் பெரும்பாலும் நின்று கொண்டு உறங்குகின்றன. நள்ளிரவில் மட்டும் படுத்துறங்கும் வழக்கம் கொண்டது. குதிரைகளின் வயது வாரியாக உறக்க நேரம் மாறுபடுகிறது. பிறந்து மூன்று மாதங்கள் வரை ஒரு நாளில் பாதி அளவு நேரம் குட்டி குதிரைகள் உறக்கத்திலேயே இருக்கின்றன.
வயது வந்த குதிரைகள் படுத்துறங்குவதை விட நின்று கொண்டு 3 மணி நேர அளவில் உறங்கும் வழக்கம் கொண்டிருக்கும். அது போல் வயது வந்த குதிரைகள் ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்வது அரிது தான். அவை நின்று கொண்டு உறங்குகையில், விழித்த உடன் விரைந்து செயல்படுகின்றன.
குதிரைகளின் உணவுப் பாதை வித்தியாசமானது. அது மனித உடல் அமைப்பை போன்றது அல்ல. குதிரைகள் வாந்தி எடுக்கவோ, வாய் வழியாக சுவாசிக்கவோ முடியாது.
குதிரையின் வாயில் நாள் ஒன்றுக்கு 40 லிட்டர் அளவு உமிழ்நீர் சுரக்கிறது. இது உணவை எளிதில் மென்று விழுங்க செய்கிறது. அத்துடன், உணவை திரும்ப வாயில் கொண்டு வந்து மெல்லவும் குதிரைகளால் இயலும்.
குதிரைகள், தாவர வகைகளையே அதிகம் உண்ணுகின்றன. அதன் பற்களும் தாவரங்களை உண்ணும் அளவே செறிவுடன் இருக்கும்.
குதிரையின் பற்கள்
ஆண் குதிரைகளின் வாயில் 40 பற்களும், பெண் குதிரைகளின் வாயில் 36 பற்களும் உள்ளது. சில குதிரைகளுக்கு ஓநாய் பற்களும் காணப்படுகிறது. குதிரையின் மேல் தாடை கீழ் தாடையை விட அகலமாக இருக்கும்.
குதிரைகளின் வயதை அதன் பற்களை கொண்டு கணக்கிட முடியும். சில குதிரைகள் பற்களின் வயதை விட அதிக காலம் உயிர் வாழும்.

குதிரை ஆயுட் காலம்
நல்ல கவனிப்புடன் வளர்க்கப்படும் குதிரைகள் 30 வயது வரை வாழ்கின்றன. மற்ற குதிரைகள் பெருகுடல் பிரச்சனை, நோய் போன்ற காரணங்களால் விரைவில் இறந்துவிடுகின்றன.
குதிரைகள் பிறந்து சில மணி நேரத்தில் நடக்கத் துவங்கும். அத்துடன், தாயை பார்த்து எளிதில் புற்களை உண்ணவும் அவை கற்றுக் கொள்கின்றன.
மந்தை
குதிரைகள் மந்தையான வாழ்க்கை முறை கொண்டுள்ளது. காடுகளில் உள்ள குதிரைகள் எப்போதும் மந்தையாக சுற்றித்திரிவதை நீங்கள் பார்த்திருக்கலாம். அதேபோல் வீட்டில் வளர்க்கப்படும் குதிரைகளுக்கு துணையுடன் இருந்தால், அது இன்னும் ஆரோக்கியமாக வாழும். தனியாக இருக்கும் குதிரைகள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறது.
சாம்பல் நிற குதிரைகள்
வெள்ளை நிற குதிரைகள் பிறக்கையில் சாம்பல் நிறமாகவே இருக்கிறது. அது வளரும் போது, வெள்ளை நிறமாக மாறுகிறது. அதில், சில குதிரைகள் பிறக்கையில் கறுப்பு நிறம் போலவும் தோன்றும்.
குதிரையின் இதயத் துடிப்பு
சராசரியாக குதிரைகளுக்கு நிமிடத்திற்கு 32 முதல் 36 முறை இதயம் துடிக்கிறது. சில குதிரைகளுக்கு 24 முறையும் சில குதிரைகளுக்கு 40 முறையும் துடிக்கிறது. குதிரைகளின் ஓய்வு சுவாச விகிதம் குறைவாக இருக்கும்.
குதிரையின் பார்வை
குதிரைகள் மோனோகுலர் பார்வை கொண்டுள்ளது. இதன் மூலம் அவை வேட்டையாடுபவர்களை அடையாளம் காண்கின்றன. அவை ஆபத்தை விரைவாக உணர்ந்து தப்பிக்கின்றன.
குதிரைகள் தொலை தூரத்தில் உள்ள பொருட்களை எளிதில் கண்டறியும். ஆனால், ஒரு மீட்டருக்கு குறைவாக உள்ள தூரத்தில் இருக்கும் பொருட்களை அடையாளம் காண்பது அவற்றுக்கு மிக சிரமமாக இருக்கும்.
குதிரைகளின் கண்ணில், எளிதில் பாக்டீரியக்களால் பாதிப்பு எற்படுகிறது. அதை முறையாக பராமரிக்கவில்லை என்றால், குதிரைக்கு குருட்டுத் தன்மை ஏற்பட வாய்ப்புள்ளது.
சிறந்த உடல் அமைப்பு கொண்ட உயிரினமான குதிரைகள், இந்தியாவில் பெருமளவில் தற்போது பயன்பாட்டில் இல்லை என்றாலும், அமெரிக்கா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் இன்னும் அதிக அளவு பயன்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.