‘சிங்கங்கள் தான் காட்டுக்கு ராஜா’ என்று நாம் எப்போதும் கேட்டிருப்போம். ஆனால், சிங்கங்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைத் தான் நாம் இங்கே காணப்போகிறோம். சிங்கங்கள், நாம் பேச்சு வழக்கில் கூறும் குணங்களை விட மிகவும் அப்பாற்பட்டவை. அவற்றை பற்றிய சில உயிரியல் உண்மைகளை பார்க்கலாம்.
“சிங்கம்னா சிங்கிளாகத்தான் வரும்” இது திரைப்படத்தில் வரும் வசனம். அது வெறும் வசனம் என்றாலும், பலரும் அதை உண்மை என்று நம்பி அடிக்கடி இந்த வசனத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், உண்மையில், சிங்கங்கள் கூட்டமாகவே வாழ்கின்றன. அவற்றின் குழுக்களில், 15 முதல் 40 சிங்கங்கள் வரை இருக்கும். இதில் குட்டிகளும், பெண்சிங்கங்களும் தான் அதிகம். இவை அனைத்தையும் தலைமை தாங்க ஒரு ஆண் சிங்கம் மட்டுமே இருக்கும். வேட்டையாடும் திறனுடைய ஆண் சிங்கங்கள் குழுவில் இருந்து விரட்டி அடிக்கப்படும்.

ஆண் சிங்கம்
குட்டிகளாக இருக்கும் போது ஆண் சிங்கம் விரட்டியடிக்கப்படுகிறது. அந்த சிங்கங்கள் தனக்கான ஆட்சியைப் பிடிக்க வேண்டும். எனவே அவை மற்ற சிங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் எல்லையைக் கைப்பற்ற முயற்சிக்கும். அதில், இரண்டு ஆண் சிங்கங்களுக்கு இடையே சண்டை ஏற்படும்.
இதில், ஏதேனும் ஒரு சிங்கம் மட்டுமே உயிருடன் இருக்கும். மற்றொன்று கொல்லப்படும். இவ்வாறு கைப்பற்றி தனது எல்லையைச் சிங்கங்கள் நகத்தால் குறிக்கின்றன. ஆண் சிங்கங்களை நம்பியே அந்த கூட்டத்தில் பல பெண் சிங்கங்களும் இருக்கும்.
வேட்டையாடும் பெண் சிங்கங்கள்
சிங்கங்களில் வேட்டையாடுபவை பெண் சிங்கங்களே. ஆண் சிங்கங்கள் அவற்றைப் பாதுகாக்கும் பணிகளையே செய்கின்றன. 85 முதல் 90 சதவீதம் பெண் சிங்கங்களே வேட்டையாடுகின்றன. பெண் சிங்கங்களால் வேட்டையாடப்படும் உணவை அந்த குழுவில் உள்ள தலைமை தாங்கும் ஆண் சிங்கம் முதலில் உண்ணும். அதன் பின் மற்ற சிங்கங்கள் உண்ணுகின்றன. ஆண் சிங்கம் தனது எல்லையைப் பாதுகாப்பது, தனது குழுவில் உள்ள மற்ற சிங்கங்களைப் பாதுகாப்பது போன்ற பணிகளை மட்டும் செய்கிறது.
தினமும், தண்ணீர் அருந்துவதில்லை
சிங்கங்கள், தினமும் தண்ணீர் அருந்துவதில்லை. அவற்றுக்குத் தண்ணீர் அருந்த வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால், தினமும் உணவு உண்ண வேண்டும். வயது வந்த பெண் சிங்கம், நாள் ஒன்றுக்குச் சராசரியாக 4 கிலோ கிராம் அளவு உணவை உட்கொள்கிறது. ஒரு ஆண் சிங்கம், நாள் ஒன்றுக்குச் சராசரியாக 7 கிலோ உணவு உட்கொள்ளும். வரிக்குதிரை, எருமை போன்ற தாவரங்களை உண்ணும் பெரிய விலங்குகளையே சிங்கங்கள் இரையாக்குகின்றன. சில நேரங்களில் சிறுத்தை, சிறுத்தைப்புலி போன்றவை கூட சிங்கங்களுக்கு இரையாகி விடுகின்றன.

வேட்டையாடுவதில் சிறந்தவை
சிங்கங்களின், பார்வை மனிதனை விட ஆறுமடங்கு சிறந்ததாக இருக்கிறது. எனவே, அவை இரவிலும் வேட்டையாடுகின்றன. அதேபோல், சிங்கத்தின் நகங்கள் ஒன்றரை அங்குலம் வரை நீளமாக இருக்கும். சிங்கங்கள் ஒரு மணி நேரத்தில் 50 மைல் தூரத்தைக் கடக்குமளவு ஓடக்கூடியவை. சிங்கத்தால் 36 அடி நீளம் அளவில் குதிக்க முடியும். எனவே சிங்கம் வேட்டையாடுவதில் சிறந்ததாக இருக்கிறது.
காடுகளில் வாழுவதில்லை
பொதுவாகச் சிங்கங்கள் அடர்ந்த காடுகளில் வாழ்கின்றன என்று நாம் கேட்டிருப்போம். உண்மையில் சிங்கங்கள் அடர்ந்த காடுகளில் வாழுவதில்லை. அவை, நிலப்பரப்பிலேயே, புல்வெளிகள் அதிகம் உள்ள பகுதிகளிலேயே அதிகம் வாழ்கின்றன. அடர்ந்த காடுகளில் புலிகள் தான் வாழ்கின்றன.
சிங்கங்களின் தகவல் தொடர்பு
சிங்கத்தின் கர்ஜனை 5 மைல் தொலைவு வரை கேட்க முடியும். இது மற்ற விலங்குகளிடம் இருந்து சிங்கத்தைத் தனித்துவமாக அடையாளப்படுத்துகிறது. சிங்கம் கர்ஜிப்பதன் மூலம் மற்ற சிங்கங்களிடம் தொடர்பு கொள்கிறது.
அதேபோல் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த சிங்கங்கள், வாசனை மூலம் அடையாளம் காண்கின்றன. அதற்கு அடையாளமாகத் தலையில் ஒன்றுக்கொன்று நாக்கால் தடவிக்கொள்ளும்.

சிங்கங்களின் பாலியல் உறவு
சிங்கம் அதன் சகோதரி, தாய், மகளுடன் உறவு கொள்வதில்லை. அவை மனைவி என்று ஏற்றுக்கொள்ளும் சிங்கங்களுடன் மட்டுமே உறவு கொள்கின்றன. தனது இரத்த உறவு என்பதை வாசனை மூலம் சிங்கங்கள் கண்டறிந்துவிடுகின்றன.
சிங்கக் குட்டிகள்
சிங்கங்கள் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை குட்டிகளை ஈன்றெடுக்கின்றன. அவை நான்கு மாதங்கள் கருவைச் சுமக்கும். குட்டியை ஈன்றெடுக்கும் முன் தண்ணீருக்கு அருகில் பாதுகாப்பான இடங்களைப் பெண் சிங்கங்கள் தேர்ந்தெடுக்கின்றன. ஒரு பிரசவத்தில் இரண்டிலிருந்து ஐந்து குட்டிகள் வரை பெண் சிங்கங்கள் ஈன்றெடுக்கின்றன.
குட்டிகள் 6 நாட்களுக்குப் பின் தான் கண்விழிக்கும். மேலும், அவற்றுக்கு 1 ஆண்டுக்குப் பின்னரே பற்கள் முளைக்கின்றன. எனவே அத்தனை நாட்களும், அவை தாயின் அரவணைப்பிலேயே இருக்கும். குட்டிகளை வளர்ப்பதில், ஆண் சிங்கங்கள் பொறுப்பேற்பதில்லை. ஆனால், மற்ற விலங்குகளிடம் இருந்து குட்டிகளைப் பாதுகாப்பதில் ஆண் சிங்கங்களின் பங்கு உள்ளது.
சிங்கங்களின் ஆயுட்காலம்
சிங்கங்கள் 12 ஆண்டுகள் முதல் 16 ஆண்டுகள் வரை வாழக்கூடியவை.